பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கலைஞர் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார். அண்ணா நினைவுநாள் முன்னிட்டு கழக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன் எனும் தனிப்பெருமை பெற்றவர் நம் பேரறிஞர் அண்ணா. பிள்ளையைத் தாய்தான் தாலாட்டி, சீராட்டி, பெயர் சூட்டி உச்சி முகர்ந்து மகிழ்வாள்; நம் அண்ணாவோ தமிழ்நாடு என்ற பெயர்சூட்டி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர். அதனால்தான் அவர் மறைந்து அரை நூற்றாண்டு கடந்தாலும், தமிழ்த்தாயின் தகுதி மிக்க தலைமகனாக என்றென்றும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்திருக்கிறார்.
தந்தை பெரியாரின் அடியொற்றி சுயமரியாதை – பகுத்தறிவுப் பாதையில், ஆழ்ந்த இன – மொழி உணர்வோடு, தன் பொதுவாழ்வைத் தொடங்கிய எளிய மனிதர் நம் அண்ணா. இணையிலா எழுத்தாலும் எவரையும் ஈர்த்திடும் பேச்சாலும் அயராத உழைப்பாலும் அருமையான ஆளுமையாலும் தமிழ் மக்களிடம் அதுவும் சாதாரண சாமானியரிடம் புதியதும் புரட்சிகரமானதுமான விழிப்புணர்வை ஊட்டியவர். பணக்காரச் சீமான்களின் கட்சியாக அடையாளம் காட்டப்பட்ட நீதிக்கட்சியின் பெயரை, 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்தார் தந்தை பெரியார். அந்தத் திருப்புமுனைப் பெயர் மாற்றத் தீர்மானம், அண்ணாதுரை தீர்மானம் என்றே மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதெனில், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனையும் சீரிய நோக்கும் செயலாற்றலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திடக் கூடியவை என்பதை அறிய முடியும்.
தன் வாழ்வில் தான் கண்ட – கொண்ட ஒரே தலைவர் என்று பெரியாரைப் போற்றிய பேரறிஞர் அண்ணா, அத்தகைய பெரியாரிடமிருந்து விலகியும் விலகாமலும் பிரிந்தும் பிரியாமலும், 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது, தலைவர் நாற்காலியை தந்தை பெரியாருக்காக காலியாக விட்டதுடன், கொள்கைப் பயணத்தில் தி.க.வும், தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றே பிரகடனம் செய்தார். அதனை நினைவூட்டும் வகையில்தான், 2016ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நான் உரையாற்றும்போது, “கடவுளை மற…மனிதனை நினை எனத் தந்தை பெரியார் அறிவுறுத்தினார். ஓர் இயக்கம் கறுப்புச் சட்டை அணிந்து கடவுளை மற என்கிறது. இன்னொரு இயக்கம் வெள்ளை சட்டை அணிந்து மனிதனை நினை என்கிறது” என்று குறிப்பிட்டேன். மனித வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் இனம் – மொழி விடுதலைக்காவும் மாநில உரிமை காக்கவும் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மம், அரசியலில் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை ஆகியவைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள்” என்று அண்ணா முழங்கினார்.
கறுப்பு – சிவப்பு எனும் இருவண்ணக் கொடி கழகக் கொடியானது. “கறுப்பு நிறம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்வில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அடையாளமாகும். சிவப்பு நிறம் அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் குறியீடாகும். இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். இருண்ட வானில் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன் கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது” என இருவண்ணக் கொடிக்கான விளக்கத்தை எடுத்துச் சொன்னவர் அண்ணா.
இரவெல்லாம் இருண்டிருக்கும் உலகத்திற்கு, அடிவானத்தில் தோன்றுகிற உதயசூரியன் எப்படி ஒளி ஏற்றுகிறதோ அப்படிப்பட்ட இயக்கம்தான் நம் குருதியுடன் கலந்திருக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம். 1957ஆம் ஆண்டு கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தை எதிர்கொண்ட போது, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, அதுவே நமது வெற்றிச் சின்னமாக நிலைத்திருக்கிறது என்பதையும் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.
