முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் – 2 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

Arasiyal pesuvom – 2 : Chemparithi

_________________________________________________________________________________________________________

 

MGR in Nam1972ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதிதான் அது நடந்தது. தமிழக அரசியலின் திசையை திக்குத் தெரியாமல் சிதறடித்து, இன்றுவரை தெளிய முடியாத கதம்ப அரசியலாக மாற்றிய ஒரு புள்ளியின் தொடக்கம் என்றும் கூட அதைச் சொல்லலாம். ஆம்.. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அன்றுதான் தொடங்கப்பட்டது.

 

“கலை, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், வாழ்க்கை முறை, வரலாறு, கலாச்சாரம், இன்னபிற துறைகளின் ஒருமைகளை இயற்கையாகப் பெற்ற – சேர்ந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்கின்ற திராவிட மக்களிடையே, அனைத்துத் துறையிலும் இணைந்தும், இணையக் கூடிய துறைகளில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் இணையவும் அண்ணா திமுகழகம் விரும்புகிறது…” என்ற வாசகங்கள் இடம் பெற்ற 32 பக்க கொள்கை விளக்கக் குறிப்பின் வெளியீட்டுடன் 1972ம் ஆண்டு  அக்டோபர் 17ம் தேதி எம்.ஜி. ஆர் தலைமையிலான அதிமுக தொடங்கப்பட்டது.

 

ஆக, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான பகுத்தறிவு, மாநில சுயாட்சி உள்ளிட்ட முழக்கங்களை முற்றிலுமாக உதிர்த்துவிட்ட, வண்ணமயமான இந்திய முலாம் பூசப்பட்ட ஓர் கதம்பக் கட்சியின் கால்கோளாகவே அதிமுகவின் தொடக்கம் இருந்தது.

 

அதிமுக தொடங்கப்படுவதற்கு முன்னரே ஊழல், சுரண்டல், நிர்வாகக் குளறுபடிகள் என அனைத்துப் பின்னடைவுகளும் அரசியலுக்குள் ஊடுருவி இருந்தது உண்மைதான். ஆனாலும், குறைந்த பட்ச அரசியல் ரீதியான விவாதத்திற்கும், கருத்து மோதலுக்குமான களம் சிறிதளவு இருந்தது. அதிமுக என்ற கவர்ச்சி மற்றும் கதம்ப அரசியலின் தொடக்கம், தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையில் இருந்து அத்தகைய அரசியல் தன்னுணர்ச்சியை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விட்டது.  

 

அதன் பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் என்பது எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி என்ற தனிமனித மோதல் காட்சிகளை உள்ளடக்கியதாக மலிவாகிப் போனது. திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சிகளைப் போல, தமிழக அரசியலும் திகில்களும், திருப்பமும் நிறைந்த பரபரப்பான நிகழ்வுகள் அடங்கிய காணரங்காகக் கட்டமைக்கப்பட்டது. சிவாஜி கணேசன் தொடங்கி பாக்கியராஜ், டி.ராஜேந்தர், என நீண்டு தற்போது விஜயகாந்த் வரை நடிகர்கள் பலரும் அரசியல் கட்சிகளைத் தொடங்குவதற்கான அவலத்திற்குரிய, அசட்டுத்தனமான அரசியல் துணிச்சலை அதிமுகவின் தொடக்கம்தான் கொடுத்தது. இதற்கு எம்.ஜி.ஆரை மட்டுமே பொறுப்பாளியாக்கிவிட முடியாது.

 

mgr sivaji karuna kannadasanஎம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவருடைய தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும் நிகழ்ந்த மாற்றங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்பதைச் சில சம்பவங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சுபாவத்தில் அதிரடியான முடிவுகளை எடுக்கத் தயங்குபவராகும், அச்ச உணர்வு மிக்கவராகவுமே எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். அவர் சார்ந்திருந்த திரைப்பட மற்றும் அரசியல் சூழலே, சிறிது, சிறிதாக அவருக்குள் முரண்பட்ட உணர்வுகளையும், அழுத்தமான எண்ணப் படிமங்களையும் உருவாக்கி இருக்கிறது. ஒரு காலக்கட்டம் வரை காதல் காட்சிகளில் கதாநாயகியருடன் நெருங்கி நடிக்கத் தயங்குபவராகவே எம்.ஜி.ஆர் இருந்திருப்பதை தகவல்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. காலப் போக்கில் அவருக்குள் இருந்த அத்தகைய மென்மைப் பண்புகள் காணாமல் போய், தனக்கு எதிராக சிந்திப்பவர்களைக் கூடச் சகித்துக் கொள்ள முடியாதவராக அவர் மாறிப் போனதுதான், எதிர்காலத்தில் தமிழக அரசியலின் கெடுவாய்ப்பாகிப் போனது.

 

அப்படி என்னதான் நடந்தது?

 

தனது முதலமைச்சர் நாற்காலியின் ஒருகால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் உடையது என்று பின்னாளில் கூறும் அளவுக்கு இடதுசாரித் தத்துவங்களின் மீது ஈர்ப்பும், சார்பும் கொண்டவராக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். தமிழகத்தின் இடதுசாரித் தலைவர்கள் விரும்பி இருந்தால், அவரை மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக கூர் தீட்டியிருக்க முடியும். மாறாக அவருக்குள் இருந்த கருணாநிதி எதிர்ப்புணர்வை ஊதிப் பெருநெருப்பாக்குவதிலேயே ம.பொ.சி போன்ற தமிழுணர்வாளர்களும், இடதுசாரித் தலைவர்களும் கவனம் செலுத்தி இருப்பதை அறிய முடிகிறது. விளைவு, ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றும் பிரம்மாண்டமான தேர்தல் அரசியலுக்கான வசீகரத் தலைவராக எம்.ஜி.ஆர் உருவெடுத்தாரே தவிர, அழுத்தமான அரசியல் படிமங்களைக் கொண்ட ஆளுமையாக அவர் பரிணமிக்கவில்லை. தமிழகத்தில், திராவிட இயக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெதிரான அரசியல் எழுச்சியைக் கூர்மழுங்கச் செய்வதற்கு ஏதுவான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சனாதன சக்திகளுக்கு, எம்.ஜி.ஆர் என்ற அரசியல் உள்ளீடற்ற உருவாக்கம் மிக வசதியாகப் போய்விட்டது. அரசியல் தன்னுணர்வு பெற்ற சமூகத்தில் ஆதிக்க சக்திகளின் செல்வாக்கு இயல்பாகவே காணாமல் போய்விடும். அரசியலகற்றம் செய்யப்பட்ட தக்கையான சமூகத்தை, மிக எளிதாக ஆதிக்க மற்றும் பிற்போக்கு சக்திகள் தன்வயப்படுத்திவிட முடியும். தமிழகத்தில் அரசியலகற்றம் செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு எம்.ஜி.ஆரும், அவர் தொடங்கிய அதிமுகவும் மிக வசதியான கருவிகளாகக் கைக்குக் கிடைத்தன. 

 

(தொடர்ந்து பேசுவோம்)

 

_____________________________________________________________________________________________________________