எல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் இல்லத் திருமண விழாக்களுக்கு தலைமையேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”எடப்பாடி பழனிசாமி இப்பொழுது பங்கேற்கக்கூடிய சில அரசு நிகழ்ச்சிகளில் அல்லது அவர்கள் சார்பில் நடைபெறக்கூடிய கட்சி நிகழ்ச்சிகளில், திமுகவை விமர்சித்துப் பேசுகின்ற நேரத்தில் ஒரு கம்பெனி என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

கம்பெனி என்பதுகூட ஒரு கவுரவம் தான், அதற்கென்று ஷேர்ஹோல்டர்ஸ் எல்லாம் உண்டு. அதற்கென்று பங்குதாரர்கள் எல்லாம் உண்டு. அதற்கென்று உரிமையாளர்கள் உண்டு, அதற்கென்று பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் உண்டு, ஊழியர்கள் உண்டு.

ஆகவே, கம்பெனியை நம்பி ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. கம்பெனி என்று சொல்லக்கூடியவருடைய நிலை என்னவென்று கேட்டால்,

சர்க்கஸ் கூடாரம்! சர்க்கஸ் கூடாரத்தினுடைய ரிங் மாஸ்டர் யார் என்று கேட்டீர்கள் என்றால், டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான். நான் மோடியைச் சொல்லவில்லை, ரிங் மாஸ்டரை மோடி மஸ்தான் என்று தான் சொல்வார்கள் எப்போதும், அந்த ரிங் மாஸ்டர் இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார்.

அதுவும், சர்க்கஸ் கூடாரத்திலே எடுபிடியாக இருக்கக்கூடிய பழனிசாமி என்ன வேடம் போட்டிருக்கிறார் என்று சொன்னால் ஃபபூன் வேடம். ஃபபூனை பார்த்தீர்கள் என்றால், அப்பப்போ இடையிடையே வந்து சிரிப்பை மூட்டிவிட்டு நகைச்சுவையைத் தந்துவிட்டு மகிழ்ச்சியை தந்துவிட்டு போய்விடுவார்கள்.

அதுமாதிரி, பழனிசாமி அப்பப்போ ஒரு கூட்டத்தில் வந்து நகைச்சுவையோடு ஒரு விசித்திரத்தனமான, வேடிக்கைத்தனமான விபரீதமான நிலையிலே சில செய்திகளைச் சொல்லிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா மறைந்ததற்குப் பின்னால் ஒரு விபத்தின் காரணமாக, ஒரு அதிர்ஷ்டத்தின் காரணமாக யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையிலே எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்று அவருடைய தலைமையிலே இன்றைக்கு தமிழ்நாட்டிலே ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இது ஆட்சி என்று சொல்லக்கூடாது. இன்றைக்கு தமிழகத்திலே இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலுமே ஊழல் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

அப்பேற்பட்ட இந்தக் கூட்டத்தை அகற்ற வேண்டுமென்று சொன்னால் ஒரு காலத்திலே ஆங்கிலேயரை பார்த்து “வெள்ளையனே வெளியேறு வெளியேறு என்று சொன்னோம்.

இப்பொழுது என்ன சொல்லவேண்டும் என்றால் ‘கொள்ளையனே இந்த நாட்டை விட்டு வெளியேறு’ என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டுக்கு வந்து இருக்கிறது.

ஏனென்றால், எங்கு பார்த்தலும் கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன், என்ற நிலையிலேயே தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

நீதிமன்றமே இன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறது என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சொல்லப்பட்டிருக்க கூடிய குற்றச்சாட்டிலே நல்ல வகையிலே முகாந்திரம் இருக்கிறது. ஆதாரங்கள் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததிலே முறைகேடு நடந்திருக்கிறது.

குளோபல் டெண்டர் என்று சொல்லக்கூடிய உலக வங்கி டெண்டரினுடைய ஒப்பந்தத்தை எடுத்துப் பார்த்தால், உறவினர்களுக்கு, சொந்தக்காரர்களுக்கு டெண்டர் வழங்கக்கூடாது என்று விதிமுறையிலே வகுத்து தரப்பட்டிருக்கிறது.

அதைமீறி, ஏறக்குறைய 3,120 கோடி ரூபாய் ஊழல் புரியக்கூடிய வகையிலே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் முதல்வர் என்பவர் அதிகாரத்திலே இருக்கிறார்.

பொதுப்பணித்துறையும் அவரிடத்திலே தான் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறையும் அவரிடத்திலே தான் இருக்கிறது.

இதை நாங்கள் விசாரிப்பதை விட சிபிஐ விசாரித்தால் தான் நியாயம் கிடைக்கும் என்று கருதி சென்னை உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சொன்னால் இதைவிட ஊழலுக்கு ஆதாரத்தை நாம் தரவேண்டிய அவசியம் இல்லை.

இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்று சொன்னால், இதுவரை தமிழ்நாட்டிலே எத்தனையோ முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் மீதெல்லாம்கூட புகார்கள் வந்திருக்கிறது, ஊழல்கள் வந்திருக்கிறது, குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. ஆனால், முதல்வர் மீது இதுவரை தமிழ்நாட்டிலே சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்ட வரலாறு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கிடைத்திருக்கிறது.

நாம் விரைவிலே தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் அது சட்டப்பேரவை தேர்தலாக வரப் போகிறதா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முன்பு வரப்போகிறதா அல்லது இரண்டு தேர்தலும் சேர்ந்து வரப்போகிறதா என்ற ஒரு கேள்விக் குறியோடு காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் நாமெல்லாம் இன்றைக்கு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..

சபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…

Recent Posts