ஏதோ… வாய்தவறிச் சொல்லிட்டேன்: வழியும் அமித் ஷா!

“ஏதோ வாய்தவறி ஊழல்களில் நம்பர் ஒன் எடியூரப்பா அரசுதான் எனக் கூறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் கர்நாடகா மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என தன் டங்க் சிலிப் பேச்சுக்கு விளக்கம் சொல்லிச் சமாளித்திருக்கிறார் பாஜக தலைவர் அமித் ஷா.

பெங்களுரில் கடந்த செவ்வாய்கிழமை பேசிய அமித்ஷா, ஊழல்மயமான அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என  குறிப்பிட்டார். சித்தராமையா அரசு எனக் கூறுவதற்கு பதிலாக வாய்தவறி இவ்வாறு அமித்ஷா கூறியது சமூக வலைத்தளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. அவர் இப்படிச் சொன்ன போது, எடியூரப்பாவும் அருகில் இருந்தார் என்பதுதான் சுவாரஸ்யம். கோபத்தை அடக்கிக் கொண்டு எடியூரப்பா அமர்ந்திருந்ததை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

மைசூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஊழல் மலிந்த சித்தராமையா அரசு எனக் கூறுவதற்குப் பதிலாக, வாய் தவறி எடியூரப்பா அரசு எனக் கூறிவிட்டதாகவும், இதனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.

தான் தவறு செய்திருக்கலாம் ஆனால் கர்நாடக மக்கள் தவறு செய்ய மாட்டார்கள் என ராகுல்காந்திக்கு சொல்லிக் கொள்ள விரும்புவதாகவும் அமித்ஷா கூறியதுள்ளார்.