அக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..

அதிகாலை 4 மணிக்கு எழுந்து சோம்பல் முறித்தபடி சமையல் வேலைகளைத் தொடங்கினாள் சித்ரா..

கணவர் அரசு பேருந்தில் டிரைவர்,  6 மணிக்கு வேலைக்கு செல்பவர் என்பதால் தினமும் 5 மணிக்குள் கணவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்து அனுப்பி விடுவாள்

வாளியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வாசலில் கோலம் போடச்  சென்றாள் அதற்குள்.பக்கத்துவிட்டு லட்சுமி இவளுக்கு முன்பே எழுந்து வாசல் தெளித்துக் கோலம் இட்டுக் கொண்டிருந்தாள்,

கோலமிட்டுக் கொண்டிருந்த லட்சுமி “ என்ன சித்ரா அக்கா திருவிழாவிற்கு  தங்கச்சி வர்றாங்கனு சொன்னீங்க எப்ப வராங்க” என்றாள்.

”காலையிலே வந்துருவாங்க லட்சுமி”  என்ற பதிலளித்து விட்டு வாசலில் நீரைத் தெளித்து கோலமிடத் தயாரானாள் சித்ரா

கோலம் போடுவதை அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியைப் பார்த்து“ என்னடி அப்படி பார்க்குறே” .என்றாள் சித்ரா.

“ அக்கா நீங்க நல்லா வரிசை புள்ளி வைச்சுக் கோலம் போடுறதைத்தான் பார்க்குறேன். எனக்கு இது மாதிரி போட ஆசையா இருக்கு, நான் அப்புறமா வரேன் கொஞ்சம் நோட்டுல போட்டுத்தாங்கக்கா” என்றாள்.

“சரி வா சும்மா இருக்கையில போட்டுத்தாரேன், இது  ஒன்னும் கம்பசூத்திரமில்ல ஈசியாப் போடலாம்” என்றாள்.

“சரிக்கா அப்புறமா வர்ரேன்” என்று கூறி வீட்டினுள் சென்றாள் லட்சுமி..  கால் வலியுடன் போட்ட கோலம் அழகாக வந்திருந்ததால் மகிழ்ச்சியா இருந்தது.

வசந்தி பிள்ளைகளுடன் வருவதை எண்ணிய படியே கோலம் போட்டதால் நல்லா வந்திருப்பதாக மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்

வசந்தி வருவதற்குள் இட்லி அவித்து சாம்பார் செய்ய வேண்டும், இட்லி சாம்பார் என்றால் எப்பவுமே அவளுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று எண்ணிய படியே இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லி அவிக்க ஆயத்தமானாள்.

இதற்கிடையில் இரண்டாவது மகள் கவிதா எழுந்து வந்து “ ரொம்ப நேரமா சித்தி போன் அடிக்குது போனை எடுக்காமல் என்னம்மா பன்றீங்க” எனக் கேட்டபடி போனை சித்ராவிடம் கொடுத்தாள்.

“போனை நீ எடுத்து பேச வேண்டியதுதானே.. சித்தி எங்க வந்துக்கிட்டிருக்கு கேட்க வேண்டியது தானே… ” என்றாள்.

”நீங்களே கேளுங்கம்மா” என்று கூறியபடி மீண்டும் துாங்கச் சென்று விட்டது.

போனை எடுத்து பேசும் போது. “அக்கா” என்றாள் வசந்தி, “எங்கடீ இருக்கே இன்னும் பஸ்சு வரலையா” என்றாள்.

“இல்லைக்கா நாங்க ராத்திரி கௌம்பலே அவங்களும் ஊருக்கு வரேன்னு சொன்னாங்க, காலையில இப்பத்தான் கார்ல கிளம்புரோம், 11 மணிக்கெல்லாம் வந்திருவோம் ” என்றாள்.

“ சரி பார்த்து பத்திரமா வாங்க” என்று போனை வைத்தாள்

காலை எழுந்ததிலிருந்து ஏதும் குடிக்காததாலே ஒரு டம்பளர் காஃபி குடிச்சா நல்லாயிருக்கும் எனத் தோன்றியது.

காஃபி போட்டுக் குடித்தாள். ஞாயிற்றுக்கிழமையென்பதால் உமாவும்,கவிதாவும் 8 மணிக்குத்தான் எழுவார்கள்.