எதனையும் தொலைநோக்குப் பார்வையுடனும் ஜனநாயக குணத்துடனும் சிந்தித்து செயல்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட நாடு கொள்கையை 1962ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அவர் முழங்கியபோது, அன்றைய பிரதமர் பண்டித நேரு உள்பட பலரும் வியந்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி கண்டு அதிர்ந்தனர். அதனால்தான், 1963ல் பிரிவினைத் தடைச் சட்டம் கழகத்தை குறி வைத்துக் கொண்டு வரப்பட்டது. மிகக்கடுமையான அந்த சோதனை காலகட்டத்தை அறிவுப்பூர்வமாக அனாயாசமாகக் கடந்தவர் பேரறிஞர் அண்ணா.
திராவிட நாடு கொள்கையை கைவிட்டார். பிரிவினையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன எனச் சொல்லி, மாநில உரிமைகளுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தார். கழகத்தைக் தன் தம்பியர் படையுடன் கண்ணை இமை காப்பதுபோல் கட்டிக்காத்தார். 1965 மொழிப்போர்க்களத்தில் கழகம் ஆற்றிய பங்கும், கழகத்தினரின் உயிர்த்தியாகமும் உலக வரலாற்றில் உன்னதமான அத்தியாயமாகும்; எங்கும் காண இயலாத மகத்தான அறப்போர்க்களமாகும்.
இளைஞர்கள் – மாணவர்கள் – பெண்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் கழகத்தின் செல்வாக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பன்மடங்கு வளர்ந்தது. அதன்விளைவாக, 1967ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் தி.மு.கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக அந்த மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்த வரலாற்றைப் படைத்தவர் பேரறிஞர் அண்ணா. எதிர் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக விரிவான கூட்டணியை முதன்முதலில் அமைத்தவரும் அண்ணாதான். ஆட்சிப் பொறுப்பில் மிகக் குறைந்த காலமே இருந்தாலும் அவர் ஆற்றிய பணிகள் அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தது.
சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்தான். ஆதிக்க இந்திக்கு இடமில்லை என தமிழ் – ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டியவரும் அறிஞர் அண்ணாதான். சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை அளித்து, கழகத்தின் ஆட்சியை தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்கியவர் அண்ணாவே!
சென்னை மாநகரில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக்காட்டியதுடன், சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச் சான்றோருக்கு சிலைகள் அமைத்தது பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. வடமொழிச் சொற்கள் பலவும் நீக்கப்பட்டு தூயத் தமிழ்ச் சொற்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மாநில உரிமைகளுக்கான குரல் வலிமையுடன் ஒலித்தது. இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்துகளை நாட்டுடைமையாக்கியவர், அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.
ஒரு மாநில அரசு எப்படி செயலாற்ற வேண்டும், இந்திய ஒன்றியத்தில் கூட்டாட்சி தத்துவம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணமாகத் திகழ்ந்து முன்னோடியான முயற்சிகளை மேற்கொண்டவர் பேரறிஞர் அண்ணா. அவருடைய சிந்தனைகள் செறிவானவை; அவரது அணுகுமுறை எளிமையானது.
அவரை நான் சந்தித்த வேளைகளில் எல்லாம் அளவிலா அன்பைப் பொழிந்திருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அறிஞர் அண்ணாவுக்கு எப்போதும் மாறாத பாசம் உண்டு. கழகத்தின் வளர்ச்சி – செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனிப்பவரான தலைவரின் அன்னையார் அஞ்சுகம் அம்மாள் அவர்களின் கருத்துகளை ஆர்வமுடன் கேட்பார்.
பேரறிஞர் அண்ணாவின் மணிவிழாவை கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வின் சார்பில் கொண்டாட விரும்பி, அவரை அழைப்பதற்காக சிறுவனான நான் அவரது வீட்டிற்குச் சென்றேன். உடல்நலன் காரணமாக, அண்ணா சந்திக்க மறுத்த நிலையில், நான் திரும்பிவிட்டேன். முதலமைச்சரான அண்ணா தன்னுடைய காரை தலைவரின் கோபாலபுரம் வீட்டுக்கு அனுப்பி என்னை அழைத்து வரச் செய்தார். அவரிடம் மணிவிழா பற்றி நான் தெரிவித்தபோது,
“உன் அப்பாவைப் போலவே நீயும் பிடிவாதக்காரனாக இருக்கிறாயா?” என்று செல்லமாகக் கூறி, நிகழ்ச்சி குறித்து கேட்டறிந்தார்.
