ஏர் இந்தியா தனியார் மயமாக்கியதில் ஊழல்? : நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி பரபரப்பு வாதம் …

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது
ஏர் இந்தியாவின் வருவாய் இழப்பை அரசால் ஈடுசெய்ய முடியாததால்தான் தனியாருக்கு விற்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இது பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறானது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜகவின் எம்.பி சுப்பிரமணியன் சாமி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் ஜோதி சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வருவாய் இழப்பை அரசால் ஈடுசெய்ய முடியாததால்தான் ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்பட்டதாக கூறினார். மேலும், தனியாருக்கு ஏர் இந்தியாவை விற்பனை செய்தது அரசின் கொள்கை முடிவுப்படி எடுக்கப்பட்ட முடிவு என்றும் வாதிட்டார்.
இதனையடுத்து வாதிட்ட சுப்பிரமணியன் சாமி, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெறுவதற்கான ஏல முறை தன்னிச்சையானது, ஊழல் நிறைந்ததாக உள்ளது. அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் பொது நலனுக்கு எதிரானது. டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

டாடா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏலம் முழுமையாக முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டது. மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிடும். இந்த தகவல்கள் பொதுவெளியில் உள்ளது. விமான நிறுவனத்தை நடத்துவது கடினமானது. அரசு எஞ்சிய தொகையை தருவதாக உறுதி அளித்துள்ளது. ஆனாலும், பதட்டமாக உள்ளது. என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கு தீர்ப்புக்காக ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் :கரோனா தடுப்பு கட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை.

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கு : ரயில்வே ஊழியரே பணத்தை திருடி நாடகம்..

Recent Posts