நான் சின்னப்புள்ளையா இருக்கையிலே காலை  6-மணிக்கு  முன்னமே எங்க அப்பத்தா பொம்புளைப் புள்ளங்க காலையிலே துாங்கக் கூடாது என்று கூறி எழுப்பி விட்ருவாங்கா அப்போ கோவமா வரும்.

ஆனா.. மகள்கள் இரண்டு பேரும் லீவுனா இப்படித்தான்.

காஃபியைக் குடித்தபடி தங்கை வசந்தியின் சிறு வயது நினைவுகள் வந்து நிழலாடின.

எனக்கும் வசந்திக்கும் 13 வருடங்கள். வித்தியாசம், அவள் பிறந்த ஒரு வருடத்தில் நான் பெரிய மனுசியாகி விட்டேன்..

வசந்திக்கு 3 வயது இருக்கும் போதே அம்மா உடல் நிலை சரியில்லாமல் திடீரென இறந்து போனாங்க..

வசந்திக்கு அப்போ ஏதும் புரியலே என்னை கட்டிபிடிச்சே துாங்குவா..நான் செல்லமா வைச்சுக்கிட்டதாலே என்கிட்டே ஒட்டிக்கிட்டா.

கிராமத்திலே அப்பாவிற்கு வயல் வரப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. அம்மாவும் அப்படித்தான் இருந்தாங்க, நான் 8-ம் வகுப்பு வரையிலும் படிச்சேன்.

வசந்தி பொறந்தவுடன் படிப்பை நிறுத்திவிட்டு அவளைத் துாக்கி வளர்க்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது..

அப்பா.. ஏனோ மறுதாரம் செஞ்சக்கிறல இரண்டும் பொம்புளப்புள்ளைகளாக பொறந்ததாலே அவர் மறுத்திட்டார்.

18 வயசுலே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.

கல்யாணம் முடிந்த கையோடு அவர் வேலைக்கு தோதா பக்கத்திலே இருக்கிற ஊருக்கு குடி வந்தோம்.

வசந்தியை தனியா விட்டுட்டு வர முடியாமே எங்க வீட்டுகாரரிடம் கேட்டேன்.

”வசந்தி அம்மா இல்லாம எங்கிட்டே வளர்ந்த புள்ள, அவளை நம்ம கூட கூட்டிப் போவோமா” என்று சொன்னேன்.

அவர் சரியென்று அழைத்து வரச் சொன்னார். அன்றிலிருந்து இன்றுவரை தனது மூத்த மகள் போல் வசந்தியை  பார்த்துக் கொள்வார்.

அப்பா கிராமத்திலேயே இருந்து விட்டார், தற்போது வயதாகிவிட்டதால் விவசாயம் செய்வதில்லை இருந்தாலும் எங்களுடன் வர மறுத்து விட்டார்.

வசந்தி பல முறை சென்னைக்கு அழைத்தும் அவர் ஒரு தடவை கூட போனதில்லை எங்க வீட்டிற்கு வந்தாலும் இரண்டு நாளுக்கு மேல் தங்க மாட்டார். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கிளம்பிவிடுவார்.

எனக்கு உமாவும், கவிதாவும் அடுத்தது பிறந்தார்கள். வசந்தி இருவரையும் நன்றாக கவனித்துக் கொள்வாள். சித்தி,சித்தி.. என அவளையே ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

படிப்பில் எப்பவுமே வசந்தி கெட்டி.. நல்லாப் படிப்பா.. அவள் என்ன படிக்க ஆசைப்பட்டாலோ அதைப் படிக்க வைப்போம் என அடிக்கடி எங்க வீட்டுக்காரங்க சொல்லுவாங்க..

காலேஜ்  போய் படித்தா… அப்பப்ப அவளிடம் ” பார்த்து போ காதல் கீதல்னு வந்துராதே”..

“இப்ப பசங்க, புள்ளைக எல்லாம் இப்படித்தான் கெட்டுப் போகுதுக” என்பேன் சிரித்தபடியே அவள் “ அம்மா இல்லாத குறைய நீயும் மச்சானும் நிறைவேத்திருக்கீங்க, உங்களத் தலை குனிய வைக்க மாட்டேன் கவலைப்படாதே அக்கா” என்று கூறுவாள்.

அவள் கூறிய படியே நல்லா படித்து மேலும் படிக்க ஆசைப்பட்டாள் என் வீட்டுக்காரரும் படிக்க வைப்போம் என்றார்.

