திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் எந்தெந்த வகையில் தள்ளுபடி செய்யப்படுமோ அந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டு புதிய சுழல்நிதி வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம் தணக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

தணக்கன்குளம் ஊராட்சியில் ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழுவிவரம் வருமாறு:

கோவிலுக்குள் பக்தன் எப்படி ஒரு பரவசத்தோடு வருவானோ அதேபோல் இந்த தணக்கன்குளம் கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன். மகாத்மா காந்தி அவர்கள் ‘கிராமம் தான் கோவில்’ என்று சொல்வார். அப்படிப்பட்ட கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன். ‘துப்பாக்கியிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்று சர்வாதிகாரிகள் அத்துனைபேரும் சொல்வார்கள். அதுபோல் இன்றைக்கு அரசியல் முறை என்பது ஒரு ஜனநாயக தேர்தல். ஜனநாயகம் என்று சொன்னால் அதில் ஜனம் என்று ஒன்று உள்ளது. அதில் ஜனம் என்பது மக்கள். ஆகவே மக்களால் உருவாக்கப்படக் கூடியதுதான் ஜனநாயகம். எனவே, ஊராட்சி சபை என்பது ஒரு அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடியது. எனவே, கிராமங்களில் இருந்து தான் அரசியல் பிறந்திருக்கிறது என்பதை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பார்க்க முடிகின்றது. ஆகவே நீங்கள் இல்லாமல் அரசியலே கிடையாது, நீங்கள் இல்லாமல் உள்ளாட்சி பிரதிநிதிகளே கிடையாது. நீங்கள் இல்லாமல் எம்.எல்.ஏ., எம்.பி., க்களே கிடையாது.

தமிழகத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 12,617. அங்கெல்லாம் நம்முடைய கட்சிகளின் நிர்வாகிகள் சென்று ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதெல்லாம் ஏதோ தி.மு.க புதிதாய் நடத்துகிறது என நினைத்து விடக்கூடாது. தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினோம். உள்ளாட்சிகளில் மக்கள் குறைகளை போக்க பிரதிநிதிகள் இருந்தார்கள். அதனால் அப்போது இந்தக் கூட்டங்களை நடத்தி உங்கள் குறைகளை கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால், இப்போது அப்படி இல்லை. இந்த அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால் இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகள் உருக்குலைந்து போயிருக்கிறது.

இன்றைக்கு உங்களுக்கு பல பிரச்னைகள் இருக்கிறது. சொந்தப் பிரச்னைகளை விட பொதுப் பிரச்னைகள் தான் அதிகம். அதனை இங்கு சொல்ல வந்திருக்கின்றீர்கள். பொதுப் பிரச்சினைகள் என்னவென்றால், குடிதண்ணீர் பிரச்னை – சாலை வசதி – மருத்துவமனை பிரச்னை – சுகாதாரப் பிரச்னை, பள்ளிக் கட்டிடம் வேண்டும் போன்ற பல பிரச்னைகள் இருக்கிறது. இந்த கிராமத்தைப் பொறுத்தவரையில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுது செ.ராமச்சந்திரன் அவர்கள் தான் எம்.எல்.ஏவாக இருந்தார். நான் ஹோட்டலில் இருந்து கிளம்புகிறபோதே அவர் எனக்கு ஞாபகப்படுத்தினார். “அண்ணே! நீங்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது இங்கே பல திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொடுத்திருக்கிறோம்” என்றார். அப்பொழுது இந்த ஊராட்சிக்கு அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலமாக பல பணிகளைச் செய்து கொடுத்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு?

ஆனால், இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் எந்தத் திட்டங்களும் கிடையாது. இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல், யார் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்? மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் அது எல்லாம் எங்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும். இன்னும் சொல்லப்போனால் பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். நீங்களே சிரிக்கிறீர்கள். இருவரையும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். காரணம் அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர் நல்லவர் என்று சொன்னால் உங்களுக்கே சிரிப்பு வருகின்றது என்றால், அங்கே ஒரு அம்மா Fraud பையன் என்று சொல்கிறார் பாருங்கள். அந்த அளவிற்கு மோசமான ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பொய் சொல்லியே மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தார். நான் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வேன் இதைச் செய்வேன், வானத்தை கிழிப்பேன், வைகுண்டத்தை காட்டுவேன் என பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் மோடி.

