ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.

செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, ஆந்திர பவனில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போராட்டம் நடத்துவதாகக் கூறிய அவர், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கை ஆந்திர மக்களின் சுயமரியாதை தொடர்பானது என்றார்.

தங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், அதை எப்படி நிறைவேற்ற வைப்பது என தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுயமரியாதைக்கு இழுக்கு நேரும்போது அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என கூறிய சந்திரபாபு நாயுடு, தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதை பிரதமர் மோடியும், மத்திய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.

இதேபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய ராகுல்காந்தி, ஆந்திர மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி, நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.