விமான நிலையங்களில் இருந்து டாக்ஸி மற்றும் ஆட்டோ இயக்க தமிழக அரசு அனுமதி…

விமான, ரயில் சேவை இயக்கப்படுவதை அடுத்து சென்னையில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

கரோனா ஊரடங்கு நான்காவது கட்டமாக மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இம்முறை ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தவிர குறைவான எண்ணிக்கையுடன் பயணிகளைக் கொண்டு இயக்க பேருந்து போக்குவரத்துக்கும், ஆட்டோ, டாக்ஸிகளை இயக்கவும் அரசு அனுமதி அளித்தது.

சென்னையில் ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் மற்றொரு தளர்வாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளோர் தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் மூலமும் அண்டை மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் தமிழகம் திரும்புகின்றனர்.

உள்நாட்டு விமானச் சேவை தொடங்கிய நிலையில், நாளை முதல் சர்வதேச விமானச் சேவையும் தொடங்குகிறது.

இவ்வாறு சென்னை திரும்பும் பயணிகளுக்கு வசதியாக சென்னையில் தடை செய்யப்பட்டிருந்த ஆட்டோ, டாக்ஸி இயக்கத்தில் சில மாறுதல்களைச் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மே 3-ம் தேதி அன்று 4-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் வேண்டுகோளின்படி ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்க சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி விமான நிலையம், ரயில் நிலையங்களில் ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மூலம் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.