கருவுற்ற பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு ரத்தம் – பின் தொடர்வதில் கவனம் தேவை ஊடக நண்பர்களே: திரவிய முருகன்

 

எச்ஐவி பாதிப்பு ரத்தம் , கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட பிரச்சினை தொடர்பான காட்சிகள் செய்தித்தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வருகின்றன. முகங்களை மறைத்து காட்சிகள் வந்தாலும், அதையும் தவிர்ப்பது நல்லது. சம்பவம் தொடர்பான இடங்களை மட்டுமே காண்பிக்கலாம்.

இந்தப் பிரச்சினையை பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் இருந்து நோக்குதல் அவசியம். துளியும் தவறெதும் செய்யாது, பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது ஒரு குடும்பம். அவரிடம் தனியாக பேட்டி காண்பது, கணவரிடம் , உறவினர்கள் பேட்டி காண்பதெல்லாம் தேவையற்ற ஒன்று ( காட்சிகள் இல்லாமல் பதிவு செய்யலாம்) . அவர்களுக்கு இப்போதைய முக்கிய தேவை, கவுன்சிலிங் மற்றும் நவீன சிகிச்சை.

அரசின் அலட்சியங்களை உரக்கச் சொல்லுங்கள்..காரணங்களை கண்டறிந்து புலன் விசாரணை செய்யுங்கள்..பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, பின் தொடருங்கள். ஆனால் அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்.

எச்ஐவி பாதிப்பு குறித்து செய்தி வெளியிடுகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கென்று சில நெறிமுறைகள் உள்ளன. அதற்கான பயிற்சி வகுப்புகள் கூட நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை அனைவரும் அறிந்துள்ளார்களா என்று தெரியவில்லை. எனவே நண்பர்களே…கவனமாக பின் தொடருங்கள்..தயவு செய்து துரத்துவதை நிறுத்துங்கள்…

– திரவிய முருகன் – ஊடகவியலாளர் முகநூல் பதிவில் இருந்து…