நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறக்கப்பட்டு கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட அவரது சிலையும் அங்கே திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவாஜி சிலையைத் திறந்து வைத்த கலைஞரின் பெயர் அந்தக் கல்வெட்டில் இருந்ததே அந்தச் சிலையை அகற்றுவதற்கு காரணம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கும் கருத்தை மறுப்பதற்கில்லை. அதுதான் உண்மையும் கூட. காரணம் அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றுவதில் அப்போது ஜெயலலிதா அரசு அத்தனை வேகம் காட்டியது. அதற்கான காரணமும் தற்போது தெள்ளத் தெளிவாகவே விளங்கி விட்டது. அதனை அசைபோடும் வகையில், 2013 ஆம் ஆண்டு சிவாஜி சிலையை அகற்றக் கோரும் வழக்கு நடந்த போது நடப்பு.காமில் வெளியான இந்தக் கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறோம்…. 2013 அக்டோபரில் வெளியான பழைய கட்டுரை இதோ….
_________________________________________________________________________
“அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே”
தமிழ்ச் சமூகத்தின் பொட்டிலடித்து உசுப்பிய கலைஞர் கருணாநிதியின் வசனத்தைப் பேசிய படி தமிழ்த்திரைக்குள் பிரவேசித்த பெருங்கலைஞன் அவன்.
அவனது பேச்சும், மூச்சும் தமிழர்களை மகிழ்விப்பதற்காகவே இறுதிவரை துடித்தவை.
அது புராணிகர்களின் காலம். புராணங்களைத் தவிர மக்களிடம் சொல்ல எதுவுமில்லை என்று நம்ப வைக்கப்பட்ட காலம்.
மகாபாரதம், சம்பூர்ண ராமாயணம், ஸ்ரீ வள்ளி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, வேதாள உலகம், சிவகவி, நந்தனார் சரித்திரம் என புராணப் புழுகு மூட்டைகள் வெள்ளித்திரையில் கட்டுக்கட்டாக அவிழ்த்துவிடப்பட்ட காலம்.
சர்மாக்களும், சாஸ்திரிகளும், சாஸ்திரியம், சங்கீதம் என்று பயமுறுத்தி, பழமைச் சங்கிலிகளால் மக்கள் கலைத்தளமான சினிமா என்னும் மாபெரும் ஊடகத்தை, அவர்களது திண்ணைகளிலும், ரேழிகளிலும் நடக்கும் கதாகாலட்சேபத்தைப் போலக் கட்டிப் போட்டு வைத்திருந்த காலம்.
அப்போதுதான், வாடிவாசல்களில் இருந்து திமிறியும், வெகுண்டும், வீறு கொண்டும் வெளியேறும் காளைகளைப் போல், என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜந்திரன், எம்.ஜி,ஆர் போன்ற கலைஞர்கள், திராவிட இயக்கத்தின் பேரெழுச்சிப் பிளம்பாக வெடித்துச் சிதறி வெளிவந்து விழுந்தனர். அவர்களில் சிவாஜி கணேசன், தனது தனிப்பட்ட நடிப்பாற்றல் வழியாக, தமிழர்களின் பிரம்மாண்டக் கலைக்குறியீடாய் இமயம் என எழுந்து நின்றார்.
அப்போது திரைப்படத் துறையை முழுமையாகத் தன் கையில் வைத்திருந்த சனாதனிகளின் கூட்டம், பல்வேறு வகையில் அவரை அடக்கவும், ஒடுக்கவும் பார்த்ததை, பாமரத் தமிழ் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நெருப்பாய்க் கனன்ற அவரது நடிப்பாற்றல், அத்தனை சூழ்ச்சிகளையும் பொசுக்கி, பெருஞ்சுடராய் எழுந்து நின்றது.
தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை, முதலில் தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா எனத்தொடங்கி, பின்னாளில் என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் என முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களாக இல்லாமல் போனது, சனாதனிகளைப் பொறுத்தவரை ஒரு கசப்பான வரலாற்று உண்மை.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, பிறப்பால் அவர் எந்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும், திராவிட இயக்கத்தின் தலையாய கலைஞராகவே அவரும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இவர்களுக்கெல்லாம் மாற்றாக தங்களவர் ஒருவரை நாயகனாக முன்னிறுத்த வேண்டும் என்ற உந்துதலில்தான் ஜெமினிகணேசனைத் தாங்கிப் பிடித்தார்கள். திரையுலகில் இருந்து ஒதுங்கிய காலத்தில் பிராமணர்கள் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தவர்தான் ஜெமினி கணேசன்.
ஊமைப்படமாக இருந்து பேசும்படமாக பரிணமித்த காலத்தில், வெள்ளித்திரை என்பது சனாதனிகளின் ராஜபாட்டையாக இருந்தது.
