முக்கிய செய்திகள்

ஆகா… ஓகோ… பேஷ்… பேஷ்… அடடே… போராட்டம்…! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

Aga… Ogo… Besh… besh… Adade Porattam! : Chemparithi

_____________________________________________________

 

AIADMKprotநெல்லையில் மாநகராட்சியின் மேயர் (பெண்) தரைப்பாலத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்துகிறார். அவருடன் சில பெண்களும் கூடவே சேர்ந்து கொந்தளிக்கிறார்கள்.

 

சென்னையில் அதிமுகவைச் சேர்ந்த இருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராடுகிறார்கள். மயக்கமடைந்த நிலையில் அவர் கீழே இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக காவல்துறையினர் பவ்வியமாக விளக்கமளிக்கின்றனர்.

 

இப்படியாக, கோவையில், சேலத்தில், திருச்சியில் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தங்கள் தலைமையை ஆபாசமாகப் பேசியதாகக் கூறி, அதைவிட ஆபாசமாகப் பேசியும், திட்டியும், கூச்சலிட்டும், இளங்கோவனின் படத்தை செருப்பு, துடைப்பங்களால் அடித்தும் “நயத்தக்க நாகரிகமான” முறையில் அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

 

ஏறத்தாழ மூன்று நாட்களாக அதிமுகவினரின் இந்த “அற”ப் போராட்டம் தொடர்வதாக ஊடகங்கள் தலைப்புச் செய்தியாகச் சொல்லிச் சொல்லிக் களைக்கின்றன. “அம்மா”வின் கடைக்கண் பார்வையை ஈர்ப்பதற்கும், அவரது கருணையைப் பெறுவதற்கும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை “நடுநிலை ஊடக நாயகர்கள்” தவறவிட்டு விடுவார்களா என்ன?

 

அது இருக்கட்டும். அதிமுகவினரின் இத்தகைய சத்தியாவேசத்துக்கு என்னதான் அடிப்படை?

 

பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்தது பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொச்சையாக சொல்லிவிட்டார் என்பதுதான். அவரோ நான் அரசியல் ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்தேன், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்கிறார். அதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் “உங்க பொண்டாட்டிய இப்புடிப் பேசுனா ஒத்துக்குவீங்களா…” என்கிற ரீதியில் இளங்கோவனைப் பார்த்துக் கேட்க, இளங்கோவனும் அதே கேள்வியை செய்தியாளரைப் பார்த்துக் கேட்க பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் காட்சியாக இருந்தது. ஊடக நாகரிகமும், அரசியல் நாகரிகமும் கைகோர்த்து நடனமாடிய காட்சி அது. ஆனால், அரசியல் தலைவர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது, பத்திரிகையாளர் ஒருவர் இப்படி நாலாந்தரமான மொழியில் கேள்வி எழுப்புவதுதான் ஊடக நாகரிகத்தின் பரிணாமமா என்று பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வி உண்மையான ஊடகவியலாளர்களை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. பத்திரிகையாளரின் “பண்பு” தான் அந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால், அரசியல் கட்சியின் தலைவரான இளங்கோவனுக்கு, இத்தகைய இழிவுகளைப் புறங்கை வீச்சில் தள்ளிவிட்டுச் செல்லும் பக்குவம் இத்தனை வயதிலும் வராமல் போனது ஏன் என்றும் புரியவில்லை.

 

சரி… இத்தனை “தர்மாவேசம்” மிக்க அந்தப் பத்திரிகையாளர் மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்னைக்காகவாவது ஜெயலலிதாவைப் பார்த்து இப்படிக் கேள்வி எழுப்பி இருப்பாரா? இலகுவாகச் சந்திக்க முடிகிறது என்பதாலேயே இத்தகைய கேள்விகளை சிலரிடம் மட்டும் கேட்பதுதான் ஊடக தர்மமா?

jaya-evks

இளங்கோவனின் பேச்சுக்காக இத்தனை கொந்தளிக்கும் அதிமுகவினர், நமது எம்.ஜி.ஆரில் அன்றாடம் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் அச்சில் ஏற்றத்தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து வெளிவரும் “கட்டு”ரைகளை மட்டும் ரசித்தும், ருசித்தும் படிக்கிறார்களே… மானமும், கௌரவமும் இவர்கள் தலைமைக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்கு அது இல்லையா?

 

அரசியலில் மூத்த தலைவர்கள் மீது கிஞ்சித்தும் மரியாதை இன்றி அதிமுகவினரும், அதன் தலைவர்களும் இழிவு படுத்திப் பேசியவற்றைப் பட்டியல் போட்டால் அது ஆண்டுக்கணக்கில் நீளுமே…!

 

இதெல்லாம் பரவாயில்லை… “யாகாவாராயினும் நாகாக்க” என்ற அறிவுரையை நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் சொல்லும் போதுதான் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

 

இளங்கோவனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதாவும் போராட்டம் நடத்தியது. அது ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்ட போராட்டமாகவே இருந்தது ஓர் ஆறுதலான நிகழ்வு எனலாம். நல்லவேளை அதிமுகவின் “அறப்போராட்ட” வழியை அவர்கள் கையில் எடுக்கவில்லை.

 

போராட்டங்கள் குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க, மதுவுக்கு எதிரான போராட்டத்தைத் திசை திருப்பவே அதிமுக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

 

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா அந்தத் தந்திரத்தைக் கூடவா கற்றுக்கொண்டிருக்க மாட்டார்.