இங்கே என்ன கதை என்றால், சசிகலாவை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவை ஏமாற்றி விட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு அதன் மூலம் ஆட்சிக்கு வந்தது யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமி அவர்கள். எனவே, ஏமாற்றுவதில் இருவரும் கில்லாடிகளாக பொய் சொல்வதை கைவந்த கலையாக வைத்திருக்கின்றார்கள். ஏற்கனவே, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து இருக்கக்கூடிய மோடி அவர்கள் இப்பொழுது மீண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி இருக்கின்றார். என்ன பொய் என்று கேட்டால், விவசாயிகளுடைய வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப் போகிறேன் என்று புதிதாக ஒரு கதை விட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு பெரிய பொய்யை சொல்லி இருக்கின்றார். விவசாயினுடைய கோவணத்தை அவிழ்த்து விட்டு ஓட விட்டவர்கள், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள். அது உங்களுக்கு தெரியும்.

இதே தி.மு.க ஆட்சியில் இருந்தபொழுது, என்னென்ன திட்டங்கள் வந்தது என்பது உங்களுக்குத் தெரியும். குறிப்பாக விவசாயிகளின் கடனை ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அது ஒரு கோடி, இரண்டு கோடி அல்ல. ஏழாயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தார். இதுதான் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி. சொன்னதை தான் செய்வார் – செய்வதைத் தான் சொல்வார். ஆனால், இன்றைக்கு விவசாயிகள் என்னென்ன கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று இரவில் இருந்து போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். நீங்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அவர் மேற்கு வங்கத்தின் முதல்வர் மற்றும் இரும்புப் பெண்மணி என்று பெயர் பெற்றவர். நானும் அவர்கள் 15 நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாட்டிற்கு சென்றுவிட்டுதான் வந்தேன். அவ்வளவு செல்வாக்குள்ள ஒரு முதலமைச்சர் அவர். அங்கு பி.ஜே.பி உள்ளே நுழைய முடியாது, அதனால் மோடிக்கு ஆத்திரம் வந்து அந்த அம்மையாரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பல அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கின்றார். நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ள காரணத்தினால் அதற்காக தர்ணா போராட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் துவங்கியிருக்கிறார். அந்த மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் சென்று விவசாயிகளுக்காக அதைச் செய்யப் போகின்றேன், இதைச் செய்யப் போகின்றேன் என்று கதை விட்டு இருக்கின்றார். இன்னொன்றும் சொல்லி இருக்கின்றார், விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்தால் அதில் எந்த பயனும் கிடையாது, பலனும் கிடையாது, நன்மையும் கிடையாது என்று பிரதமர் மோடி அதையும் சொல்லி இருக்கின்றார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதே தவறு என்ற கருத்தைச் சொல்லி இருக்கின்றார்.

