முக்கிய செய்திகள்

ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயர வாய்ப்பு…

வீட்டு உபயோகப் பொருட்களான ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ரேடியல் டயர் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக இன்றுஉயர்த்தியுள்ளது.

நாட்டின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதைக்கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று நள்ளிவரவு முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்து வருவது, அன்னிய முதலீடு வெளியேறி வருவது உள்ளிட்ட பிரச்சினைகளை பற்றி ஆலோசிக்கக் கடந்த வாரம் பிரதமர் மோடியின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது

. அந்தக் கூட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஏறக்குறைய 19வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரியை வருவாய் துறை அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 89 ஆயிரம் கோடியாகும்.

10 கிலோவுக்கும் குறைவாக எடை இருக்கும் வீட்டில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கப்பட்ட நிலையில் அது 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏசி, பிரிட்ஜ் ஆகியவற்றுக்கு வரி 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், ரேடியல் டயர்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 15ச தவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

காலணிகளுக்கு வரி 25 சதவீதம், செயற்கை வைரங்களுக்கு வரி 5 சதவீதத்திலிருந்து 20சதவீதமாகவும், பட்டைதீட்டப்பட்ட வைரம் 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த உலோகங்கள் போன்றவற்றுக்கு வரி 15சதவீதம் முதல்20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இறக்குமதியாகும் ஸ்பீக்கர்களுக்கான வரி 15 சதவீதமாகவும், நகை செய்யும் சிறிய கருவிகளுக்கான வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குளியல் தொட்டி, சிங்க், வாஷ் பேஷின், சமையலறை பொருட்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,

அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிரங்க்,சூட்கேஸ், பிரீப்கேஸ், டிராவல் பேக் ஆகியவற்றுக்கு வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.