Arasiyal pesuvom -4
__________________________________________________________________________________________________________
அதிமுகவின் ஒற்றைக் கொள்கை!
‘எம்.ஜி.ஆர்” என்ற அரசியல் குழப்பத்தின் விளைவுகளைத் தமிழகம் சந்திக்கப் போகிறது என்பதற்கான கட்டியக் காட்சிகள், அண்ணா மறைவின் போதே தென்படத் தொடங்கி விட்டன.
(திமுகவின் வரலாறு குறித்து விரிவாகப் பார்க்க இருப்பதால், அண்ணா ஆட்சிக்காலம் தொடர்பாக இப்பகுதியில் விவரிக்கவில்லை. அந்தத் தருணத்தில் திமுகவில் நடந்தேறிய மாற்றங்களில், எம்.ஜி.ஆர் தொடர்பானவை மட்டுமே இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன)
திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே அண்ணாவின் உடல்நலம் பாதிக்கப் பட்டது.1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணா மறைவுக்கு பிறகு அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.
அண்ணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராக இருந்தார். அதனால், அவரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற பேச்சு கிளம்பியது. கலைஞரும் அப்படித்தான் நினைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட தலைவர்களான கே.ஏ.மதியழகன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாரயணசாமி, சத்தியவாணி முத்து, ப.உ.சண்முகம், ஆதித்தனார், கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் போன்றோரின் ஆதரவு கலைஞருக்கே இருந்தது. தி.மு.க.,தொண்டர்களில் பெரும்பான்மையோரும் கலைஞரே முதலமைச்சராக வரவேண்டும் என்று விரும்பினர்.
அண்ணாவின் இடத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலும், திறமையும் கலைஞருக்குத்தான் இருக்கிறது என்று பெரியாரும் தன் கருத்தை தெரிவித்தார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போன எம்.ஜி.ஆர்., அடுத்த முதலமைச்சர் யார் என்ற பேச்சு வந்ததும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் கருத்தையும் கேட்டார். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கலைஞருக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்கு புரிந்து போனது. முடிவெடுக்காமல் இருந்த ஒரு சில எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவையும் கலைஞர் பக்கம் திருப்பினார் எம்.ஜி.ஆர். அதற்காக அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் தனது ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து விருந்து வைத்த எம்.ஜி.ஆர். கலைஞர்தான் அடுத்த முதல்வர் ஆகவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தர்.
இப்போது கலைஞர் கருணாநிதிதான் முதலமைச்சராக வேண்டும் என்பது கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக மாறியது. பின்னர், தன் விருப்பத்தையும், எம்.எல்.ஏ.,க்களின் விருப்பத்தையும் கலைஞரிடம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். தயங்காமல் அப்பதவியை ஏற்க கலைஞரை வலியுறுத்தினார். நாவலர் நெடுஞ்செழியன் பதவியை விட்டுக்கொடுக்க சிறிது முரண்டு பிடித்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார். எனினும், எம்.ஜி.ஆருக்குள் கனன்று கொண்டிருந்த தனிக்கட்சிக் கனவு மீண்டும் தலைதூக்கவே பிரச்னை தொடங்கியது.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே, எம்.ஜி.ஆருடனான உரசல் மோதலாக உருவெடுத்தது. கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், மதுரையில் நடைபெற்ற மாநாட்டு மேடையிலேயே கணக்கு வழக்குகள் குறித்து பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். இதனால் கருணாநிதிக்கும் அவருக்குமான கருத்து வேறுபாடு உச்சத்தைஎட்டியது. எப்படியோ, அதுவரை எம்.ஜி.ஆருக்குள் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தனி இயக்கம் காணும் வேட்கை இந்தத் தருணத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், தமிழகத்தில்இருந்த இடதுசாரித் தலைவர்களும் அவரது இந்த வேட்கை நெருப்புக்கு நெய்வார்க்கும் புறக்காரணிகளாக இருந்தனர். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பின்பற்றும் கொள்கை அண்ணாயிசம் என்று அழைக்கப்படும் என்ற தத்துவ முத்திரையோடு, 32 பக்க கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், “கலை, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், வாழ்க்கை முறை, வரலாறு, கலாச்சாரம், இன்னபிற துறைகளின் ஒருமைகளை இயற்கையாகப் பெற்ற – சேர்ந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்கின்ற திராவிட மக்களிடையே, அனைத்துத் துறையிலும் இணைந்தும், இணையக் கூடிய துறைகளில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் இணையவும் அண்ணா திமுகழகம் விரும்புகிறது…” என திராவிடம் மற்றும் இந்திய தேசியத்துக்கான விளக்கங்கள் சுற்றி வளைத்துக் கூறப்பட்டிருந்தன. எனினும், அதிமுகவின் அந்த முழக்கங்கள் எதிலும் தத்துவார்த்த ரீதியான அரசியல் கூர்மை சிறிதும் இல்லை. மொத்தத்தில் கருணாநிதி என்ற தனிமனிதர் மீதான விரோதமும் குரோதமும் மட்டுமே, அதிமுக என்ற அரசியல் கட்சியின் அடிநாதமான ஒற்றைக் கொள்கையாக இருந்தது. திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, தீண்டாமை போன்ற தீவிரமான கருத்தாக்கங்களுடன் ஒத்துப்போக முடியாத, வெறும் திரைக்கவர்ச்சியின் மூலமாக எம்.ஜி.ஆருக்குச் சேர்ந்திருந்த பெருங்கும்பலுக்கு, அவரது குழப்பமான அண்ணாயிச அரசியல் வசதியாகப் போய்விட்டது. கருணாநிதி எதிர்ப்பு என்பது அந்த கதம்ப அரசியலுக்கு மேலும் வசீகரமான தோற்றத்தை உருவாக்கித் தந்தது. தமிழ் மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் அதுவரை உருவாக்கி வைத்திருந்த “ஹீரோ” தோற்றம், கருணாநிதியை வில்லனாக உருவகப்படுத்துவதை மிக எளிமையாக்கி விட்டது.
திராவிட இயக்கத்தில் இத்தகைய வீழ்ச்சியும், விரிசலும் ஏற்படுவதற்காகவே காத்திருந்த சிலருக்கு, எம்.ஜி.ஆரும் அவரால் உருவாக்கப்பட்ட அதிமுகவும் மிக வசதியான கருவிகளாக கைக்கு வாய்த்தன.
பார்ப்பனியத்துக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அழுத்தமான எதிர்வினைகளை ஆற்றி வந்த திராவிட இயக்கம், அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றியது, பார்ப்பனர்களால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உருத்தத் தொடங்கி இருந்த காலம் அது.
திமுகவில் பிளவு ஏற்பட்ட போது, கொக்கொக்க கூர்த்திருந்த பார்ப்பனியம், அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு கருத்தோடு காரியமாற்றத் தொடங்கியது.
தனது தத்துவார்த்த எதிரியை வீழ்த்துவதற்கு பார்ப்பனியம் வேறுபட்ட தளங்களில் இருந்தாலும் ஒன்றோடு மற்றொன்று தயங்காமல் கை கோர்த்துக் கொள்ளும் என்பது வரலாறு பல நேரங்களில் பார்த்தறிந்த காட்சிதான்.
ஆர்.வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், சங்கராச்சாரியார், சோ ராமசாமி என, ஆங்காங்கே இருந்த பார்ப்பன அதிகார மையங்கள் அனைத்தும் திராவிட இயக்கத்துக்கு எதிராக ஒன்று திரண்டன. காங்கிரஸ்காரரான மோகன் குமார மங்கலம் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் தூதுவராகச் செயல்பட்டு, எம்.ஜி.ஆருக்குள் இருந்த தனிக்கட்சி காணவேண்டும் என்ற ஆசை நெருப்புக்கு நெய்யூற்றினார். மற்றொரு காங்கிரஸ்காரரான ஆர்.வெங்கட்ராமனும், காஞ்சிபுரத்துச் சங்கரரும் அதிமுகவை உருவாக்க அரும்பாடு பட்டனர். எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமே நடித்து வந்த சோ ராமசாமி, நிஜ வாழ்வில் அரசியல் ஆலோசகராக அவதாரம் எடுத்ததும் கூட அப்போதுதான்.
திராவிட இயக்கத்தின் கடைசி கடைசியான தத்துவார்த்த எச்சமாகக் கருதப்பட்ட கலைஞர் கருணாநிதியை வீழ்த்துவதற்கு, அரசியல், ஆன்மீகம், திரைப்படம் என வெவ்வேறு வடிவங்களில் பதுங்கி இருந்த பார்ப்பனப் பரிவாரங்கள் அனைத்தும் தங்கள் வேஷங் கலைத்து, வினையாற்றும் தீவிரத்தோடு அணிதிரண்டன.
மற்றொரு பக்கம், தங்கள் வாக்கு வங்கியை திமுக திருடிக் கொண்டு போய்விட்டதாக இன்றுவரை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இடதுசாரிக்கட்சியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், தா.பாண்டியன் போன்றோரும் எம்.ஜி.ஆருக்கு கைலாகு கொடுக்கத் தொடங்கினர். தன்னை ஒரு பொதுவுடைமைவாதியாகவும், ஏழை பங்காளனாகவும் திரைப்படங்களில் சித்தரித்துக் கொண்ட எம்.ஜி.ஆரை, கம்யூனிஸ்ட்காரராக மாற்ற இவர்கள் முயற்சித்திருந்தால் அதனைப் பாராட்டி இருக்கலாம். ஆனால், கருணாநிதிக்கு எதிராக எழுந்து நிற்க தங்களால் முடியாமல் போன பட்சத்தில், அதற்கு ஒரு வலுவான அரசியல் கருவியாக எம்.ஜி.ஆரை அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான், தமிழகத்துக்கு நேர்ந்த சாபக்கேடு. ஆக, தமிழகத்தின் அரசியல் களத்தை, தனிமனிதச் சண்டைக் களமாக மாற்றியதில் இடதுசாரிகளுக்கும் பங்கு உள்ளது என்பதை மறந்துவிட முடியாது.
இந்திராகாந்தியின் மிரட்டல், பார்ப்பனக் கும்பலின் அரசியல் தூபம், இடதுசாரிகளின் பழியுணர்ச்சி என இத்தனையும் ஒன்று சேர்ந்து, எம்.ஜி.ஆர் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் அதிமுக.
அதிமுக தொடங்கப்பட்ட பின்னர் வெளிவந்த எம்.ஜி.ஆரது படங்களில் அவரது அரசியல் நிலைப்பாடுகளும், அவற்றை வெளிப்படுத்தும் பரப்புரைக் காட்சிகளும் அப்பட்டமாகவே இடம் பிடித்தன.
புதிய சக்தியாக உருவெடுத்திருந்த அதிமுகவுக்கு 1973ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தனது எதிர்காலத்தை உரசிப்பார்க்கும் உரைகல்லாக அமைந்தது. அதிமுக சார்பில் வழக்கறிஞர் கே.மாயத்தேவரை எம்.ஜி.ஆர் வேட்பாளராக முன்நிறுத்தினார். ஆளும்கட்சியாக இருந்த திமுக இந்தத் தேர்தலை மிக முக்கியமாகக் கருதியதால், கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தீவிரப் பரப்புரையை மேற்கொண்டார். அதேபோல எம்.ஜி.ஆரும், அவரது விசுவாசிகளும் இரவு பகல் பாராமல் அலைந்து திரிந்து வாக்குச் சேகரித்தனர். இந்த நிலையில், பல்வேறு பிரச்னைகளைக்கு இடையே எம்.ஜி.ஆர் நடித்து “நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்” என்ற டைட்டில் பாடலுடன் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது.
அதே காலக்கட்டத்தில் வெளிவந்த நேற்று இன்று நாளை திரைப்படத்தில் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வேட்பாளர் மாயத்தேவரின் பெயர் இடம் பெற்றிருந்த காட்சியையே பாடல் காட்சியில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
திண்டுக்கல் இடைத்தேர்தலில் காமராஜரின் பழைய காங்கிரஸ் சார்பில் சித்தன் போட்டியிட்டார். 1973ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மறுநாளே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் 2லட்சத்து 60 ஆயிரத்து 930 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக காமராஜரின் பழைய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சித்தன், 1 லட்சத்து 19 ஆயிரத்து 32 வாக்குகளைப் பெற்றிருந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட பொன்.முத்துராமலிங்கம் 93 ஆயிரத்து 496 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்திரா காங்கிரஸ் உட்பட போட்டியிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களுமே வைப்புத் தொகையை இழந்தனர். எம்.ஜி.ஆரின் திரைக் கவர்ச்சிக்கு முன்பாக மற்ற அரசியல் முழக்கங்கள் யாவையும் அர்த்தமற்றுப் போயின. தமிழகத்தில், கொள்கைகளை முன்வைத்து அரசியல் நடத்துவதற்கான தத்துவார்த்த வெளி முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிட்டதை திண்டுக்கல் இடைத்தேர்தல் தெளிவாகவே புரியவைத்தது.
(தொடர்ந்து பேசுவோம்)
____________________________________________________________________________________________________________