ஆனால், அப்பாவும் என் அத்தையும் அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றார்கள்.

அவள்  அழகா இருந்ததாலே பலர் பெண் கேட்டு வந்தார்கள். நாங்கள் மறுத்து விட்டோம். வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க மனசில்லே..

யாருக்கும் நாங்க புடி கொடுக்கல அவளுக்கும் படிக்கத்தான் ஆசை..

அப்பத்தான் சென்னையில துாரத்து சொந்தக்காரங்க இருக்கிறாங்க அவங்க பையன், நல்லபடிப்பு, நல்ல சம்பளம், அங்க சொந்த வீடு இருக்கு, வசதியா இருக்காங்க, கூட்டுக் குடும்பமாக இருப்பதாக கூறினார்கள்.

நான் வீட்டுக்காரரிடம் சொன்னேன் ஆனா அவங்க இந்த சம்பந்தம் நமக்கு ஒத்து வராது என்று கூறினார்…

சரி வசந்தி படிக்கட்டும் என்று நினைத்தேன், ஆனால் அவர்கள் என் விட்டுக்காருக்குத் தெரிந்தவரை வைத்துப் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தனர். நல்ல பெயருள்ள குடும்பம் என்பதால் அவரும் நல்ல மாப்பிள்ளை என்கிறார்கள் என்றார்.

வசந்தி கல்யாணம் இப்ப வேண்டாம் என மறுத்தாள். நான் தான் அவளை சமாதானம் பேசி  சம்மதிக்க வைத்தேன்.

மாப்பிள்ளை பையன் போட்டோவில் அழகாக இருந்தார் அவளும் சரியென்றாள்.

எங்க வீட்டுக்காரரும் சென்னையில் உள்ள நண்பரை விசாரிக்கச் சொன்னார். அவரும் நல்ல பையன் என்றார்கள். ஒரு வழியா நிச்சயதார்த்தம் முடிந்தது.

கல்யாணம் நாங்க இருக்கிற ஊரிலே நடந்தது. மிகப் பெரிய மண்டபம் பிடித்து சொந்த பந்தங்களுக்குச் சொல்லி நகை, பொருட்கள் சீர் என சிறப்பாகச் செய்தோம்.

மாப்பிள்ளையின் அம்மா,அப்பா, அக்கா, அண்ணன்,தங்கை என அனைவரும் நன்றாகப் பேசினார்கள். எனக்கு மனசெல்லாம் ஒரே சந்தோஷம்.

இரண்டு நாள்ல வசந்தியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பினார்கள்.

எங்களை அழைத்தார்கள்,நாங்கள் யாரும் செல்லவில்லை, வசந்தியை நல்லா பார்த்துக் கொள்வார்கள் என நினைத்தேன், அதனால் செல்லவில்லை.

வசந்தியும் சென்னை சென்று நல்லா இருப்பதாகச் சொன்னாள், மாப்பிள்ளை அவுக குடும்பத்தாரும் நல்ல பாசமாக இருப்பதாகச் சொன்னாள்.

இரண்டு மாதம் கழித்து போன் பேசியபோது “அக்கா உமாவையும், கவிதாவையும் பார்க்கணும் போல் இருக்குக்கா.. அடுத்த வாரம் வரேன்” என்றாள் ”சரி மாப்பிள்ளையும் கூட்டிவா” என்றேன்..

வசந்தி வந்தவுடன் குன்றக்குடி கோயிலுக்குக் கூட்டிப் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஒரு வாரத்தில் வசந்தி மட்டும் ஊருக்கு வந்தாள், மாப்பிள்ளை வரவில்லை. நான் கேட்கும் முன் என் வீட்டுக்காரார் “மாப்பிள்ளை வரலையாமா” என்று கேட்டார்.

”இல்லை மச்சான் அவுங்களுக்கு வேலையிருப்பதால் வரமுடியல என்ற ஏதார்த்தமாகச் சொன்னாள்”, அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

உமாவும்,கவிதாவும் ”சித்தி” என ஓடிவர அவர்களை அனைத்து அவர்களுடன் கதை பேச ஆரம்பித்து விட்டாள்..

கொஞ்ச நேரத்திலே அப்பாவும் வந்துட்டாங்க., அவுகளும் மாப்பிள்ளை வராதது குறித்து வருத்தமாக என்னிடம் பேசினாங்க..