ஆனால், விவசாயிகள் வாங்கி இருக்கக்கூடிய கடன் எவ்வளவு கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதிகபட்சம் 10,000/- ரூபாய் அல்லது 20,000/- ரூபாய், 50,000/- வாங்கியிருப்பார்கள். அதிகபட்சம் 1,00,000/- ரூபாய் வாங்கி இருப்பார்கள். அதற்குமேல் எந்தக் கடனும் விவசாயிகள் வாங்கி இருக்க வாய்ப்பே கிடையாது. அதை மோடி தள்ளுபடி செய்ய மாட்டார். ஆனால், கோடி கோடியாகக் கொள்ளை அடித்து பெரிய பணக்காரர்கள், பெரிய பெரிய மிராசுதாரர்கள், பெரிய கோடீஸ்வரர்கள் வங்கியில் வாங்கியிருக்கும் கடன்கள் 1000 கோடி, 2000 கோடி, 3000 கோடி 15,000 கோடி அதையெல்லாம் தள்ளுபடி செய்து இருக்கின்றார். எனவே, பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் கடன்களை தள்ளுபடி செய்கின்றார் மோடி. ஆனால் விவசாயிகள் வாங்கி இருக்கக்கூடிய 10,000/- ரூபாய் 20,000/- ரூபாய், 50,000/- ரூபாய் என்று வாங்கி இருக்கக்கூடிய கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மோடிக்கு மனது வரவில்லை. மோடி பட்ஜெட்டில் ஒரு பயங்கரமான காமெடி பண்ணியிருக்கிறார் அது என்னவென்று கேட்டீர்களென்றால், விவசாயிகளுக்கு 6,000/- ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அறிவிக்கப்பட்டிருக்கும் 6,000 ரூபாயை மொத்தமாக கொடுக்கமாட்டார். 3 தவணையாக 2000 – 2000 – 2000 என்று கொடுப்போம் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கின்றார். விவசாயிகளுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய உரத்தினுடைய விலை ஆறு மாதத்தில் 20% விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே 6,000 ரூபாய் கொடுப்பதினால் அந்தப் பிரச்னை தீர்ந்து விடப் போகிறதா என்று கேட்டால் விவசாயிகளுடைய பிரச்னை நிச்சயம் தீரப்போவது இல்லை, அது உண்மை. விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறது என்று சொன்னால், ஜி.எஸ்.டி வரியில் இருந்து உரத்திற்கு, பூச்சி மருந்திற்கு அந்த வரிவிலக்கை நீக்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு அவர்கள் செய்யக்கூடிய புண்ணியமாக இருக்கும். உரத்திற்கு 5% வரி, பூச்சி மருந்திற்கு 10% வரி. வரியைப் போட்டு விட்டு பணத்தையும் பறித்துக்கொண்டு அதிலிருந்து திருப்பிக் கொடுக்கின்றார்கள். இது சலுகையா? இது சலுகையல்ல திருட்டு – திருட்டுத்தனம். இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மோடி ஒரு பம்மாத்து வேலை செய்யத் துவங்கியிருக்கின்றார். அவரே சொல்லி இருக்கின்றார் இந்த பட்ஜெட் என்பது ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப் பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள். அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். ஆகவே, நாடே இன்றைக்கு ஒரு சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.

மத்தியில் அப்படி ஒரு ஆட்சி. மாநிலத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஊழல் செய்தது மட்டுமல்ல, கரப்சன் – கலெக்சன் – கமிஷன் மட்டுமல்ல, லஞ்சம் மட்டுமல்ல, எந்த திட்டமும் செயல்படுத்தாதது மட்டுமல்ல, கொள்ளையடிப்பது மட்டுமல்ல, கொடநாட்டில் கொலை செய்திருக்கக்கூடிய ஆட்சியும் இந்த ஆட்சிதான். 5 கொலைகள், எனவே 5 கொலை எடப்பாடி என்று இப்பொழுது அவருக்கு பெயர் வந்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டு இருக்கின்றது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் உங்கள் எல்லோரையும் தேடி வந்திருக்கிறோம். நாங்கள் தேடிவந்து இருக்கின்றோம் என்று சொல்வதை விட, இந்த இரு கட்சிகளையும் அப்புறப்படுத்த நாங்கள் தயார் என்று நீங்கள் எங்களைத் தேடி வந்து இருக்கின்றீர்கள், அதுதான் உண்மை. இங்கு கூடியிருக்கும் பெண்கள் இவ்வளவு அமைதியாக கட்டுப்பாட்டோடு இருப்பதைப் பார்த்தால் நிச்சயமாக தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமையப்போவதற்கு நாங்கள் தயார் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய நிலையை நாங்கள் பார்க்கின்றோம். அதற்கான நம்பிக்கையைத்தான் இங்கு நாங்கள் பார்க்கிறோம். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தான் நாங்கள் பணியாற்றி இருக்கின்றோம். பணியாற்றக் காத்திருக்கின்றோம். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் பணியாற்றி இருக்கின்றோம். ஆட்சியில் இல்லாத இந்த நேரத்திலும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, உங்களுடைய குறைகளை எங்களிடம் சொல்லுங்கள், அதனைக் கேட்டு இங்கிருக்கின்ற கழக நிர்வாகிகள் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர், தாசில்தார் ஆகியோரை தொடர்பு கொண்டு அதனை எல்லாம் தீர்த்து வைக்க நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் செய்யவில்லை என்றால், விரைவில் தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் வந்ததற்குப் பிறகு அதனை நாங்கள் நிச்சயம் செய்து தருவோம்.

