முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் – 11 – முரண்பாட்டில் முகிழ்த்த திமுக! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

 

Arasiyal pesuvom – 11

______________________________________________________________________________________________________________

 

1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக, 1945ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற பழைய பெயர், திராவிடர் கழகமாக மாற்றமடைந்தது. அதில்தான் “சென்னை மாகாணமான திராவிட நாடு, சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூரண சுதந்திரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.anna periyar 7.5.16

 

திராவிடர் கழகத்தின் வளர்ச்சியைப் போலவே, பெரியார், அண்ணாவுக்கு இடையேயான முரண்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போயின.

 

1944ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டி.கே.சண்முகம் குழுவினரால் ஈரோட்டில் “தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு” நடத்தப்பட்டது. இந்த மாநாட்டைக் கண்டித்து குடியரசு ஏட்டில் பெரியார் கடுமையான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அண்ணாவோ அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பாராட்டுரையும், சிறப்புரையும் ஆற்றி இருக்கிறார்.

 

அடுத்தபடியாக திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்ற பெரியாரின் வலியுறுத்தலிலும், அண்ணாவுக்கு கருத்து பேதம் இருந்துள்ளது. “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” திராவிடர் கழகமாக உருவெடுத்த திருச்சி மாநாட்டில், “கருப்புச் சட்டைத் தொண்டர் படை” உருவாக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரியாரின் அண்ணன் மகனான ஈவெகி சம்பத்தும், கவிஞர் கருணானந்தமும் தற்காலிக அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்படி முதலில் கருப்புச் சட்டைத் தொண்டர் படையினர் மட்டும் கருஞ்சட்டையை அணிந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கழகத்தவர் அனைவரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என பெரியார் கட்டளையிடத் தொடங்கினார்.

 

இது பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த முரண் உணர்வை, மேலும் ஊதித் தீயாக எரிய வைத்தது. கருப்புச் சட்டை அணியும் விவகாரத்தில் முதலில் மறைமுகமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த அண்ணா, 1948ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தி.க சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் வெளிப்படையாகவே அதனைத் தெரிவித்து விட்டார். இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் கருப்புச் சட்டையை அணிய வேண்டும் என்பதில் தமக்கு உடன்பாடில்லை எனக் கூறிய அவர், அதற்கான காரணங்களையும் விளக்கி உள்ளார். அதாவது, தமிழ்ச் சமூகத்தில் கருப்பு என்பது அமங்கலத்தின் நிறமாக வெகுசன மக்கள் மத்தியில் கருதப்படும் வழக்கம் இருப்பதால், அதனை அணிவதன் மூலம், மைய நீரோட்ட அரசியலில் இருந்து விலகி நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கை உணர்வு அண்ணாவிடம் இருந்துள்ளது.

 

இதேபோல் மற்றொரு விவகாரத்திலும் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் முரண்பாடு எழுந்துள்ளதைக் காண முடிகிறது. இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் கழகநிதிக்கு பணம் தருமாறும், தேவையற்ற மாநாடுகளை நடத்தி வீணாகச் செலவு செய்ய வேண்டாம் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அண்ணாவோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 55 வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பொற்கிழி வழங்குவதற்காக, கழகத்தவரிடம் 25 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினார். தனது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் பெரியார் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

 

இப்படிப் படிப்படியாக இருவருக்கு இடையேயும் வளர்ந்து வந்த கசப்புணர்வு, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவுக்கு விடுதலை கிடைத்ததாக அறிவிக்கப்பட்ட போது, உச்சத்தை எட்டியது.

