மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விளையும் அல்பான்சோ மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுவதாக வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2004-ம் ஆண்டில் முதன்முதலாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதுவரை 325 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, கர்நாடகா முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
புவிசார் அடையாளம் கொண்ட பொருட்கள் என்பது விவசாயம், இயற்கை மற்றும் கைவினை, தொழில்துறை சார்ந்து அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும்.
அவை அந்தப் பகுதிகளின் பாரம்பரியப் பொருட்களாகவும் இருக்கும். அந்தப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதன் தரம் மற்றும் தனித் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.
டார்ஜிலிங் தேயிலை, மைசூரு சில்க், குல்லு ஷால், மதுரை மல்லிகை, பங்கனப்பள்ளி மாம்பழம், பனாரஸ் புடவைகள், திருப்பதி லட்டு உள்ளிட்ட சில பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றவையாகும்.