விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவு மாநில உரிமைகளை, தன்னாட்சியை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (@AAI_Official) ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை பொது-தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்த்துள்ளார். இதுகுறித்த தனது எதிர்ப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும்.
இது, விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும்; இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.