சாஸ்திரிய சங்கீதமும், பரதமும் தவிர்க்க முடியாத தகுதிகளாகப் பார்க்கப்பட்டன. சனாதன இரும்புக் கோட்டைக்குள் கட்டியெழுப்பப்பட்ட சுவர்ணமாளிகையாக திரையுலகம் தொலை தூர நட்சத்திரத்தைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது.
முட்டாள்களின் தலைவனாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்ட பெரியாரும், சாமானியர்களின் பிரதிநிதியாக தன்னை வரித்துக்கொண்ட அண்ணாவும், அவர்கள் வழியில் வந்த கலைஞர் கருணாநிதியும், சனாதனக் கோட்டையின் கதவுகளைப் மிகப்பெரிய பகுத்தறிவுப் போருக்குப் பின் திறக்கவைத்தார்கள்.
அணையின் மதகு திறக்கப்படும் போது, நதியின் வெள்ளம் பெருக்கெடுப்பது போல், புதுமைப் புனல் பொங்கிப் புகுந்தது.
ஸ்வாமி, நாதா என புராணிக மொழியை முணகிக் கொண்டிருந்த தமிழ்த்திரை, ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளை வீறு கொண்டு முழங்கத் தொடங்கியது. தங்களுக்குப் புரியாத எதையோ பாடியும், பேசியும் பைத்தியமாக்கிக் கொண்டிருந்த தமிழ்த்திரை, திடீரெனத் தங்களையே பிரதிபலிக்கத் தொடங்கிய அதிசயத்தைப் பார்த்து வாய்பிளந்த தமிழர்கள், பின்னர் அதில் வசப்பட்டார்கள். தங்கள் வாழ்க்கையை, போராட்டங்களை, பிரச்னைகளை, அரசியலை உரத்துப் பேசிய தமிழ்த்திரையின் புதிய மொழி, அவர்களைக் கிரங்கடித்தது. மகுடிக்குக் கட்டுண்ட நாகம்போல், அந்த மகாகலைஞர்களின் நவரச பாவங்களில் மயங்கிக் கிடந்தார்கள்.
இசை, தயாரிப்பு, பிரம்மாண்ட ஸ்டுடியோக்கள் என கனவுத் தொழிற்சாலையின் அத்தனை சூத்திரக் கயிறுகளும் தங்கள் வசமிருந்தும், அதன் பிரதான ஆளுமைகளாக தங்களால் உயரமுடியவில்லையே ஏன்ற ஏக்கமும், வருத்தமும் தலைமுறை சார்ந்த வருத்தமாக அவர்களுக்குள் இன்னும் வேறோடிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வருத்தத்தின் நீட்சிதான் சிவாஜி கணேசன் என்ற அந்தத் தமிழ்ப்பெரும் கலைஞனின் சிலை, சீனிவாசன் என்ற நபருக்கு இப்போதும் இடையூறாகத் தெரிகிறது.
தமிழ்த்திரையுலகம் அவர்களது ராஜபாட்டையாக இருந்த போது குறுக்கே எழுந்து நின்ற இமயமல்லவா?
அந்த இமயத்தின் சிலை இப்போது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதாம்.
சீனிவாசன் என்ற நபர் சொல்வதை ஆதரித்து தமிழக அரசும் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது..
அதுவும் இதே வழக்கு அக்டோபர் 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாஜி சிலையால் எந்த இடையூறும் இல்லாததால் அதனை இடிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
ஒருமாத இடைவெளிக்குள் சிவாஜி அப்படி என்ன தொந்தரவு செய்துவிட்டார் என்று தெரியவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு இந்தச் சிலை வைக்கப்பட்டபோதும் அதற்குத் தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அப்போது, நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்துவிட்டார்கள். இப்போது மீண்டும் இப்படி ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது.
கடற்கரையில் எத்தனையோ சிலைகள் இருக்கின்றன. நகரின் மற்ற இடங்களில் எத்தனையோ நினைவிடங்களும், சிலைகளும், கோவில்களும் இருக்கின்றன.
அவற்றாலெல்லாம் வராத இடையூறு சிவாஜி சிலையால் வந்து விட்டது என்கிறார்கள்.
அவர்களுக்கு இடையூறாகத் தெரிவது, சிவாஜி என்ற அந்த மகத்தான கலைஞனின் சிலை மட்டுமல்ல. அதனைத் திறந்து வைத்த கல்வெட்டில் தெரியும் கலைஞர் கருணாநிதியின் பெயருடன் கம்பீரமான தமிழ் அடையாளமும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சி தரும் எச்சரிக்கைகளும்தான். கண்ணகி சிலையைப் போல.
செம்பரிதி
Anti Tamil Politics behind the Sivaji Statue : Chemparithi
_____________________________________________________________________________