முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் – 3 : இதயதெய்வத்தின் இதயம் பட்டபாடு! – செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

 

Arasiyal Pesuvom -3 : Chemparithi

____________________________________________________________________________________________________

 

தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல்  அமர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றபிரம்மாண்ட இயக்கமான அதிமுகவின்   தோற்றம்  என்பது, ஒரே நாளில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவல்ல. 1953ல் துளசிமாலையும்,  சந்தனப் பொட்டும் துலங்கும் தோற்றத்துடன் அண்ணாவைச் சந்தித்த எம்.ஜி.ஆர்.,  படிப்படியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக பரிணமித்தபோதே, தம்மைச் சுற்றி தனிப்பட்ட  அரசியல் செல்வாக்கையும் மற்றொரு பக்கம்   வளர்த்துவரத் தவறவில்லை.anna. mgr. karunanidhi

 

எம்.ஜி.ஆர் தனிப்பட்ட அரசியல் ஆளுமையாக உருவெடுப்பதற்கு அவரது ரசிகர் மன்றக் கிளைகள் பெரும் காரணியாக அமைந்தன. அரசியல் எதிரிகளால் மலையாளி என அவ்வப்போது அடையாளப்படுத்தப் பட்ட போதும், அதனையும்தாண்டி தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த நாயகனாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். லண்டன் சென்றிருந்த போது பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில், இதுகுறித்த தமது உணர்வை எம்.ஜி.ஆர்அழுத்தமாகவே   பதிவு செய்திருக்கிறார்.

 

தமது உடலில் சூடு குறையாமல் ஓடிக்கொண்டிருக்கும் குருதி தமிழர்களால் தரப்பட்டது என்று அந்தப் பேட்டியில் உணர்ச்சி பொங்கக் கூறியிருப்பார்.

 

mgr kamarajar kalaingarதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வேகத்திலேயே தொடங்கப்பட்டதுதான் அதிமுக என்றாலும், தனி இயக்கம் காண்பதற்கான விதை எம்.ஜி.ஆருக்குள் 1960 களின் முற்பகுதியிலேயே விழுந்து, பின்னாளில் அது பெரும் விருட்சமாகவளர்ந்து விட்டது  என்பதுதான் உண்மை. சென்னை பெரியார் திடலில் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் தலைமையில், நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர்.ரதாவுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய எம்.ஜி.ஆர்,காமராஜர் என் தலைவர், அண்ணா எனது வழிகாட்டி என்று தனக்குள் இருந்த அரசியல் புழுக்கத்தை முழக்கமாக வெளிப்படுத்தினார். அவரது இந்தப் பேச்சு திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை    எழுப்பியது. எம்.ஜி.ஆர் காங்கிரசில் சேரப்போகிறார் என்ற அளவில் கூடப் பேச்சு   அடிபட்டது.  காமராஜரை உயர்த்திப் பேசியதோடு மட்டும்எம்.ஜி.ஆர் தனது எதிர்ப்புப் போக்கை நிறுத்திக் கொண்டு விடவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அண்ணா சிறையில் இருந்த நேரத்தில், தமக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட மேலவை உறுப்பினர்பதவியையும் தூக்கி எறிந்தார்.

 

 

இது குறித்து சிறையில் இருந்த அண்ணா மனம் நொந்து எழுதுகிறார்…

 

“கழகத்திற்கும் எம்.ஜி.ஆருக்கும் அமைந்துவிட்ட பாசம் சொல்லிக் கொடுத்து ஏற்பட்டதல்ல, தூண்டிவிட்டு கிளம்பியதுமன்று, தானாக மலர்ந்தது. கனி என் கரத்திலே வந்து விழுந்தது என்று பெருமிதத்துடன் “நாடோடி மன்னன்” வெற்றி விழா பொதுக்கூட்டத்திலே நான் பேசியது என் நினைவுக்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்து விடுவதோ, கழகம் அவரை இழந்து விடுவதோ நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாதது. எனவே, மேலவை பதவியை விட்டு அவர் விலகினாலும், கழகத்தை விட்டு விலக மாட்டார், என் நெஞ்சில் இருந்து விலகமாட்டார் என்று எனக்கு உறுதி உண்டு. அந்த உறுதியை துணையாகக் கொண்டு மனச்சங்கடத்தை மாற்றிக் கொள்ள, குறைத்துக் கொள்ள முனைவதிலேயே இன்று பெரும்பகுதி சென்று விட்டது. படித்து முடித்திட திட்டமிட்டிருந்தபடி கிறிஸ்தவ மார்க்கத் துவக்கநிலை பற்றிய புத்தகத்தையும் படிக்க மனம் இடம் தரவில்லை”mgr casual

 

எம்.ஜி.ஆரின் அரசியல் சித்து விளையாட்டுகள், பின்னாளில் அவர் இதயதெய்வம் எனப் போற்றிய அண்ணாவின் இதயத்தை என்ன பாடு படுத்தியிருக்கிறது என்பதற்கு இப்படி நிறைய உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன. 

 

இதுமட்டுமல்ல… மேடைகளில்  அண்ணா ஆற்றொழுக்காகப் பேசிக் கொண்டிருக்கும் போது யார் இடையேவந்தாலும் சலசலப்பு ஏற்படாது என்பது வரலாறு. அதனைப் பொய்யாக்கும் வகையில் அண்ணா பேச்சுக்கு இடையே திட்டமிட்டு மேடைக்கு வருவதையும் வழக்கமாகக் கொண்டார் எம்.ஜி.ஆர். அப்போது ஏற்படும் சலசலப்பால் அண்ணா தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டதுண்டு.

 

en kadamai MGRதிமுக கடும் கட்டுப்பாட்டுகளுடன் இயங்கி வந்த காலம் அது என்பதால், மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை கழகத்தினர் புறக்கணிக்கத்  தொடங்கினர். இதனால் அப்போது வெளிவந்த “என்கடமை” என்ற திரைப்படம் தோல்வியைச்  சந்தித்தது.

 

 திரையுலகவாழ்வில் சந்தித்த திடீர்ப் பின்னடைவு எம்.ஜி.ஆரைச் சற்று நிதானிக்க வைத்தது.      அண்ணாவைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் அரசியல் ஆளுமையாக தாம் வளர்ந்துவிடவில்லை என்ற யதார்த்தம் அவருக்கு புரிந்தது. உடனடியாக தன் போக்கை மாற்றிக் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணாவுடன் சமரசமானார்.   அண்ணாவும்  “இதயக்கனி”என்ற அடைமொழியுடன் எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொண்டார். 

 

 

என்.எஸ்.கே, எம்.ஜி.ஆர் , எஸ்.எஸ்.ஆர் , சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி,  என திரையுலகில் தாரகைகளாக மின்னிக் கொண்டிருந்த அனைவரையும் விளையாட விட்டு அழகு பார்த்திருக்கிறார் அண்ணா. ஆனால், எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆளுமையும் அவருக்கு இருந்தது. தமது அறிவின் மீதும், ஆற்றலின் மீதும் அண்ணாவுக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கையே அவருக்கு இந்த பேராளுமைத் திறனைத் தந்திருந்தது. தன் மீது நம்பிக்கை இல்லாத தலைமைதான், கட்சியில் உள்ள மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொங்கிப், பொருமி சர்வாதிகாரச் சவுக்கை எடுக்குமளவுக்கு செல்லும். அண்ணா, ஜனநாயகப் பண்பிலிருந்தும், நெறியில் இருந்தும் சிறிதும் வழுவாமல் நின்று தனது அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

 

எம்.ஜி.ஆருக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தால் அமைதியாகிவிடுவார் என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அண்ணாவிடம், அவருடன் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவரது நேர்முக உதவியாளர் கே.டி.எஸ் மணி ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு அண்ணா அளித்த பதில் சுவையானது மட்டுமன்று, தீர்க்கதரிசனமானதும் கூட

 

இதோ மணியிடம் அண்ணா கூறிய பதில் அவருடைய மொழியிலேயே…

 

“மணி, நீ பட்டுத்துணித் தயாரிப்பில் பழக்கம் உடையவன். பட்டுப்புடவையைத் தயாரிப்பவர்கள் 12 முழத்தில் முதல் 6 முழம் புடவையில் ஜரிகையைப் போடாமல் பின்னுள்ள 6 முழத்தில் ஏன் போடுகிறார்கள்? முதலில் உள்ள புடவையின் 6 முழம்தான் பெண்களின் உடம்போடு உடம்பாக இருப்பது.அதிலே கொண்டு போய் விலை உயர்ந்த பளபளக்கும் ஜரிகையைப் போட்டால், அது உடம்பை உரசி அறுப்பது போலிருக்கும். அதனால்தான் பின்னுள்ள 6 முழத்தில் போடுகிறார்கள். அதுவே புடவையின் மதிப்பை உயர்த்தும். கட்டுகின்ற பெண்களுக்கும் அந்தஸ்தை உருவாக்கும். எம்.ஜி.ஆர் மதிப்பானவர். பட்டுப்புடவைக்குப் புட்டா போடுவதைப் போல கட்சியிலே நாம் அவரை வைத்துக் கொள்ள வேண்டும்.”

 

எம்.ஜி.ஆ.ரை பளபளப்பான ஜரிகையோடு ஒப்பிட்டுப் பேசிய அண்ணாவின் தொலைநோக்கைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அவரை இயக்கத்தின் ஜரிகையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை அண்ணாவுக்கு இருந்துள்ளது. பின்னாளில் அது இல்லாது போனதே, பிரச்னைகளுக்கும் பிளவுக்கும் வழிவகுத்துவிட்டது.

 

எம்.ஜி.ஆரை முதல் முதலாகச் சந்தித்த போதே, அண்ணாவுக்குள் முரண்பட்ட உணர்வுகள் எழுந்ததை, பொதுக்கூட்டம் ஒன்றிலேயே பேசி உள்ளார். ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, தமிழகத்தைக் கடும்புயல் தாக்கியது.  அதற்காக கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் முன்முயற்சி எடுத்து, திமுக சார்பில்  25 ஆயிரும் ரூபாய் நிதி திரட்டினர். இந்த நிதியை அளிப்பதற்காக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, எம்.ஜி.ஆரை தாம் முதன் முதலாகச் சந்தித்த போது எழுந்த உணர்வுகளை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

 

இதோ, எம்.ஜி.ஆர் குறித்து அந்தக் கூட்டத்தில் அண்ணா கூறிய கவனத்துக்குரிய கருத்துகள்…

 

“சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக  சந்தித்தேன், நாடக சம்பந்தமாக நடிகர் நாராயணசாமி மூலம் முதன் முதலில் அவரைச் சந்திக்கும் போது சந்தேகம் கொண்டேன் அவர் ஒரு ஆரியன் என்று. பிறகு அவர் ஒரு திராவிடர் என்று தெரிந்து ஆனந்தமடைந்தேன். அவருடைய தோற்றம், அழகு, உடல் அமைப்பு, பளபளப்பு பாப்பனர்களுக்கு பொறாமையை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பேச்சு பெருமைக்குரியது . அவருடைய ஒத்துழைப்பு நமது எதிர்காலத் திட்டத்திற்கு வெற்றியைத் தேடித் தருமென்று நம்புகிறேன்.”mgr anna mcchakakr

 

எம்.ஜி.ஆரின் விளம்பர வெளிச்சம் திமுகவின் வெற்றிக்கு உதவியது உண்மைதான். ஆனால், அதற்காக திமுகவும், தமிழ்ச் சமூகமும் தந்த, தந்து கொண்டிருக்கும் விலை மிக, மிகக் கடுமையானது. கொடுமையானது.

 

எம்.ஜி.ஆர் ஒரு திராவிடர் எனத் தெரிந்து ஆனந்தமடைந்ததாக அண்ணா கூறினாலும், எம்.ஜி.ஆரின் நிறமும், தோற்றமும் அவருள் எழுப்பிய முரண்பாடுகள் எத்தனை உண்மையானவை என்பதை, பின்னாளில் தமிழகம் சந்தித்தது.

 

(தொடர்ந்து பேசுவோம்)

 

____________________________________________________________________________________________________________