முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

Arasiyal pesuvom – 14

_________________________________________________________________________________________________

 

anna swearing1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

 

திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை.

 

அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது.

 

“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும், இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்குள், இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்றவாறு கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது.

 

இதன் மூலம் பிரிவினை கோரும் இயக்கம் என்ற அரசியல் எதிரிகளின் விமர்சனத்தில் இருந்து திமுக தப்பிக்க வழி பிறந்தது.

 

ஒருவேளை திராவிட இயக்கத்தின் வேலைத் திட்டத்தையும், இயங்கு திசையையும் இப்படி சற்றே திருத்தி அமைக்காமல் போயிருந்தால், இப்போது அடிக்கடி கூறிப் பெருமிதப் பட்டுக் கொள்கிறார்களே – தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது  என்று – அது கனவிலும் நடவாத ஒன்றாகவே போயிருக்கும். இன்று திராவிட இயக்கம் குறித்து கடும் வெறுப்புணர்வை இளையதலைமுறையினர் மத்தியில் விதைக்கப் பாடு படும் பலரும், தமிழ்ச் சமூகத்தின் அரசியலில் அண்ணா நிகழ்த்திய அத்தகைய வேதிவினையின் அர்த்தமுள்ள வீரியம் குறித்துப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.

 

காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த மூன்றாம் உலகச் சூழல் என்பது, அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் கையில் அதிகாரம் கை மாறிய தருணமாகும். அத்தகைய சூழலில் தேசிய இன அடிப்படையிலான போராட்டங்கள், வல்லாதிக்கத்துக்கு எதிரான குரல்கள் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்தித்தன. இந்தப் போக்குக்கு வியட்நாம் சந்தித்த நெருக்கடிகளையே உதாரணமாகக் கொள்ளலாம். பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை மாவீரன் ஹோசி மின் தலைமையேற்று நடத்திய போர் மூலமாக சுதந்திரக் காற்றை வியட்நாமின் ஒரு பகுதி (வடவியட்நாம்) மட்டுமே சுவாசிக்க முடிந்தது, பின்னர் பிரெஞ்சின் நயவஞ்சகத்தால் தெற்கு, வடக்காக பிரிந்தது. ஹோசிமின் போன்ற கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் உலகில் பரவ அனுமதிக்கக் கூடாது என்ற பிரெஞ்சின் வெறியூட்டும் பிரச்சாரத்தில் அதிகார உன்மத்தம் தலைக்கேறிய அமெரிக்கா, ஹோசிமினை ஒடுக்குவதற்காக தெற்கு வியட்நாமை ஆதரித்தது. ஹோசிமின் தலைமையிலான வடக்கு வியட்நாமுடன் போரிட்டது. ஏறத்தாழ ஹோசிமின் மறைந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வரை இந்தப் போர் நீடித்தது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், புத்தபிட்சுகள் என எந்த வரைமுறையும் இன்றி, லட்சக்கணக்கான வியட்நாம் மக்களை அமெரிக்காவின் ஆணவ வெறி கொண்ட ராணுவம் சூறையாடித் தீர்த்தது. ஹோசிமின் படையினரின் கொரில்லா உத்தியைக் கொண்ட போர்த் தீரமும், வியட்நாமின் சிக்கலான புவியல் தன்மையும் அமெரிக்க ராணுவத்தை நிலைய குலைய வைத்து அங்கிருந்து விரட்டியது. ஆனால், இந்த வெற்றியை அடைய வியட்நாம் மண்ணும், மக்களும் கொடுத்த விலை மிக,மிக அதிகமானது.

 

anna 2சர்வதேச அளவில் அப்போது நடைபெற்று வந்த இத்தகைய “போரழிவு”களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்த அண்ணா, தனது மக்களுக்கும், மண்ணுக்குமான அரசியலை மிக லாவகமாக வடிவமைக்கத் திட்டமிட்டதன் விளைவுதான், திராவிட நாடு கோரிக்கையில் ஏற்பட்ட திருத்தமும், திராவிட இயக்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும் ஆகும்.

 

அதாவது, மூன்றாம் உலகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் வடிவமாக பரவலாகி நிலைபெறத் தொடங்கிய, ஜனநாயக கூட்டாட்சி அமைப்புக்குள் ஊடுருவி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே, காலத்துக்கு ஏற்ற அரசியல் போராட்ட நகர்வாக இருக்கும் என அண்ணா தீர்மானித்தார்.

 

பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, ஏதிலிகளாகத் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் இனத்தைச் சேர்ந்த எளிய மக்களின் கையில் ஆயுதத்தைக் கொடுத்தால் அது எங்கே போய் முடியும் என்பதை அவர் தீர்க்க தரிசனமாக உணர்ந்திருந்தார். அதற்கு மாற்றாகத்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரத்தை அவர் தேர்ந்தெடுத்தார்.