 

anna kalaingar mgr periyarஅந்நியர்களின் கைகளில் இருந்த அதிகாரம், வர்ணாசிரமவாதிகள் கைக்கு மாறி இருக்கிறதே தவிர, இதனால் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை என்று கூறி, சுதந்திரதினத்தை திராவிடர்களின் “துன்ப நாளாக” அறிவித்தார் பெரியார். பெரியாரது இந்தக் கருத்தில் இருந்து முரண்பட்ட அண்ணா, தனது  திராவிட நாடு ஏட்டில் “இன்ப நாள்” என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற நாளை கருப்பு நாளாக அறிவிப்பதன் மூலம், வெகுமக்களின் வெறுப்புக்கு கழகம் ஆளாக நேரிடும் என்பதை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார். மேலும், ஜின்னாவின் லீக் கட்சி தேர்தலில் போட்டியிட்டு தமக்கிருந்த மக்கள் செல்வாக்கை நிரூபித்ததன் மூலமே பாகிஸ்தான் பிரிவினையை சாதிக்க முடிந்தது என்றும், திராவிட நாடு பிரிவினைக்காக அத்தகைய முயற்சி எதுவும் திராவிடர் கழகத்தால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் அண்ணா விமர்சித்திருந்தார். சுதந்திர தின விவகாரத்தில் தமது இந்தக் கூற்று கட்சி விரோதமாகக் கருதப்பட்டு, கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டாலும், வெளியில் இருந்து அதே கொள்கைகளுக்கான தமது போராட்டம் தொடரும் என்றும் அண்ணா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

அண்ணாவின் அந்த அறிக்கை, திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் வெகுசன இயக்கமாக மாற வேண்டும் என்று அவர் விரும்புவதை வெளிப்படுத்தியது. மேலும், கட்சியில் இருந்து தம்மை பெரியார் வெளியேற்றக் கூடும் எனவும் அவர் எதிர்பார்த்ததை அறிய முடிகிறது.

 

ஆனால், பெரியார் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரவர் நிலையில் இருந்து மாறாமலேயே, கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளரும் பதவிகளில் நீடித்தனர். 1948 ஜூலை மாதம், அப்போதைய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அரசு சென்னை மாகாணத்தில் இந்தியை மீண்டும் கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டது. இந்தி எதிர்ப்பு விசை, பெரியாரையும், அண்ணாவையும் மீண்டும் நெருங்க வைத்தது. இந்த நெருக்கத்தை கழகத்தினருக்கும், மக்கள் மன்றத்திற்கும் எடுத்துக்காட்டும் வகையில் ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டுக்கு அண்ணாவே தலைமை தாங்கினார். திருவிக சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பேசிய பெரியார், தமக்கு வயது 70ஐத் தாண்டி விட்டதால், பெட்டிச் சாவியை அண்ணாவிடம் தந்து விடுவதாகக் கூறினார். தந்தையாகிய தாம் தமது கடமையைச் செய்து விட்டதாகவும், இனி தனயன் தம் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தமது பேச்சில் குறிப்பிட்டார் பெரியார்.periyar maniyammai

 

ஆனால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நடந்த நிகழ்வோ, பெரியாரின் இந்தப் பேச்சுக்கு நேர்மாறாக இருந்தது. 1949ம் ஆண்டு மே மாதம், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, டெல்லியில் இருந்து திருவண்ணாமலை வந்த, இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜியை நேரில் சென்று பெரியார் சந்தித்தார். மணியம்மையும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். ஒருமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் குறித்து, நண்பர்கள் இருவருமே எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ராஜாஜியுடனான சந்திப்பு குறித்து மக்களுக்கு பெரியார் விளக்கமளிக்க வேண்டும் என்று, கோவை மாநாடு ஒன்றில் அண்ணா வேண்டுகோள் விடுக்கிறார். அப்போது, அது எனது தனிப்பட்ட விவகாரம் எனக் கூறி, பெரியார் பதிலளிக்க மறுத்து விடுகிறார்.

 

அதன் பின்னர், 1949ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதிதான் திமுக உதயமாவதற்குக் காரணமாகக் கூறப்படும் அந்த அறிக்கையைப் பெரியார் வெளியிடுகிறார்.

