பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி

 

நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.

 

தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். தெலுங்கானா தேர்தலுக்கு முன் மெகா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க வை வீழ்த்த திட்டமிட்டுள்ளார். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக டெல்லி சென்ற அவர், முதலில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தார். பின்னர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவையும் சந்தித்தார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் வீட்டிற்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அவரை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தெலுங்கு தேச எம்.பி.,க்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

 

இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் ராகுல், சந்திரபாபு நாயுடு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

 

நாட்டை பாஜகவிடம் இருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் கரம் கோர்த்திருக்கிறோம். ஜனநாயகத்தை காப்பாற்ற கடந்த கால நிகழ்வுகளை மறந்து விட்டு சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே தளத்தில் நின்று பாஜகவை எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகும். அந்த வகையில் பாஜகவை எதிர்க்க அக்கட்சியுடன் இணைந்து எதிர்கால வியூகங்களை வகுக்க வேண்டி உள்ளது. அதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி கூறியதாவது:

 

நாட்டின் ஜனநாயகத்தையும், அதன் அமைப்புகளையும் காப்பாற்ற வேண்டும் என்பது இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமாகும். கடந்த காலத்தை மறந்து விட்டு நிகழ்காலப் பிரச்சினைகளின் அடிப்படையில் இணைந்து செயல்பட இருதரப்பிலுமே முடிவு செய்துள்ளோம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான முக்கிய நகர்வாக ராகுல் –– சந்திரபாபு நாயுடு சந்திப்பு பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு அவர்கள் விடுத்திருக்கும் வேண்டுகோள் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை அமைக்க அடிப்படையாக அமையும் எனவும் கருதப்படுகிறது.