நன்றி!

(பின்னர், ஸ்டாலினிடம் அங்கு கூடியிருந்த மக்கள் தங்களுடைய பிரச்னைகளை தெரிவித்தனர்.)

பின்னர், அங்கு ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:

மீண்டும் உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை, என்னுடைய வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். எதற்காக நாம் வந்திருக்கின்றோம், இதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்று துவக்கத்தில் நான் சொன்னேன். அதை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டு 30 பேருக்கும் மேல் பேசியிருக்கின்றீர்கள். விட்டால் இன்னும் 50 பேருக்கும் மேல் பேசியிருப்பீர்கள். நானும் நிறைய ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். இதுபோல அதிகம் பெண்கள் வந்தக் கூட்டத்தை நான் பார்க்கவில்லை. இதுதான் முதல் முறை. பலர், மனுக்களோடு வந்து இருக்கிறீர்கள், சிலர் தங்களுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென ஆவலோடு வந்து இருக்கிறீர்கள்.

இதை முடித்ததும் ஒரு அரைமணி நேரம் இங்கேயே அமர்ந்து, மனுக்களை வாங்கிக்கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த பின்புதான் நான் செல்வேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பலர் தங்களுடைய பிரச்னைகளை என்னிடத்திலே சொன்னீர்கள். சொந்தப் பிரச்னைகள் அதிகம் இல்லை. அனைத்தும் உள்ளூர் பிரச்னைதான். பேருந்து வசதி வேண்டும் – ரேஷன் கடை பிரச்னை – குடிநீர் வசதி இல்லாதது – நான்கு வழி சாலை பிரச்னை- 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் – சுய உதவி குழுக்கள் பிரச்னை – கல்விக் கடன் தள்ளுபடி – சாக்கடை பிரச்னை – நெடுஞ்சாலை விபத்து ஏற்படாமல் இருக்க பாலம் கட்டித் தரவேண்டும் என்றெல்லாம் உங்களுடைய பிரச்னைகளை சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றையும் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கெல்லாம் ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி வேண்டாம். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் இந்த பிரச்னைகள் எதுவுமே இருக்காது. அதனால் தான், நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். உள்ளாட்சிப் பிரதிநிதிளை தேர்ந்தெடுத்து விட்டாலே ஒரு 60% வேலை முடிவடைந்து விடும். கவர்மெண்ட் தலையிடுவது 5 அல்லது 10% தான். கேஸ் மானியம் பற்றிச் சொன்னீர்கள், அதெல்லாம் மத்திய அரசு – மாநில அரசு சார்ந்தவை.

மகளிர் சுய உதவிக்குழுக்களை பற்றியெல்லாம் இங்கே சொன்னீர்கள். நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். இன்றைக்கு அது அனாதையாக போய்விட்டது. இன்னும் சொல்கிறேன், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எப்படி உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம் என்று சொன்னோமோ, அதேபோல் சுய உதவிக் குழுக்களை சீர்படுத்தி நீங்கள் வாங்கி இருக்கக்கூடிய கடனை எந்தெந்த வகையில் தள்ளுபடி செய்ய வேண்டுமோ அதை தள்ளுபடி செய்து, மீண்டும் புதிய சுழல் நிதியை உங்களுக்கு வழங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்தித் தருவோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோல், கல்விக்கடன் பற்றிச் சொன்னீர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்விக்கடனை நாங்கள் ரத்து செய்து தருவோம் என தேர்தல் அறிக்கையிலேயே வாக்குறுதி கொடுத்தோம். ஆனால், நாம் வெற்றிபெறவில்லை. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் அதனைச் செய்திருக்க வேண்டும், ஆனால் அதனைச் செய்யவில்லை. மீண்டும் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அதனைச் சொல்லப் போகிறோம். திராவிட முன்னேற்றக் கழக தயவு இல்லாமல் யாரும் மத்தியிலே ஆட்சி நடத்த முடியாது. ஆகவே, விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது. அதோடு சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது. எங்களுக்கு எல்லாம் என்ன உணர்வு என்றால், ஏன் எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வு என்ன என்று கேட்டீர்கள் என்றால், நாடாளுமன்றத் தேர்தல், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றோடு சேர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் நாடு நன்றாக இருக்கும் என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது. அப்படி வந்தால், எடப்பாடி அரசையும் ஒழித்து விடலாம், மோடி அரசையும் வீழ்த்தி விடலாம்.

