‘என்னை மன்னித்து விடுங்கள்’ விமான நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்..


பால் டேம்பரிங் விவகாரத்தில் தவறிழைத்ததற்காக 12 மாதங்கள் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பி செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.

“என் அனைத்து அணி சகாக்களும் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.

கேப்டவுனில் நடந்த விஷயத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். முடிவெடுப்பதில் பெரிய தவறிழைத்து விட்டேன். அதன் விளைவுகளை இப்போது புரிந்து கொள்கிறேன்.

தலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.

இதனால் ஏதாவது நன்மை உண்டென்றால் அது அடுத்தவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடம்தான். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னுடைய தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.

நல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.

எனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஆஸ்திரேலியா, அதன் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நான் கொடுத்த வலிக்காக மிகவும் வருந்துகிறேன், மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காலத்தில் இழந்த மதிப்பை மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு மனம் உடைந்த ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.