வசந்தி கலகலப்பாகப் பேசினாள் அவளிடம் குடும்பம் பற்றி கேட்கவில்லை பக்கத்து வீட்டு லட்சுமி  அதிக நேரம் அவளிடம் அரையடித்தக் கொண்டிருந்தாள். இருவரும் பால்ய சினேகிகள்.

அன்றைய பொழுது அப்படியே கழிந்தது. வேலை முடித்து வீட்டுக்காரரும்  வந்து விட்டார். டிவி பார்த்தடியே கவிதாவும்,உமாவும் துாங்கினார்கள்.

வசந்தி டிவிவைப் பார்க்காமல் ஏதோ சிந்தனையில் முழ்கியிருந்தாள். “என்னடீ என்னாச்சு ஒரு மாதிரியா இருக்கிறாய்” என்றேன்.

“ஒன்றமில்லை அக்கா” எனக் கூறி “எனக்கு துாக்கம் வருதுக்கா” நான் துாங்குகிறேன். காலையில எழுப்பி விடு என்றாள்.

”சீக்கீரம் துாங்கு” எனக் கூறி விட்டு பாத்திரங்களைத் துலக்கி விட்டு படுக்கைக்கு வந்தேன். பெட்டுல வசந்தியைக் கட்டிப்பிடித்த படியே இருவரும் துாங்கிக் கொண்டிருந்தார்கள்.

துாங்கும் முன் கணவர் என்னிடம் “ஏன் வசந்தி வீட்டுக்காரரு வரலைனு கேட்டீயா? அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையா” எனக் கேட்டார். “நீங்க கேட்டபோதுதான் நானும் கேட்டேன், அதே பதிலைத் தான் சொன்னாள்.

அப்புறம் கேட்டுக்கலாமுனு நான் பேசாம இருந்திட்டேன்” என்றேன்.

“சரி விசாரித்துவை” என்று கூறினார்.

காலையில் எனக்கு முன்னமே எழுந்து வாசலில் லட்சுமியுடன் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் வசந்தி பெரிய கோலமாகப் போட்டிருந்தாள்.

குளித்து விட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று வீட்டுக்கு வந்தாள். அவள் வரும் நேரத்தில் கீரை விற்கும் பாட்டி வீட்டில் இருந்தது. பாட்டி வசந்தியைக் கண்டதும் “என்னடியம்மா வசந்தி எப்ப வந்தே நல்லாயிருக்கியா” எனக் கேட்டார்கள் “நல்லாயிருக்கேன் பாட்டி.. நீங்க நல்லாயிருக்கீங்களா” எனக் கேட்டபடியே வீட்டினுள் சென்று விட்டாள்.

பாட்டி வசந்தாவை அழைத்து “அவள் முகத்தில் களையில்லையே, மாப்பிள்ளை கூட நல்லாத்தான் இருக்கிறாயானு கேட்டீயா” என்றது. “கேட்டேன் பாட்டி நல்லா சந்தோஷமா இருப்பதாக சொன்னாள்”என்றாள்.

மேலும் பாட்டி “எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு, அவமட்டும் வந்திருப்பதாக நீ சொன்னதை வச்சுப்பார்த்தா ஏதோ இருக்கு, ஆரம்பத்திலே கேட்டு பிரச்சனையில்லாமப் பார்த்துக்கோ. இந்தக் காலப் புள்ளைக எல்லாம் யாரிடமும் மனம் விட்டு பேசுறதில்லை, எதையும் சொல்ல மாட்டேங்குதுங்க” என்று பாட்டி சொல்லிவிட்டு கௌம்பி போய்விட்டது.

மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அவளிடம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கேட்கனும் என நினைத்தாள்

. எனக்கு உதவியாக காய்கறி நறுக்கி கொடுத்து பிள்ளைகளுக்குத் தலை வாரி விட்டு பள்ளிக்கு அனுப்ப உதவினாள்.

இருவரும் காலையிலே சாப்பிடும் போது மெதுவாகக் கேட்டேன் “மாப்பிள்ளைக்கு போன் பேசினியா..இல்லை, அவுங்க பேசினாங்களா” எனக் கேட்டேன். அப்போது அவள் “இல்லை அத்தைக்கிட்டே சொல்லிட்டேன்” என்றாள்.

