Arasiyal pesuvom – 15
___________________________________________________________________________________________________________
1963ம் ஆண்டு தமிழக அரசியலில் நிகழ்ந்த வேறு சில மாற்றங்களும் கூட திமுகவின் வெற்றிப் பயணத்துக்கான வழியை எளிதாக்கக் கூடியவையாகவே இருந்தன.
இந்திய – சீன எல்லைப் போரின் விளைவுகளால் பிரதமராக இருந்த நேருவின் செல்வாக்கு சரியத் தொடங்கி இருந்த காலமது. இதனைச் சரிக்கட்டுவது குறித்து காமராஜருடன் ஆலோசித்த நேரு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக, மாகாண அளவிலான காங்கிரஸ் தலைவர்கள், தங்களது அரசு பதவிகளைத் துறந்து, கட்சிப் பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதன்படி ராஜினாமா செய்த 42 பேரில், தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜரும் ஒருவர். இந்தத் திட்டமே காமராஜர் திட்டம், அதாவது K Plan என அப்போது அழைக்கப்பட்டது.
இதனால், தமிழகத்தின் முதலமைச்சராக எம். பக்தவச்சலம் நியமிக்கப்பட்டார். காமராஜர் காலத்தில், தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம், ஏராளமான நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் என சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பக்தவச்சலத்தின் ஆட்சியிலோ எதிர்மறையான நடைமுறைகளே அதிகரித்திருந்தன.
இதனிடையே, 1964ம் ஆண்டு மே மாதம் நேரு மறைந்தார். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அசைக்க முடியாத செல்வாக்குடன் விளங்கி வந்த பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் முத்துராமலிங்கத் தேவர் 1963ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காலமானார். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது. அரசியல் களத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திமுகவின் அரசியல் வெற்றிக்கான வழியை விசாலப்படுத்திக் கொண்டே சென்றன.
1963ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் “ஆட்சி மொழிகள் சட்டம் 1963” – ஐ மத்திய அரசு மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடுமையாக பேசிய அண்ணா, தமிழகத்தில் அதற்கான போராட்டத்திட்டங்களையும் வகுத்தார். அதன் படி அரசியல் சாசனத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரைப் போலவே திமுகவின் மற்ற முன்னணித் தலைவர்களும் திட்டமிட்டபடி ஐவர், ஐவராகப் பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். இந்தச் சிறைவாசத்தின் போதுதான் கலைஞர் கருணாநிதி கதைவசனம் எழுதி, எம்.ஜி.ஆரும், எஸ்.எஸ்.ஆரும் நடித்த “காஞ்சித் தலைவன்” படம் வெளிவந்தது. “காஞ்சித் தலைவன்” என்று அண்ணாவைக் குறிக்கும் பெயரோடு வெளிவந்த அத்திரைப்படம் திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பையும், கிளர்ச்சி உணர்வையும் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.
1964 ம் ஆண்டு மத்திவரை இத்தகைய சிறைநிரப்பும் போராட்டத்தை மேற்கொண்டிருந்த திமுகவினர், 1965ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தை துக்கநாளாக அனுசரிக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் ஜனவரி 25ம் தேதி நள்ளிரவே அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். முன்னதாகச் சென்னையிலும், மதுரையிலும் மாணவர்கள் திரண்டெழுந்து பங்கேற்ற ஊர்வலங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மதுரையில் மாணவர்கள் மீது ஆளும் காங்கிரஸ் அரசு கடும் அடக்குமுறையை ஏவி விட்டது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் இந்திக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். திருச்சியில் சின்னச்சாமி, வீரப்பன், சென்னையில் அரங்கநாதன், கோவையில் முத்து, மாயவரத்தில் மாணவர் சாரங்கபாணி போன்றோர் தீக்குளித்து மாண்டனர். அதே ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிப்ரவரி 12ம் தேதி மேலும் 6 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். இந்தி எதிர்ப்புணர்வு இப்படிக் காட்டுத் தீயைப் போல் பரவியது. பிப்ரவரி 18ம் தேதி, ஒருவழியாகப் பணிந்த மத்திய அரசு, “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என நேரு அளித்த உறுதிமொழி சட்டமாக்கப்படும்” என அறிவித்தது. போராட்டத்தின் தீவிரமும் குறைந்தது. என்றாலும் இந்தி எதிர்ப்புணர்வு என்பது நீறு பூத்த நெருப்பாக மாணவர்களுக்குள்ளேயும், திமுகவினருக்குள்ளேயும் கனன்று கொண்டுதான் இருந்தது.
போராட்டங்களும் அவை தந்த புத்துணர்வுமாக திமுக 1967 பொதுத்தேர்தலுக்கு தயாரானது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் அணிவகுப்பைத் திரட்டினார் அண்ணா.
தேர்தலுக்கு முன்பாக 1966ம் ஆண்டு டிசம்பர் 29ல் சென்னை விருகம்பாக்கத்தில் திமுகவின் நான்குநாள் மாநாடு நடைபெற்றது.