அந்தோ… மணிவிழா காணும் முன்பாகவே, கொடிய புற்றுநோய் பேரறிஞர் அண்ணாவை நம்மிடமிருந்து பறித்துவிட்டது. தமிழ்நாடே அவர் மறைவுக்கு கண்ணீர்க் கடலானது. தமிழன்னை தன் தலைமகனை – தவப்புதல்வனை இழந்து கையறுநிலைக்கு ஆளானார். பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்த தமிழ்நாட்டு மக்களின் பெருந்திரள் உலக சாதனை புத்தகமான “கின்னஸ் ரெகார்டில்” பதிவாகியிருப்பது அந்தப் பெருமகன் இந்த மண் மீது கொண்டிருந்த மகத்தான பிடிப்பையும், அந்தப் பெருமகன் மீது நம் மக்கள் கொண்டிருந்த ஆழமான பாசத்தையும் வெளிப்படுத்துவதாகும்.
“தி.மு.க.வின் முதல் அத்தியாயத்தை நான் எழுதிவிட்டேன். இரண்டாவது அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்” என அண்ணா சொன்னார். அந்த வார்த்தைகளுக்கேற்ப, பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகத்தையும் ஆட்சியையும் தோளில் சுமக்கும் பொறுப்பை ஏற்று, அரை நூற்றாண்டுகாலம் கழகத்தின் தலைவராக இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து இந்திய அளவில் மகத்தான வளர்ச்சி பெற வைத்தவர் நம் ஆருயிர்த்தலைவர் கலைஞர் அவர்கள். எத்தனையோ சோதனைகள், நெருக்கடிகள், பழிதூற்றல்கள்,
தோல்விகள் எல்லாவற்றையும் கடந்து ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்று 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று சாதனை படைத்தார் அறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பியான தலைவர் கலைஞர் அவர்கள்.
எந்த அண்ணாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சதுக்கம் அமைத்தாரோ, எந்த அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டுப் பெற்றாரோ அந்த அண்ணாவின் அருகிலேயே அவரது இதயத்தை ஒப்படைத்த இளவலாக நிரந்தர உறக்கம் கொண்டிருக்கிறார் தலைவர் கலைஞர். அவர்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென்றால், நாம் உறக்கமின்றி உழைத்து கழகத்தைக் கட்டிக் காத்திட வேண்டும்.
இந்திய அரசியல் களத்தில் ஒரு மாநிலக் கட்சியை மாபெரும் வளர்ச்சி பெறச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. இன்றைக்கு அண்டை மாநிலங்கள் தொடங்கி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன. ஆதிக்க இந்திக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு, தாய்மொழியைக் காப்பதற்கு அரண் அமைத்தவர் பேரறிஞர் அண்ணா. இன்றைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் தாய்மொழியைக் காக்கும் முழக்கங்கள் எதிரொலிக்கின்றன. மத்திய அரசிலே அதிகாரம் குவிக்கப்பட்டு – மாநிலங்களின் உரிமைகள் பறிபோவதை எதிர்த்து நாடாளுமன்றத்திலேயே முழங்கியவர் பேரறிஞர் அண்ணா. இன்று அத்தகைய குரல் இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மாநிலங்களிலும் ஒலிக்கின்றன. ஏகாதிபத்திய – அடக்குமுறை ஆட்சிக்கெதிரான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட அயராது பாடுபட்டவர் பேரறிஞர் அண்ணா. இன்றைக்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஒருமித்த குரலாக அதுவே ஒலிக்கிறது. இந்தியாவின் இன்றைய அத்தியாவசியத் தேவை அறிஞர் அண்ணா வகுத்துத் தந்த ஆற்றல் மிகுந்த கொள்கைகள்தான்.
அண்ணாவையும் – அவரது கொள்கைகளையும் நெஞ்சில் ஏந்துவோம்! அண்ணன் – தம்பி பாசத்துடன், உடன்பிறப்புகள் என்ற உணர்வுடன் இணைந்து பயணித்து, அண்ணா கண்ட இயக்கத்தை எந்நாளும் வெற்றி பெறச் செய்திடுவோம், வாரீர்!
இவ்வாறு ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.