எனக்கு என்னமோ போலிருந்தது. “ஏன் டீ மாப்பிள்ளைக்கும், உனக்கும் சண்டையா.. ஏன் மாப்பிள்ளையும் நீயும் பேசிக்கல” என்றேன். “அப்படியெல்லாம் ஒன்னுமில்லக்கா.. அவுங்க ஆபிஸ் போயிருப்பாங்க” என்று மேலோட்டமாகச் சொல்லிட்டு பேச்சை மாற்றினாள்.

மேலும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை கீரைபாட்டி சொன்னபடி ஏதோ பிரச்சனை இருப்பதாகத் தெரிந்து கொண்டாள். இருந்தாலும் அவளிடம் கேட்கவில்லை. பகல் முழுவதும் அவள் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் பேசும் போது  நன்றாகப் பேசினாள். ஆனால் ஏதோ சிந்தனையில் இருப்பது தெரிந்தது.

ராத்திரி பிள்ளைகள் துாங்கியவுடன் அவளை அழைத்தேன். “என்னக்கா” என்றாள். உன்கிட்டே பேசனும் என்றேன். “காலையில பேசிக்கலாம் எனக்கு  துாக்கம் வருது அக்கா” என்றாள் நான் விடவில்லை  தனியாக அவளை அழைத்து .

“உனக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன பிரச்சனை உண்மையச் சொல்லு” என நேரடியாகவே கேட்டேன். அதற்கு அவள் பதற்றத்துடன் “அப்படி ஒன்னும் இல்லைக்கா” என்று கூறினாள்.

நான் விடவில்லை.“கல்யாணம் ஆகி 3 மாசம் ஆகுது. நீ இங்கே வந்து  2 நாள் ஆகுது ஏன் மாப்பிள்ளை பேசலை” என மறுபடியும் கேட்டேன்..

அவள் மவுனமாக இருந்தாள். சிறு வயதிலிருந்து என்னிடம் மறைக்காமல் எல்லாத்தையும் சொல்லிவிடுவா.. அவள் மறைப்பதைப் புரிந்து கொண்டாள்.

மேலும் அவளிடம் “நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாகத்தானே இருக்கீங்க” என்றேன். அவளிடம் பதில் இல்லை,  அவளை அதட்டினேன். அவள் மெல்ல வாயைத் திறந்தாள்.

“அவரு நல்லவருதான், ஆனா” என்று இழுத்தாள்.“சொல்லு டீ” என்றேன்.

அப்போது அவள் “எல்லாம் என் தலையெழுத்து” என்றாள். “தலையெழுத்துனா” என்று மறுபடியும் கேட்டேன்.

அவள் “எங்களுக்கிடையில் எந்த உறவும் இதுவரையில்லை” என தலையில் கல்லை துாக்கி போட்டது போல் சொன்னாள்.

மேலும் அவளே பேசினாள் “கல்யாணம் ஆனா முதல் இரவே அவர் என்னை கட்டியணைக்க வரும்போது வியர்த்துக் கொட்டியது, அதோடு சரி தற்போது வரை என் அருகில் வரவில்லை,

எனக்கும் அப்போது ஏதும் புரியவில்லை, அதிலிருந்து என் அருகில் வருவதைத் தவிர்த்தார்.

ஒரு கட்டத்தில் நான் நெருங்கிய போது என்னைத் தவிர்த்து விட்டு எனக்கு இல்லற சுகத்தில் நாட்டமில்லை என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதைப்பற்றி அங்க யார்கிட்டேயும் பேச முடியலே. வரவர ஆபிசிலிருந்து இரவு 12 மணிக்கு வருவார், காலையில் சீக்கீரம் கிளம்பி விடுவார்.

ஒரு சில நாட்களில் வீட்டிற்கு வராமல் ஆபிசிலேயே இருந்து விடுவார். திருமணத்திற்கு முன்பு இப்படி இருந்திருப்பதால் அவுக வீட்டில் உள்ளவர்களும் கண்டு கொள்ளவில்லை.

அவர் மீது எனக்கு ஒரு சந்தேகம் வந்து ஒருநாள் கேட்டு விட்டேன்.” உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா இல்லை வேறு பெண் கூட” என்றேன்.

அப்போது அவர் ”நான் தாம்பத்திய உறவுக்கு ஏற்றவன் அல்ல” என்றார்.

