அரசியல் பேசுவோம் – 19 – தலைப்புச் செய்திகளை மாற்றச் செய்யும் தந்திரம் – குதர்க்க அரசியலின் குத்தாட்டம் : செம்பரிதி

Arasiyal pesuvom – 19 : Chemparithi
_______________________________________________________________________________________

farmers protestஒரு வழியாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்த தகவல்கள், மறுநாள் நாளேடுகளில் முதன்மைச் செய்தியாகவோ, தலைப்புச் செய்தியாகவோ இடம்பெறவில்லை. தஞ்சை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த தேர்தலையும், திருப்பரங்குன்றம் தொகுதியில் நடத்தப்பட வேண்டிய இடைத்தேர்தலையும் நவம்பர் 19ம் தேதி நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு, அத்தனை நாளேடுகளிலும் தலைப்புச்செய்திக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஜனநாயகமாம்…. தேர்தல் செய்தி முக்கியமானதாம்… அதனால் பத்திரிகைகள் அதனைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.

 

 

அடுத்தடுத்த பக்கங்களில் விவசாயிகளின் பெருந்திரள் போராட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு, தங்களுடைய “பத்திரிகா தர்மத்தை” காப்பாற்றிக் கொள்ளவும் அவை தவறவில்லை. காரணம், ஊடகங்களில் விவசாயிகள் போராட்டம் அவ்வப்போது நேரலையாக ஒளிபரப்பப் பட்டதால், அந்தச் செய்திகள் நாளேட்டில் இடம்பெறவில்லையே என பாமர வாசகன் நினைக்கக் கூடுமல்லவா? ஊடகங்களைப் பொறுத்தவரை, கூட்டம் இருந்தால் அந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்பது வர்த்தக ரீதியான எழுதப்படாத விதி. அவர்களைப் பொறுத்தவரை கோவில் திருவிழாவோ, போராட்டமோ… கூட்டம் இருக்கிறதா.. அங்கே நேரலை ஒளிபரப்புக்கான சாதனங்களுடன் ஓட வேண்டும் என்பதுதான் உரிமையாளர்களாக இருக்கும் அதிபர்களின் உத்தரவு. அதன்படி அக்காட்சிகள் நேரலையாக அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டதால், செய்தித்தாள்களும் வேறு வழியில்லாமல் அவற்றை இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பக்கங்களில் படங்களுடன் வெளியிட்டுள்ளன.

 

 

ஆக, உயிராதாரப் பிரச்னைக்காக மக்கள் திரள் நடத்தும் போராட்டம் பற்றிய தகவல்கள் தலைப்பில் இடம்பெற்றுவிடக் கூடாது என்ற ஆளும் வர்க்கத்தின் கவனமான தந்திரம் இங்கே வென்று விட்டது. இதுமுதல் முறையல்ல. இதற்கு முன்னரும் பல முறை இது நடந்துதான் இருக்கிறது.

 

 

விவசாயிகள் போராட்டங்களை நேரலையாக ஒளிபரப்பிய ஊடகங்களோ, இரவு நடைபெற்ற விவாத நிகழ்ச்சிகளில் தேர்தல் அறிவிப்புக்குத் தாவி விட்டன. தேர்தல் அறிவிப்பில் விவாதிக்க என்ன இருக்கிறது. அது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம். நிறுத்தப்பட்டதும் நாடகம். இப்போது அறிவிக்கப்பட்டதும் நாடகம். இதில் விவாதித்து, அலசி, ஆராய்ந்து புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? அதிகார வர்க்கத்தின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டுமென்ற விசுவாசத்தைத் தவிர, அதில் வேறு எந்த விசேஷ காரணங்களும் இல்லை.

 

 

சரி… முதலமைச்சர் ஜெயலலிதாதான் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருக்கிறாரே… அவர் என்ன செய்வார்… தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்கு, ஆளும் கட்சிதான் என்ன செய்யும் என்ற கேள்வியை ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் கேட்கலாம்.

 

 

தேர்தல் ஆணையம் என்ன வானத்தில் இருந்தா குதித்து வந்தது. மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும், அதன் சமிக்ஞைகளுக்கு ஏற்ப இயங்கும் ஓர் அமைப்புதானே…! மைய அரசைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் அறிவிப்பின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறது. காவிரிப் பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு இருக்கும் கொந்தளிப்பும், கோபமும் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பொதுப்புத்தி சார்ந்த கவனத்தின் மையமாக இப்போது தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது. கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தவும், காவிரிப் பிரச்னையில் ஆடும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் உதவும்.

 

 

பாஜகவைப் பொறுத்தவரை தமிழகம்தான் வேண்டாத மாநிலமே தவிர, ஆட்சியில் இருக்கும் அதிமுகமீது அக்கட்சிக்கு “இயற்கையான” அன்பும், அனுசரிப்பும் உண்டு. அந்த வகையில், காவிரி நீருக்கான போராட்டத்தின் தீவிரம் குறைவதும், அது தொடர்பாக தமிழக விவசாயிகள் கொண்டுள்ள ஆதங்கமும், ஆத்திரமும் அரவமின்றி அடக்கப்படுவதும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவுக்கும் சற்றே நிம்மதிப் பெருமூச்சை வரவழைக்கக் கூடியதுதானே!

 

நல்லவேளையாக ஒருநாள் கூத்தாக முடித்து விடாமல், இரண்டாவது நாளும் இத்தகைய போராட்டங்களை நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

 

 

அரசுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் போதெல்லாம் அதனை மழுங்கடிக்கவும், மடைமாற்றம் செய்யவும் அதைவிடப் பெரிய கோடு ஒன்றைப் போட்டு அதன் மீது கவனத்தை ஈர்ப்பது ஹிட்லர்காலத்துத் தந்திரம்தான் எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை இன்றும் அது பயன்படக் கூடியதாகவே இருக்கிறது. அரசியல் தன்னுணர்வற்ற சமூகத்தில், மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யும் இது போன்ற சதுரங்க விளையாட்டை, அதிகார வர்க்கத்தினர் எந்தத் தடையும் இல்லாமல் மிக எளிதாகவே ஆடி முடித்துவிட முடியும்.

 

 

குதர்க்க அரசியலின் இத்தகைய குத்தாட்டங்களை எந்தச் சங்கடமும் இன்றி நாமும் வாய் பிளந்து வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.வேறென்ன செய்ய!

_______________________________________________________________________________________