 

மதுவிலக்கு போராட்டம் சூடுபிடித்துக் கொண்டிருந்த நிலையிலும் அது குறித்து எதுவும் கூறாமல் அமைதிகாத்த ஜெயலலிதாவின் மௌனத்தில் இருந்தே இவர்கள் அதனைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

 

சுதந்திரதின உரையில், மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை மறைமுகமாக ஏற்படுத்தி, அதிலும் ஓர் ஏமாற்றத்தைத் தந்து, இளங்கோவன் பேசி மூன்று நாட்கள் கழித்து அவரது பேச்சுக்கு எதிரான இந்தப் போராட்டங்களை முடுக்கிவிட்டு, மதுவிலக்குப் போராட்டத்தின் கூர்மையை மழுங்கடித்தாகி விட்டது.

 

மதுவிலக்குப் போராட்டத்தால், அரசியல், சமூகம் சார்ந்த மற்ற பிரச்னைகள் மறக்கடிக்கப்படுமே என்ற அச்சம் எழுந்திருந்த நிலையில், இப்போது மதுவிலக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டாகி விட்டது. ஊடகங்கள் முழுவதும் அதிமுகவின் “போர்ப்பரணி”யை வாய்வலிக்கப் பாடிக்கொண்டிருக்கின்றன.

 

இங்குதான் ஜெயலலிதா வெற்றியடைந்துள்ளார்.

 

ஒருவர் கதாநாயகன் ஆக வேண்டும் என்றால், அதற்கு ஒரு வில்லன் வேண்டும். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் கச்சிதமான வில்லனாக இளங்கோவன் கிடைத்து விட்டார். அப்புறமென்ன… அடி வெளுத்து வாங்க வேண்டியதுதானே…

 

அமைச்சர்கள், மேயர்கள், இப்படி ஆட்சி இயந்திரத்தை நடத்திச் செல்பவர்களே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். அடிக்கடி இவர்கள் சொல்லும் சட்டம் ஒழுங்கு ஓரமாக, கைகட்டி பவ்வியமாக நின்று வேடிக்கை பார்க்கிறது.

 

ஆக, ஜெயலலிதா தனது அரசியல் காயை கச்சிதமாக நகர்த்தி உள்ளார். ஊடகங்களில் முகம் தெரியப் போராடுபவர்களுக்கும், மூர்க்கத்தனமாகப் பேசுவோருக்கும் அடுத்த தேர்தலில் நிச்சயமாக அதிமுகவில் “சீட்” உண்டு. அம்மாவின் தயவும் உண்டு. ஆபாசப் பேச்சின் அளவைப் பொறுத்து வேண்டுமானால் முன்னுரிமை வேறுபடலாம்.

 

அதிமுகவினர் நடத்தும் போராட்டத்தின் அரசியல் உள்ளீடு என்பது இந்த அளவிலானதுதான். சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களது தலைமைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது, தாடி வளர்த்தும், பின்னர் அவர் விடுதலையான போது மொட்டையடித்தும் தங்களது “அரசியல்” விசுவாசத்தைக் காட்டிய வண்ணமயமான காட்சிகளை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

 

“இது என்ன மூடத்தனம்” என்று எந்த ஊடகமும் அப்போது கேள்வி எழுப்பவில்லை. “சோ கால்டு” அரசியல் விமர்சகர்களோ வேறு எந்தக் கிரகத்திலோ இவை நடப்பதைப் போல, வாளாவிருந்தார்கள்.

 

அதிமுகவில் மட்டும் இப்படி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவது ஏன் என்று தொண்ணூறுகளின் தொடக்கத்தில் (இப்போதெல்லாம் காலில் விழும் காட்சிகள் யாரையும் உறுத்துவதில்லை) பலரும் கேட்பதுண்டு. அதற்கு அவர்கள் தரப்பில் சொல்லப்பட்ட பதில் என்ன தெரியுமா? “பத்துத் தலைமுறை விழுந்து விழுந்து பாடுபட்டாலும் ஈட்ட முடியாத பெரும் செல்வம், எந்த உழைப்பும் இல்லாமல் எளிதில் கிடைக்கும் போது, கும்பிட்டு விழுவதில் என்ன கெட்டுப் போச்சு” என்பதுதான்.

 

கொள்கை இல்லாத அரசியல் கோலோச்சத் தொடங்கியது இப்படித்தான். அரசியலுக்குக் கொள்கையை விட விசுவாசமே அடிப்படைப் பண்பாக மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர் அதுவே அரசியல் “யாவார”த்தின் “முதலீடாகவும்” மாறியது. காலப் போக்கில் கொள்கை வழிப்பட்ட அரசியல் அருங்காட்சியகத்தின் காட்சிப் பொருளைப் போல அரிதினும், அரிதான ஒன்றாக தேயும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. திரைப்படங்களில் கூட நேர்மையாளர்கள் “காமெடியன்”களாகச் சித்தரிக்கப்படுவதன் சமூக உளவியல் அடிப்படை இதுதான்.

 

குண்டாயிசமும், அரசியலும் இரண்டறக் கலந்துவிட்ட சமூகத்தில் இப்படியான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

 

அரசியலகற்றம் செய்யப்பட்ட, தார்மீக நெறிகள் அனைத்தும் மரித்துப் போன, தத்துவார்த்த ரீதியான அறிவனைத்தும் மழுங்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அரசியல் வடிவம் எப்படி இருக்கும் என்பதற்கு, அதிமுகவினரின் “போராட்டம்” போன்ற தற்போதைய நிகழ்வுகளே பருப்பொருளான உதாரணங்களாகி நிற்கின்றன.

 

____________________________________________________________________________________________________________