“வாங்க டாக்டரிடம் போவோம்” என்றேன், “இல்லை பல டெஸ்ட் எடுத்து விட்டேன் எனக்கு ஆண்மை இல்லையென” பட்டுனு சொல்லி விட்டார்.

என்னுடன் இருப்பதும், இல்லாததும் உன் விருப்பம் என்றார். நான் கோபமாக அப்போ ஏன் என்னைத் திருமணம் செய்து கொண்டீர்கள் என்றேன்.

நான் வீட்டில் கல்யாணம் வேண்டாம் என்றேன், அவர்களின் வற்புறுத்தலால் உன்னைக் கட்டிக் கொண்டேன் .

என்னை மன்னித்து விடு, இது குறித்து வீட்டில் சொல்ல வேண்டாம் என்றார்.

அதுனாலே யாரிடமும் சொல்ல வில்லை, என மடைதிறந்தது போல் மனதிள் உள்ளதெல்லாம் கொட்டி அழுதாள்.

எனக்கு இதயமே வெடித்து விட்டது போல் இருந்தது. கதறி அழுதேன்“,உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே, நான் என்ன பண்ணுவேன்” எனக் கதறி அவளைக் கட்டிக் கொண்டு அழுதேன்.

அப்போது அவள் “விடுக்கா அதுதான் வாழ்க்கையா., நான் அவர் கூடவே வாழ்ந்திருவோம்னு நினைச்சுட்டேன்” என்றாள்.

“இதை வெளியில சொன்னா நமக்குத்தான் அசிங்கம்” என்றாள். அவள் பேசியதைக் கேட்டு மேலும் அழுதேன் என் அழு குரல் கேட்டு அவர் “என்னாச்சு” என்றார்.

“நாம மோசம் போய்ட்டோம் புள்ளைய பாழுங்கெணத்துல தள்ளிவிட்டுட்டோம்” என தலையில் அடித்த படியே அழுதேன். அவர் “என்ன சொல்ற யாருக்கும் உடம்பு சரியில்லையா” என்றார்.

ஒன்றும் சொல்லாமல் அழுதேன் நான் அழுவதைப்பார்த்து அதுவரை அழாமல் இருந்த அவளும் அழுதாள், அம்மா இறந்து போன பிறகு நான் அவளை ஒரு நாளும் கண்கலங்க விடாம பாரத்த்து பார்த்து வளர்த்த வசந்தி அழுவதைப் பார்க்கும் போது செத்து விடலாம் போலிருந்தது.

அவளை அழாதே என்று சொல்லி விட்டு வீட்டுக்காரரிடம் அவள் சொன்னதையெல்லாம் சொன்னேன் மனுஷன் உடைஞ்சு போனார்.

அன்று இரவு நாங்கள் மூவரும் துாங்கவில்லை, என்ன செய்வதென்ற தெரியாமல் இருந்தோம். விடியற்காலம் நான் முடிவாக எழுந்தேன்.

”இனி நீ மெட்ராஸ் போக வேண்டாம்,  தீர்த்து விட்டுட்டு வீட்டுல இரு.” என்றேன் வசந்தி ஏதும் சொல்லாமல் இருந்தாள்.

பாசமா வளர்த்து அவள நாமளே இப்படி பண்ணிட்டமே என தேம்பிய வாறு வீட்டுக்காரரிடம் “நீங்க லீவு போடுங்க,மாமாவை காலையில வரச் சொல்லுங்க” என்றேன்.

காலையில மாமா வந்தவுடன் அவரிடம் பேசி சென்னையிலிருந்து வசந்தி மாமனார்,மாமியரை விபரம் சொல்லாமல் வரச் சொன்னோம் அவர்கள் வருவதற்குள் எங்க வீட்டுக்காரர் மாமாவுடன் போய் வக்கீலிடம் யோசனை கேட்டு வந்தார்.

இதற்கிடையே வசந்தி என்னிடம் அக்கா ”விவாகரத்தெல்லாம் வேனாக்கா நான் அவர்கூடவே இருக்கேன்” என்றாள்.

அவளை கட்டியணைத்து அழுதேன். நீ அழாதேக்கா எனத் தேற்றினாள்.

அன்றிரவு நானும் வீட்டுக்காரரும் துாங்கவில்லை வீடே சோகமயமானது. அப்பாவிடம் நாங்கள் ஏதும் சொல்லவில்லை,

வசந்தியின் மாமனாரும்,மாமியாரும் மறுநாள் கலையில்  நேராக வீட்டிற்கே வந்தார்கள்.