 

1943ம் ஆண்டு முதல், இல்லத்தில் தமக்கு உதவியாக இருந்து வந்த வேலூர் கனகசபை என்ற கழகத் தோழரது புதல்வியான மணியம்மையை, எப்படியேனும் தமக்கு வாரிசாக்கிக் கொள்ளப் போவதாக 1949ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகிறார் பெரியார். அதாவது, அப்போதைய சட்டப்படி பெண் ஒருவரை மகளாக தத்தெடுத்து வாரிசுரிமையாக்க முடியாத நிலை இருந்துள்ளது. இதனால், அந்தப் பெண்ணை சட்டபூர்வமாக மணந்து, பொறுப்புகளை அவரிடம் ஒப்படைக்க  வேண்டிய நிலை ஏற்பட்டதாக பெரியார் தரப்பில் பின்னாளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

அறிக்கை வெளிவந்ததும் திராவிடர் கழகத் தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் அலை மோதின. அடுத்து என்னாகுமோ என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களைப் பற்றிக் கொண்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட அண்ணா, அதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.

 

விளைவு… 1949ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி, திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூட்டம் கூடியது. இதில் அன்றைய தி.க நிர்வாகிகள் 46 பேரில் 32 பேர், பெரியார் – மணியம்மை திருமணத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தனர். இதன் தொடர்ச்சியாக பெரியாரின் “விடுதலை” ஏட்டில் வரும் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், “மாலைமணி” என்ற நாளேட்டைத் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. 1949ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் அடுத்து வரும் செப்டம்பர் 17ம் தேதி பெரியார் மீது அதிருப்தி கொண்ட தி.க நிர்வாகிகளின் குழு கூடும் என மாலைமணி நாளேட்டில் தகவல் வெளியானது.

 

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள். அதே நாள் காலையில்தான் பெரியார் மீது அதிருப்தி கொண்டவர்களின் அந்தக் கூட்டம் கூடியது.

 

இதில், அதிருப்தியாளர்கள் 23 பேர் பங்கேற்றனர். ஆக திராவிடர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 46 பேரில் சரிபாதி எண்ணிக்கை உள்ளவர்கள் அண்ணா கூட்டிய அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

திராவிடர் கழகத்துக்கு போட்டியாக இயக்கம் நடத்தாமல், அதில் இருந்து தோன்றிய பரிணாம அமைப்பாக “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் இயங்கலாம் என்ற அண்ணாவின் கருத்தை அனைவரும் ஏற்றனர். “திராவிட முன்னேற்றக் கழகம்” உதயமானது. என்.வி.நடராசனை செயலாளராகக் கொண்டு ஓர் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. “திராவிட முன்னேற்றக் கழகம்” தொடங்கப்படுவதற்கான தீர்மானத்தை அந்தக் குழு அன்றே நிறைவேற்றியது.

 

“திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த இயக்கத்திற்கு ஏன் “திராவிட முன்னேற்றக் கழகம்” என “ர்” விகுதியைத் தவிர்த்து விட்டு பெயர் வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அண்ணா கூறிய விளக்கம் முக்கியமானது. திராவிட மண்ணில் திராவிடர்கள் மட்டுமே வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும் எனக் கூறிய அண்ணா, இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்ளும் எந்த இனத்தவரும் இன்ப வாழ்வு வாழப் பணியாற்றுவதே நம் கட்சியின் லட்சியமாகும் எனவும் தெளிவு படுத்துகிறார். இங்கே திராவிடமும் வாழலாம், ஆரியமும் வாழலாம் என்றும் கூறி, திராவிட இயக்கக் கருத்தியலை விசாலமாக்கும் தமது நோக்கத்தையும் அப்போதே வெளிப்படுத்தி உள்ளார் அண்ணா.

 

கட்சியின் பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவி காலியாகவே விடப்பட்டது. அதே கூட்டத்தில் விரிவான பொதுக்குழுவும் அமைக்கப்பட்டது. சி.என்.அண்ணாதுரை, இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத்… என அந்த வரிசை நீண்டது.

 

நீதிக்கட்சிக்கு உள்ளேயே திராவிடர் கழகமும், திராவிடர் கழகத்திற்கு உள்ளேயே திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாகி ஒரு கட்டத்தில் அவை வெடித்து வெளிப்பட்டிருப்பதை வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

 

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு, நிர்வாகக் குழுக்கள் அமைக்கப்பட்ட அன்று மாலையே, சென்னை ராபின்சன் பூங்காவில் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

 

________________________________________________________________________________________________________________