புனேயில். கையில் கட்டுடன் நிற்கும் அமீர் ஷேக் (29) எனும் இளைஞன் மொஹ்சின் கொலைக்குச் சாட்சி. பார்த்துவிட்டார் என்பதற்காக இவரையும் கொல்ல முயற்சித்தபோது கையில் எலும்பு முறிவுடன் தப்பித்து ஓடி விட்டார். இன்னொரு நேரடி சாட்சியான இசாஸ் யூசுஃப் பாக்வான் என்ற இளைஞனும் மோடார் சைக்கிளில் மொஹ்சினுடன் வந்த ரியாஸ் அஹமதும் தம் கிராமங்களுக்குத் தப்பி ஓடி விட்டனர்.
மக்கள் நெருக்கமாக வசிக்கும் வீதியில் அமைந்துள்ள ஷைன் அஞ்சுமன் பள்ளியில் இரவுத் தொழுகையை முடித்து வந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பள்ளியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இது நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் கைகளில் கிரிக்கெட் மட்டைகள். உருட்டுத் தடிகளுடன் வந்த வெறி கொண்ட கும்பலைக் கண்டு தன் பைக்கை ஓரமாக ஒதுக்கி நிறுத்திய போதுதான் மொஹ்சினுக்கு அது நிகழ்ந்துள்ளது.
அஞ்சுமன் பள்ளி இமாம் ஷேக் மன்சூரும் அங்கு தொழ வந்திருந்த பிறரும் தழுதழுத்த குரலில் மொஹ்சினைப் பற்றிப் பேசினர். எந்த அரசியல், இயக்கத் தொடர்பும் இல்லாத, முறையாகத் தொழுகைக்கு வருகிற இளைஞன்.
அமீர் ஷேக்கின் கண்களில் இன்னும் மிரட்சி அகலவில்லை. அவனுக்கு இன்று எதிர்காலமில்லை, இரண்டு குழந்தைக்குத் தந்தையான அவனிடம் வணிகம் செய்ய யாரும் இன்று தயாராக இல்லை.
புனேயில் ஏராளமான பேக்கரிகள். கோண்டுவா மற்றும் ஹடாஸ்பர் ப்குதிகளில் முஸ்லிம்கள் அதிகம். பேக்கரிகள் பெரும்பாலும் உ.பி முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. அவை குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தாக்கப்பட்ட சுமார் 10 பேக்கரிகளை நேற்று பார்வையிட்டோம். தாக்கப்பட்ட 5 மசூதி மற்றும் மதரசாக்களையும் நேற்று பார்வையிட்டோம்
மொஹ்சின் குடும்பத்திற்கு மட்டும் 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது . காயமடைந்தவர்கள், சொத்து அழிக்கப்பட்டவர்கள் யாருக்கும் இழப்பீடு வழங்கப் படவில்லை.
மே 31, ஜூன் 2 இரவு 11 மணிவரை அவ்வப்போது தாக்குதல் நடந்துள்ளது. “ஜெய் பவானி”, “ஜெய் மஹாராஷ்ட்ரா” என்கிற முழக்கத்துடன் தாக்குதல் நடந்துள்ளது.
அச்சம், அச்சம் எல்லோர் கண்களிலும் அச்சம்…
நன்றி: அ.மார்க்ஸின் முகநூல் பதிவில் இருந்து…