நம்முடைய மாநிலத்தில் நடக்கக்கூடிய ஆட்சி ஒரு விபத்தில் நடக்கக்கூடிய ஆட்சி. என்ன விபத்து என்றால், ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று நினைத்து ஓட்டுப்போட்டார்கள் தமிழக மக்கள். ஆனால், ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து மறைந்துவிட்டார், எனவே, அவர் மறைந்த காரணத்தினால், ஓ.பி.எஸ் அவர்கள் முதலமைச்சராக சென்று அமர்ந்தார். அவரை தூக்கி விட்டு சசிகலா முதலமைச்சராக முயற்சித்தார். அந்த அம்மையார் ஜெயிலுக்கு சென்ற காரணத்தினால் எடப்பாடி அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டது. ஜெயலலிதா அவர்கள் இறந்த காரணத்தினால் இன்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர். ஆனால், யாரால் முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறார் என்றால், சசிகலா அவர்களால். ஆனால், அந்த சசிகலாவிற்கு துரோகம் செய்து இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவை தெய்வமாக நினைத்துகொண்டு இருக்கின்றார்கள் அவர்கள், ஜெயலலிதாவால் தான் பதவியில் இருக்கிறார்கள் அவர்கள். ஜெயலலிதா அவர்களால் தான் இன்று கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஜெயலலிதா அவர்கள் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவர் மட்டுமல்லாமல் அனைவரும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருடைய மரணமே இன்றைக்கு மர்ம மரணமாக இருக்கிறது. ஒரு நாட்டின் முதலமைச்சரின் மரணமே இப்படி என்றால், சாதாரண மனிதனின் நிலை என்னவென்று சிந்துத்துப் பாருங்கள்.

ஊழல் செய்து ஜெயிலுக்குச் சென்ற முதலமைச்சரை பார்த்திருக்கின்றோம். உதாரணம் ஜெயலலிதா. ஆனால், அனைத்தும் செய்து முடித்து விட்டு இப்பொழுது கொலை செய்து ஜெயிலுக்குச் செல்லவிருக்கின்ற முதலமைச்சரை தமிழ்நாட்டில் தான் விரைவில் பார்க்கப் போகின்றோம். அதுதான் நடக்கப் போகின்றது. விரைவில், அப்படி ஒரு சூழ்நிலை வரப்போகின்றது. எனவே, இந்த நிலையில்தான் மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சி நடக்கின்றது. மத்தியில் மோடி ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டால் நிச்சயமாக உறுதியாக சொல்கின்றேன். நாட்டிற்கும், தமிழகத்திற்கும் விடிவு காலம் பிறக்கும்.

அதனால்தான் இந்த ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு ஒரு முழக்கத்தை வைத்திருக்கின்றோம். ‘மக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களுடைய மனங்களை எல்லாம் வெல்வோம்’ என்ற அந்த உறுதியோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றோம். எனவே, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இந்த இரண்டு கட்சிகளுக்கும். ஆரம்பப் புள்ளியை துவங்கி வைக்கவேண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி தமிழகத்தில் உருவாகுவதற்கு, நீங்கள் துணை நிற்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொண்டு உங்களின் அன்பான உற்சாகமான இந்த வரவேற்புக்கு நன்றி – நன்றி – நன்றி என்று கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன். வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.