நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று..

நீட் தேர்வால் மருத்துவர் கனவு கனவாக போனதை எண்ணி இன்னுயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வு போராளி அனிதாவின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. தந்தை சண்முகம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி. ஏழ்மையான குடும்பம்.

வறுமையின் கோரப் படியிலும் மருத்துவர் ஆக வேண்டம் என்ற கனவோடு பயின்ற மாணவி அனிதா 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றார்.மருத்துவக் கனவு நிறைவேறிவிட்டதாக எண்ணியிருந்த அனிதாவிற்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு பெரும் கனவை தகர்த்தது.

காரணம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, சிபிஎஸ்சி பாடத்திட்டம் பெரும் தடையாக அமைந்தது. இதனால், ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்த அனிதாவால், நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆனாலும் மனம்தளராத அனிதா, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார்.

இருப்பினும் நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. கனவு கானல்நீரனாதை எண்ணி மனமுடைந்த அவர், கடந்த ஆண்டு இதே நாள் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

அவரது இழப்பு குடும்பத்துக்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்தையே துக்கத்தில் ஆழ்த்தியது.

அவரது இழப்புக்குப் பிறகு நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும், நீட் தேர்வில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சமூகத்தின் கீழ்நிலை மாணவர்களுக்கு கல்வி மட்டுமே ஏணியாக இருக்கும் போது, இது போன்ற தேர்வுகள் அவர்களை கல்வியிலும் கீழ்நிலையிக்கே இட்டுச் செல்ல வழி வகுக்கிறது.

கல்வியாளர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்து நீட் தேர்வுக்கு உரிய வழியை கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு