முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் – 10 – தலைவரான பெரியார்… தளகர்த்தரான அண்ணா…! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal pesuvom – 10 ___________________________________________________________________________________________________________

காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், 1937ம் ஆண்டு வரை சுயமரியாதை பிரச்சார இயக்கத்தை மட்டுமே நடத்தி வந்தார். வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. பெரியார் சற்றே தமது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டிருந்தால், அன்று முதலமைச்சராகவோ, சென்னை மாகாணத்தின் கவர்னர் ஜெனரலாகவோ ஆகியிருக்க முடியும். காங்கிரசிலும், மற்ற பெருந்தனக்காரர்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த செல்வாக்குக்கு பதவிகளைப் பெறுவது பொருட்டே இல்லை. ஆனால், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை கண்டு நெகிழ்ந்த அவரது நெஞ்சம், பதவிகளையும், அதிகாரத்தையும் தூசாக எண்ணித் தூக்கியெறிந்தது. எளிய மக்களின் சமூக விடுதலை ஒன்றே தனது லட்சியமென அவரைத் துணிய வைத்தது. காங்கிரஸ் ஒழிப்பு என்ற அவரது பிரகடனம் வர்ணாசிரம ஒழிப்புக்கானதே தவிர, வெறும் கட்சி அரசியல் சார்ந்ததன்று. அதனால்தான் பின்னாளில் ஏழை பங்காளரான காமராஜர் தலைமையிலான காங்கிரசுக்கு பெரியார் தயக்கமின்றி ஆதரவளித்தார்.

 

இனி 30களின் நிகழ்வுகளுக்கு வருவோம். 

 

anna - periyar

1937ம் ஆண்டு நடைபெற்ற மாகாணத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. நீதிக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

 

இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான், பின்னாளில் தமிழக அரசியலின் திசையையே திருப்பியவரும், அண்ணா என்று அன்பொழுக தமிழ் மக்களால் அழைக்கப்பட்டவருமான சி.என்.அண்ணாதுரை அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார். 1909ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடராஜன், பங்காரு அம்மாள் தம்பதியருக்குப் பிறந்த அண்ணா, அவரது சிறியதாயார் ராஜாமணி அம்மையாரால் வளர்க்கப்பட்டார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அண்ணாவுக்கு 1930ம் ஆண்டு மாணவப் பருவத்திலேயே திருமணம் செய்யப்பட்டுவிட்டது. படிப்பை முடித்த உடனேயே, அரசியலின் பக்கம் அவரது ஆர்வம் திரும்பி இருக்கிறது. 1934ம் ஆண்டு நடைபெற்ற சென்னை நகரசபை உறுப்பினர் தேர்தலில் நின்று தோல்வியடைந்துள்ளார். இதையே தனது அரசியல் பிரவேசமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில்தான் பெரியாரை முதன் முதலில் தாம் சந்தித்ததாக அண்ணாவே கூறியுள்ளார். திருப்பூரில் பெரியாரைச் சந்தித்த நாள் முதலாகவே, அவரது சுவீகாரப் புத்திரனாக தாம் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார் அண்ணா.

 

பெரியார் அண்ணாவின் இந்தச் சந்திப்புக்குப் பின்னர், சமூகநீதிக்கான இயக்கம் தமிழகத்தில் புதிய வீறையும், பொலிவையும் பெற்று எழுச்சி அடைந்ததைப் பார்க்க முடிகிறது. அதுவரை சென்னையில் இருந்து வெளியான நீதிக்கட்சியின் நாளேடான விடுதலை, ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது. 1937ல் விடுதலையில் பணியாற்றுவதற்காக ஈரோடு சென்றார் அண்ணா.

 

 இந்த நிலையில்தான், 1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் தலைமை அமைச்சராக இருந்த ராஜாஜி, இந்தியைக் கட்டாயப் பாடம் ஆக்கப்போவதாக அறிவித்தார். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் சிலிர்த்தெழுந்தது. வடமொழிப் பயிற்சியுள்ள பிராமணப் பிள்ளைகளுக்கு இந்தி எளிதாகப் படிக்க முடியும் என்றும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்ற பிள்ளைகளுக்கு இந்தி புரியாது என்றும் கூறி குமுறியது பெரியாரின் குடியரசு ஏடு. தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்புணர்வு பெரும் நெருப்பாகப் பற்றி எரிந்தது. இந்தி எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பாக புதுவடிவம் எடுத்ததைக் கண்டு கலங்கிய ராஜாஜி, தன் முடிவில் இருந்து சற்று பின்வாங்கினார். தொடக்க நிலையில் உள்ள குறிப்பிட்ட வகுப்புகளில் மட்டுமே இந்தி கற்பிக்கப்படும் என்றும், அதுவும் கட்டாயமல்ல என்றும் பல சமரச அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழித்திணிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமன்று. இந்தித் திணிப்பின் மூலம் ஓர் இன அழிப்பு முயற்சி தொடங்கப்பட்டதை, பெரியாரும், அண்ணாவும் மிகச் சரியாக கண்டறிந்தனர். ஆக, தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரிமைப் போராட்டமே இந்தி எதிர்ப்புப் போராட்டமாகும். இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து இதோ அண்ணா கூறுவதைக் கவனியுங்கள்…

 

“இது மொழிப்போராட்டமல்ல. கலாச்சாரப் போர். எனவே அறவே விட்டுக் கொடுக்க முடியாது. ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றுவதாயிருந்தால் ஒன்று படையெடுப்பின் மூலமோ, அல்லது வியாபாரத்தின் மூலமோ, அல்லது கலாச்சாரத்தின் மூலமோ – ஆகிய இம்மூன்று முறைகளின் மூலம்தான் கைப்பற்ற வேண்டும். இவற்றுள் வட நாட்டினர் மூன்றாவது அதாவது கலாச்சாரத்தின் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றும் முறையைத் துவங்கி உள்ளார்கள்….

 

…. எனவே சகித்திருந்தது போதும். வாதாடிப் பார்த்ததும் போதும். இனியும் தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். இனிப் போர்; போர் ; போர் ; போர் ; போர் தொடுப்பது தவிர வேறு வழி இல்லை. இன்றைய அரசாங்கத்திற்கு போர் தவிர வேறு எதுவும் புத்தி கற்பிக்காது…”

 

என்று, இரண்டாவது முறையாக இந்தி திணிக்கப்பட்ட போது, அதற்கு எதிரான தமது போர்ப் பிரகடனத்தை, தந்தை பெரியார், தமிழ்த்தென்றல் திருவிக, ம.பொ.சி, நாரணதுரைக்கண்ணன் உள்ளிட்ட சான்றோர்கள் முன்னிலையில் அறிவித்த போது முழங்குகிறார் அறிஞர் அண்ணா.

 

இனி முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சிக்கு வருவோம். ரஜாஜியின் கண்துடைப்பு அறிவிப்புகளால் இந்திக்கு எதிராக கனன்றெழுந்த எழுச்சி அடங்கி விடவில்லை. நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்தது. தாளமுத்து – நடராஜன் என்ற இரு இளைஞர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலியாகினர். அவர்களது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டு, எரிமலையாய்த் தங்களுக்குள் குமுறிய உணர்வுகளை தகிக்கும் கண்ணீர்த்துளிகளாக வடித்து நின்றுள்ளனர்.

 

தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களில் பெரியாருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், அண்ணாவுக்கு 4 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இருவரும் ஒரே சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டனர். இதைத் தமக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவே கருதியதாக பின்னாளில் அண்ணா கூறியுள்ளார்.

 

இந்த நிலையில்தான், மாகாணத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த நீதிக்கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1940ல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பதவியில் இருந்து விலகி விட்டார். பின்னர் நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிக்கட்சியின் தலைவராக பெரியாரும், பொதுச்செயலாளராக அண்ணாவும் பொறுப்பேற்ற அந்தத் தருணத்திலேயே இருவருக்கிடையேயான சிறு சிறு முரண்பாடுகளும் தொடங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1942ம் ஆண்டே ஈரோட்டில் இருந்து வெளிவந்த விடுதலையில் இருந்து விலகி, காஞ்சிபுரத்திற்கு வந்து  திராவிட நாடு இதழை அண்ணா தொடங்கியது, அத்தகைய விரிசல்களின் வெளிப்பாடாகாவே பார்க்கப்படுகிறது. “விடுதலை” இருக்க, “திராவிட நாடு” பத்திரிகை ஏன் என்ற கட்சித் தோழர்களின் கேள்விக்கு, ஈரோட்டில் இருந்து வெளிவரும் “விடுதலை”யின் ஒட்டுமாஞ்செடிதான் காஞ்சிபுரத்தில் இருந்து வெளியாகும் “திராவிட நாடு” இதழ் என பதிலளித்துள்ளார் அண்ணா. பதிலில் சமத்காரம் இருந்தாலும், மனதிற்குள் சஞ்சலம் இருந்ததையே அண்ணாவின் அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்தி உள்ளன.

 

காலம் சுழல்கிறது. அரசுப் பதவி, அதிகாரம் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்காக நீதிக்கட்சியைத் தொடங்கிய கனதனவான்களுக்கும், சமூக ஏற்றத்தாழ்வு அகல வேண்டும் என்பதையே தனது முதல் குறிக்கோளாகக் கொண்ட பெரியாருக்கும் இடையே இயல்பாகவே விரிசல் விழத்தொடங்கியது. 1944 ல் நடைபெற்ற சேலம் மாநாட்டில், நீதிக்கட்சியில் உள்ளவர்கள் தங்களது அரசு சார்ந்த பதவிகளைத் துறக்க வேண்டும் என்பதோடு, தேர்தல் அரசியலிலும் பங்கேற்கக் கூடாது என்ற கடும் நிபந்தனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை பெரியாரும் அண்ணாவும் முன்வைத்தனர். நீதிக்கட்சியின் ஆய்வுக்குழு இந்தத் தீர்மானத்தை நிராகரித்தது.  ஆனால், பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போது, பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் அதனை ஆரவாரத்துடன் வரவேற்றனர். நீதிக்கட்சியைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் தாமாகவே மாநாட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

 

(தொடர்ந்தும் பேசுவோம்)

 

 

_____________________________________________________________________________________________________________