மருமகளைப் பார்த்து “என்னம்மா ஏன் எங்களை உங்க அக்கா அவசரமா வரச்சொன்னாங்க” என்று கேட்டார்கள்.

உடனே “அது” என்று இழுத்தேன், எங்க வீட்டுக்காரர் கோபத்துடன் “எங்க பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்தட்டீங்களே” எனச் சத்தமாக கத்தினார்.

நான் அவரைத் தடுத்து மெதுவாக விபரத்தைக் கூறி உங்களுக்கு இது முன்பே தெரியுமா எனக் கேட்டேன். அவர்கள் மறுத்தார்கள் .உண்மையிலே அவர்களுக்கு தெரியவில்லை எனத் தெரிந்தது.

அவர்கள் முதலில் நம்ப மறுத்தாலும் மகனிடம் பேசும் போது மகன் ஒப்புக் கொண்டதையடுத்து தலைகுனிந்து நின்றார்கள்.

நானும் வீட்டுக்காரரும் நாங்க வெட்டிக்கிறோம். இனி பொண்ணை அனுப்ப மாட்டோம் என உறுதியாகக் கூறினோம்.

விவகாரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து முறைப்படி விவகாரத்து பெற்றோம்.

வசந்தியை பார்க்கும் போதெல்லாம்  அழுதுவிடுவேன்.

சில மாதங்களில் அவள் மேற்படிப்பு  படிக்கவா எனக் கேட்டாள்.

நாங்களும் மாற்றம் வரவேண்டும் என எண்ணி மேற்படிப்பு படிக்க வைத்தோம். மெல்ல மெல்ல வசந்தியும், நாங்களும் இந்த பிரச்சனையிலிருந்து மீண்டெழுந்தோம். எங்க அப்பா தான் மிகவும் மனமுடைந்து போனார்.

இரண்டு வருடம் மேற்படிப்பு படித்தாள், அரசு வேலை கிடைத்தது. இந்நிலையில் அவளுடன் பணிபுரியும் ஒருவர் விரும்புவதாகக் கூறி எங்களிடம் குடும்பத்துடன் பெண் கேட்டு வந்தார்.

நாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டதால் அவர்களை திருப்பி அனுப்பி விட்டோம். அவர்கள் பெண் கேட்டு போனதிலிருந்து எனக்கு மனதில் இனம் புரியாத கவலை தொற்றிக் கொண்டது.

வசந்தியை இப்படியே விட்டுவிடக் கூடாது . அவளுக்கு மறுமணம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது.

ஆனால் முதலில் பட்ட கஷ்டம் இனி அவளுக்கு வராமல் பார்த்துச் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அவளுக்கு எற்பட்ட மனக்காயத்திற்கு மறுமணமே தீர்வாக இருக்கும் என கணவரிடம் எடுத்துக் கூறினேன்.

வசந்தியை ஊருக்கு வரச்சொல்லி அவளிடம் பேசினேன். அவள் மறுமணத்தை தீர்க்கமாக மறுத்தாள்,ஒரு தடவை பட்டதே போதும் அக்கா..

உன் தங்கையாகவே இருந்துக்கிறேன். கவிதாவையும்,உமாவையும் பிள்ளைகளாக வளர்த்துக்கிறேன், மறுபடியும் எனக்கு கல்யாணப் பேச்சை எடுக்காதே என உறுதியாகக் கூறிவிட்டாள்.

ஆனால் நான் அவளுக்கு மறுமணம் செய்து குடும்பமாகப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

எனது அழுகையும், புலம்பலும் அவள் மனதை மாற்றியது. பெண் கேட்டு வந்த அவளுடன் பணிபுரியும் பையனுக்கு வசந்தியின் முந்தையக் கல்யாணத்தைப் பற்றி விபரமாக் கூறி முழுச் சம்மதத்துடன் மறுமணம் செய்து வைத்தோம்.

திருமணமான ஒருவருடத்தில் காவியா பிறந்தாள். அவள் என் அம்மா போல் இருப்பாள்.

கலங்கிய கண்களுடன் என் நினைவு திரும்பியது. வசந்தி வரவை எதிர் நோக்கி இட்லி சாம்பார் வைக்கத் தயாரானாள்.