பொய்யான தகவல்களை கடிதத்தில் கூறி ஆந்திர மாநில மக்களை பாஜக தலைவர் அமித் ஷா அவமதித்து வி்ட்டார் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராததைத் கண்டித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் கொண்டு வர உள்ளது.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 9 பக்கத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இன்று கடிதம் எழுதியிருந்தார். அதில், ஆந்திர மாநில வளர்ச்சிக்காக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகவில்லை, அரசியலுக்காக விலகினார் என்று குற்றச்சாட்டு வைத்தார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களின் உணர்வுகளின் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகினோம் . ஆனால், உண்மையில் மத்திய அரசுதான் ஆந்திர மாநிலத்துக்கு துரோகம் செய்து விட்டது. உண்மைக்கு மாறான விஷயங்களை எல்லாம், கடிதத்தில் எழுதி,மக்களின் உணர்வுகளை அமித் ஷா புண்படுத்திவிட்டார்.
ஆந்திர மாநிலத்துக்கு காங்கிரஸ் மட்டுமல்லாமது பாஜகவும் துரோகம் செய்துவிட்டது. ஆந்திர மாநிலத்தை நியாயமற்றவகையில் காங்கிரஸ் கட்சி பிரித்தது. வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பாஜக ஏமாற்றியது.
எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு நீங்களும்தான் பொறுப்பு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எந்தவிதமான அறிவியல் பூர்வமற்ற மாநிலப் பிரிவினை முடிவை எடுத்தார்கள். அதற்கு மத்திய அரசு பொறுப்பு என்றால், பூட்டப்பட்ட அறைக்குள் 20 நிமிடங்களில் எடுக்கப்பட்ட அந்த முடிவுக்கு பாஜகவுக்கும் சரிசமமான பங்கு இருக்கிறது. இதில் எங்களுடைய பிரச்சினைகளுக்கு நீங்கள் ஏன் வருத்தப்படுவதாக தெரிவிக்கிறீர்கள்.
எதையும் உள்நோக்கத்துடன் செய்வது எங்களுக்கு பழக்கமில்லை, அது பாஜகவினருக்கு உரிய பழக்கமாகும். ஆந்திர மாநிலத்துக்கு ஏராளமான உதவிகளை மத்திய அரசு செய்ததாகவும், அதை பயன்படுத்திக்கொள்ளாதது போல எங்களை குற்றம்சாட்டி எழுதியுள்ளார்.
உண்மையில் ஆதாரங்களுடன் மத்திய அரசு தனது வாதங்களை எடுத்துவைக்கட்டும் அதற்கு மாநில அரசு சார்பில் நாங்கள் பதில் அளிக்கிறோம். மத்திய அரசு எங்களை திராணி அற்றவர்கள், திறமை அற்றவர்கள் என்று கூற முயற்சிக்கிறதா?.
எங்கள் அரசில் நல்ல வளர்ச்சி இருக்கிறது, விவசாய முன்னேற்றம் இருக்கிறது, பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறோம் . ஏன் இப்படி பொய்களை பரப்புகிறீர்கள் அமித் ஷா, இதுதான் உங்கள் மனநிலையா?.
மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரிவசூலை அதிகமாகத் திரட்டித் தருவதில், ஆந்திர மாநில அரசுதான் முன்னிலையில் இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக கடினமாக முயற்சி செய்தும், இன்னும் தென் மாநிலங்களில் ஆந்திரா பின்னடைவுடனே இருக்கிறது.
இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.