கட்சியின் பொருளாளரான கலைஞர் கருணாநிதி, தேர்தல் நிதியாக 11 லட்சம் ரூபாயை அண்ணாவிடம் ஒப்படைத்தார். மாநாட்டில் உரையாற்றிய எம்.ஜி.ஆர் முழு ஆற்றலையும் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என சூளுரைத்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, இந்தித் திணிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் குறிப்பிட்டு திமுகவின் தேர்தல் அறிக்கையை அம்மாநாட்டில் வெளியிட்டார் அண்ணா. உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தை அமலாக்கக் கழகம் உறுதி கொண்டிருப்பதாக அந்தத் தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டிருந்தது. காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இருப்பது திமுகழகம் தான் என்பதால், காங்கிரசை மக்கள் நிராகரித்தால் அடுத்த வாய்ப்பு திமுகவுக்கே கிடைக்கும் என்பதையும் அண்ணா அந்த மாநாட்டு உரையில் சுட்டிக்காட்டினார்.
இவற்றையெல்லாம் தாண்டி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம், திமுகவின் மீதான மக்களின் பார்வையை ஏகோபித்துத் திருப்பிவிட்டது. 1967ம் ஆண்டு, ஜனவரி 12ம் நாள், நடிகர் எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர் சுடப்பட்ட அதிர்ச்சி தரும் நிகழ்வுதான் அது.
கழுத்திலும், கையிலும் கட்டுப்போடப்பட்ட நிலையில் வெளியான எம்.ஜி.ஆரின் படம் பட்டி தொட்டியெல்லாம் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. எம்.ஜி.ஆர் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதி முழுவதும் இந்தப் படங்கள் தவறாமல் ஒட்டப்பட்டன. எம்.ஜி.ஆர் நேரடியாகச் சென்று பரப்புரையில் ஈடுபட முடியாத நிலையில், அதைவிடவும் அதிகமாக மக்கள் திரளை ஈர்க்க அவரது இந்தப் படம் உதவியது.
ஆனாலும், இவையெல்லாம் கூட காங்கிரஸ் என்ற ஆலமரத்தைச் சாய்த்துவிட உதவும் என்று அண்ணா நம்பவில்லை. தேர்தல் பரப்புரை வேகத்தில்தான் தனது கடைசி அஸ்திரமான அந்த வாக்குறுதியை அண்ணா வாக்காளர்கள் மத்தியில் முழக்கமாக முன்வைத்தார். படி அரிசியின் விலை 4 அல்லது 5 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில், “ரூபாய்க்கு 3 படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவரது இந்த வாக்குறுதி மக்களைச் சுண்டி இழுத்தது.
இப்படியாக 1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் மீண்டும் அரியணை ஏற முடியாத அளவுக்கு ஆழமான குழியில் காங்கிரஸ் தள்ளப்படும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஒரு தொகுதி தவிர 233 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக மட்டுமே 138 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மைக் கட்சியாக உருவெடுத்தது.சுதந்திரா கட்சியும் பார்வர்டு ப்ளாக் கட்சியும் சேர்ந்து 20 இடங்களைப் பிடித்திருந்தன. மார்க்சிஸ்ட் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எதிரணியான காங்கிரஸ் கட்சியால் 49 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்திருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில்தான் தன் சொந்தத் தொகுதியான விருதுநகரிலேயே, பெ.சீனிவாசன் என்ற மாணவர் தலைவரால் தோற்கடிக்கப்பட்டார் காமராஜர்.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை, திமுகவுக்கு 41 விழுக்காடு வாக்குகளும், காங்கிரசுக்கு 42 விழுக்காடு வாக்குகளும் விழுந்திருந்தன. தேர்தலில் வெற்றி பெற முறையான கூட்டணி உடன்பாடு அவசியம் என்பதை 1967 தேர்தல் தெளிவாக உணர்த்தியது.
தேர்தல் வெற்றித் தகவல்கள் வரத் தொடங்கிய போது அண்ணா கடுமையான மௌனத்தில் உறைந்திருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. தோல்வியை விட வெற்றியை மிகக் கவனத்துடன் எதிர் கொண்ட அண்ணா, பெரியாரைச் சந்திப்பதற்காக உடனடியாகத் திருச்சிக்கு விரைந்தார். அவரது இந்த நடவடிக்கை யாரும் எதிர்பாராதது. “இந்த வெற்றியும் அரசும் உங்களுக்கே சமர்ப்பணம்” என்று கூறி, தந்தை பெரியாரின் வாழ்த்தைப் பெற்றார் அந்தத் தனையன். 18 ஆண்டுகாலமாக தன்னைக் கடுமையாக விமர்சித்து வந்த தனது தத்துவார்த்தத் தந்தையை, வெற்றியின் எல்லையைத் தொட்ட பின்பு எந்தத் தயக்கமுமின்றி சென்று சந்தித்த அண்ணாவின் பண்பு இன்றளவும் வியந்து பேசப்படுகிறது. வெற்றிக்கு உதவிய ராஜாஜியையும், தோற்கடிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சரான பக்தவச்சலத்தையும் அவர் சந்திக்கத் தவறவில்லை.
இத்தனை களேபரத்திலும் அண்ணா சட்டப்பேரவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அண்ணாதான் முதலமைச்சர் என்று முடிவானது. மார்ச் 6ம் தேதி அண்ணா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. கல்வி அமைச்சராக நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி, உணவு அமைச்சராக மதியழகன், விவசாய அமைச்சராக ஏ.கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்டோர் துறை அமைச்சராக சத்தியவாணி முத்து, சட்ட அமைச்சராக மாதவன், சுகாதார அமைச்சராக சாதிக் பாட்ஷா, உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.முத்துசாமி ஆகியோர் “உளமார” என்ற சொல்லைக் கூறி, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
__________________________________________________________________________________________________________