நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை..

லாலு பிரசாத் யாதவ்

புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை என்றும், இடஒதுக்கீட்டில் தேவைப்பட்டால் 50 சதவீதத்தை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். எனினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. எனினும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அத்துடன், தனது மாநிலத்தை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பை அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், பீகாரின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவும், சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை என்று கூறியுள்ளார். பாட்னாவில் நடந்த கட்சியின் பயிற்சி முகாமில், டெல்லியில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நான்தான் முதன் முதலில் எழுப்பினேன்.

இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் எழுப்பியுள்ளேன். எஸ்.சி., எஸ்.டி. உள்பட அனைத்து பிரிவினரின் நலனுக்காகவே எனது கோரிக்கை உள்ளது. சுதந்திரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில்தான் தற்போதைய இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இருக்கும் இடஒதுக்கீடு போதுமானது அல்ல. இது கூட எப்போதாவதுதான் பின்பற்றப்படுகிறது.

ஆகவே, மிகப்பெரிய பின்னடைவு காணப்படுகிறது. எனவே பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் தொகை குறித்த புதிய கணக்கெடுப்பு வேண்டும். இதற்காக புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெறட்டும். அதற்கு தற்போதைய 50 சதவீத அதிகபட்ச இடஒதுக்கீடு தடையாக இருக்குமானால், அதையும் உடைக்க வேண்டும்.
மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அதிகமாக இருந்தால், 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்” இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மெகா மோசடி : மாணவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு..

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

Recent Posts