அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் பதவி நீக்கம் செய்யப்படுவாரா ?..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன், டிரம்புடன் அவசர நிலை பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் குழு ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்தது குறித்த விசாரணையை மேற்பார்வையிடும் ரோசன்ஸ்டைன் மற்றும் அதிபர் டிரம்ப் திங்களன்று ஏற்கனவே பேச்சுவார்த்தையை நடத்தினர்.

தற்போது ரோசன்ஸ்டைன் பணியில் தொடர்வது குறித்த சந்தேகங்களுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

வியாழனன்று நடைபெறவிருக்கும் அந்த சந்திப்பு எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும், ராட்டை சந்திப்பது குறித்து ஆவலாக உள்ளேன்” என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிபரின் தலைமை ஊழியரிடம் தான் ராஜநாமா செய்ததாக ராட் ரோசன்ஸ்டைன் கூறப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குற்றங்கள் என்னென்ன?

அமெரிக்க அதிபர் நிர்வாகத்துக்கு தகுதியற்றவராக இருந்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் அமெரிக்க அரசியல் அமைப்பின் 25ஆவது சட்டப் பிரிவுக்கு ஆதரவளிக்க புதிய நபர்களை நியமனம் செய்வது குறித்து ரோசன்ஸ்டைன் விவாதித்ததாக நியூ யார்க் டைம்ஸில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் டிரம்பின் கொந்தளிப்பு மற்றும் செயல்பாட்டின்மையை வெளிப்படுத்தும் விதமாக டிரம்பின் நடவடிக்கையை ரகசியமாக பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை 2017ஆம் ஆண்டு மே மாதம் நீதித்துறைக்கும் எஃப்பிஐ அதிகாரிகளுக்கும் நடந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

அந்த சந்திப்பின் போது இதுகுறித்து விளக்கப்பட்ட பலரையும் அந்த செய்தி ஆதாரங்களாக குறிப்பிட்டுள்ளது.

ராட் ரோசன்ஸ்டைனின் கருத்து என்ன?

நியூ யார்க் டைம்ஸின் அந்த செய்தி உண்மையற்றது என்றும், அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என்றும் ராட் தெரிவித்துள்ளார்.

“பெயர் வெளியிடாமல் கூறப்படும் நபர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் வந்த செய்திக்கு நான் கருத்துக்களை தெரிவிக்க போவதில்லை” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதிபருக்கும் எனக்குமான உறவை வைத்து கூறுகிறேன். 25ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்துவதற்கான எந்த தேவையும் எனக்கில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எது உண்மை?

ராட்டின் கருத்துக்கள் கேலியாக சொல்லப்பட்டது என்றும் டிரம்பின் பேச்சுக்களை பதிவு செய்ய வேண்டும் என அவர் தீவிரமாக கருதவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து அமெரிக்க ஊடகங்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

25 சட்டப் பிரிவை பயன்படுத்தி அதிபரை பதிவி நீக்கம் செய்ய வேண்டுமானால், பெரும்பாலான அவை உறுப்பினர்கள், துணை அதிபர் மற்றும் காங்கிரஸின் பெரும் உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நீதித்துறை, அதிபரை விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆண்ட்ரூ மெக்கேப் தெரிவிக்கும் போது, “என்ன செய்ய வேண்டும். அதிபரின் நடவடிக்கையை பதிவு செய்ய வேண்டுமா” என ராட் கேட்டுள்ளார் என வாஷிங்டன் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார் டிரம்ப்?

நியூ யார்க் டைம்ஸில் வெளியான அந்த செய்தியை வைத்து ராட் ரோசன்ஸ்டைனை பதவி நீக்கம் செய்வது குறித்து ஏதும் யோசிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையை “அரசியல் சூனிய வேட்டை” என டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

நன்றி

பிபிசி தமிழ்