 

பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று மாவோயிஸ்டுகளாக மாறிப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள்தான். அவர்கள் எத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள், அவர்களது வாழ்நிலை எந்த அளவுக்கு பரிதாபகரமானதாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

 

அன்றாடத் தேவைகளுக்கே போராடிக் கொண்டிருந்த தமிழர்களின் கையில், ஆயுதத்தைக் கொடுத்திருந்தால் அவர்களது நிலையும் இப்படித்தான் இருந்திருக்கும். உரிமைகளுக்கான போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் நோக்கத்துடனோ, அதன் வீரியத்தைக் குறைத்து மதிப்பிடும் நோக்கத்துடனோ இதைக் குறிப்பிடவில்லை. எந்த ஒரு உரிமைப் போராட்டமும் காலத்துக்கு ஏற்ற வடிவத்தில் முன்னெடுக்கப் படும் போது, அது மக்களின் ஆதரவைப் பெறுவது மட்டுமின்றி, அடையும் வெற்றியும் வேறொரு பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கும். திராவிட இயக்கம் அடைந்திருக்கும் வெற்றியும் அத்தகையதுதான். அதனால்தான் நூறு ஆண்டுகள் கடந்த பிறகும் அதன் அரசியல் நகர்வும், இருப்பும் உயிர்ப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், திராவிட இயக்கத்தின் அரசியல் உட்கிடக்கையை, காலத்துக்கு ஏற்ப தகவமைத்த அண்ணாவின் அரசியல் தீர்க்கம்தான்.

 

காலத்துக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளாத எந்த உயிரினமும் உலகில் வாழ முடியாது என்ற உயிர்ப்பரிணாமக் கோட்பாடு, அரசியல் உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும்தானே! அந்த அடிப்படையில்தான் அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை குறித்த அணுகுமுறை மாற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இந்தி எதிர்ப்பு என்ற முழக்கத்துடன் கிளர்ந்தெழுந்த தமிழ்ச் சமூகத்தின் மனப் பரப்பு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்த தேசிய இன உணர்ச்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயக பேரரசியல் வடிவமாக உருமாற்றும் பெரும்பணியைத் தான் அண்ணா செய்திருக்கிறார்.

 

சென்னை ராஜதாணியாக இருந்த தமிழ் மண்ணின் குடியரசு, தமிழக அரசாக பெயர் மாற்றம் பெற்றது முதல், சாதி மறுப்புத் திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரமும், சலுகைகளும் வழங்கப்பட்டது, தமிழகத்தில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது வரையிலான பல்வேறு சாதனைகளை, இத்தகைய கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலமாகத்தான் தமிழர்கள் பெற முடிந்தது.   anna 1

 

தமிழகத்தில் தமிழர்களின் உரிமைப் போராட்டம், இந்தி எதிர்ப்பு வடிவத்தில் வன்முறையாக வெடித்த போது, இலங்கையில், நமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ்ச் சொந்தங்கள் தங்களுக்கான உரிமைப் போராட்டத்தை தந்தை செல்வா போன்றவர்களின் தலைமையில் அற வழியில்தான் தொடங்கினர். ஆனால், தமிழகத்தில் அண்ணாவின் அறிவார்ந்த அணுகுமுறையால் அரசியல் வடிவத்தை அடைந்த தமிழர்களின் உரிமைப் போராட்டம், ஈழத்தில் ஆயுதப் போராட்டமாக உருமாறியது. அதன் திசையும் மாறியது.

 

உலகிலேயே, இனவழி உரிமைப் போராட்டத்தை, வீழ்த்த முடியாத அரசியல் அதிகார வலிமை பெற்ற ஜனநாயகப் பேராற்றல் கொண்ட அமைப்பாக மாற்றிய சாதனையை அண்ணா மட்டுமே நிகழ்த்திக் காட்டி உள்ளார். அவரைத் திராவிட இயக்கங்களே கூட முழுமையாகப் புரிந்து கொண்டாடத் தவறிவிட்டன என்பதுதான் உண்மை.

 

திராவிட நாடு கோரிக்கை என்ற அளவில் இயக்கத்தின் வேலைத் திட்டத்தை பெயரளவுக்குத் திருத்திக் கொண்டாலும், அண்ணா தலைமையில் இந்திக்கு எதிரான அதன் போராட்டம் வீரியத்துடனேயே தொடர்ந்தது. அதுவே திமுகவையும், அண்ணாவையும் ஆட்சிக் கட்டிலிலும் அமர வைத்தது. அதனை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

(தொடர்ந்து பேசுவோம்)

 

__________________________________________________________________________________________________________