Arasiyal pesuvom – 5
இருண்ட காலத்திலும் வெளிச்சம் தேடிக் கொண்ட எம்.ஜி.ஆர்!
_________________________________________________________________________________________________
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது.
“கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…” என மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (எம்.ஜி.ஆர் முழுமையாக நடித்து வெளிவந்த கடைசித் திரைப்படம் இதுதான்) படத்தில் இடம் பெற்ற பாடல், மிக விரைவிலேயே உண்மையாகப் போகிறது என அப்போது பலரும் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகம் என்ற அரசியல் வடிவத்தின் அழகும், அவலமும், புதிரும் அதுதான்.
1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலைப் பிரகடனம், இந்திய அரசியலை மட்டுமின்றி, தமிழக அரசியலையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இந்திராகாந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தை, திமுக கடுமையாக எதிர்த்தது. எம்.ஜி.ஆர் முழுமூச்சுடன் ஆதரித்தார். அவரைத் தலைவராக உருவெடுக்க வைக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்தது. வலதுசாரிகளை வீழ்த்துவதற்காக அவசரநிலையை ஆதரிக்கிறோம் என அக்கட்சியின் அப்போதைய தேசியத் தலைவர் ஸ்ரீபாத் அம்ரித் டாங்கே விளக்கமளித்தார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம் என வருணிக்கப்படும் அவசரநிலைக் காலத்தை ஆதரித்த மேலும் சிலரது பெயர்களைக் கேட்டால் இன்றைய தலைமுறையினருக்கு வியப்பாக இருக்கும். வினோபாவே, அன்னை தெரசா, குஷ்வந்த்சிங், கருத்துச் சுதந்திரத்துக்கு பெயர் போன ஓவியர் எம்.எப்.உசேன் (தீயவர்களை ஒழிக்க அவதாரம் எடுத்த துர்க்கையாக இந்திராவைச் சித்தரித்து ஓவியம் வரைந்துள்ளார்) போன்றவர்கள் எல்லாம் அவசரநிலையை ஆதரித்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பல தமிழறிஞர்களும் கூட அவசரநிலையை ஆதரித்துள்ளனர். அவசரநிலையை எதிர்த்துப் போராடிய தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை அருகே உள்ள பேரூரில் வந்து தலைமறைவாக இருந்துள்ளார். அவசரநிலையை எதிர்த்த மொரார்ஜி தேசாய், ஜெயப்பிரகாஷ் நாராயணன், அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் திமுகவினர் பெரும்பாலானோர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். இத்தனை களேபரத்திலும் எம்.ஜி.ஆர் தனக்கான அரசியல் பாதையை வகுப்பதில் கனகச்சிதமான கவனத்துடன் செயல்பட்டுள்ளார். சர்வாதிகார மனப்போக்கு கொண்ட தலைவர்கள், மக்களுக்கு எதிரான எதேச்சதிகாரப் பிரயோகங்களை சரியாக இனம் கண்டு ஆதரித்து, அதற்கான பலனையும் அடைந்து விடுவார்கள் என்பதற்கு எம்.ஜி.ஆர் சிறந்த உதாரணம்.
இந்திராகாந்தியை நேரில் சந்தித்து அவசர நிலைக்கு தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்த எம்ஜிஆர், திமுக அரசின் மீதும், முதலமைச்சர் கருணாநிதி மீதும் அடுக்கடுக்கான ஊழல்புகார்களை பட்டியல்களாக்கி அளிக்கவும் தவறவில்லை. அத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை எம்.ஜி.ஆர். அண்ணாவின் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் வகையில், அவரது பெயரால் தொடங்கப்பட்ட தமது கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். அண்ணாவின் மாநில சுயாட்சி உணர்வுக்கும், முழக்கத்துக்கும் நேரெதிரான எம்.ஜி.ஆரது அந்தச் செயல்பாட்டைப் பிரித்தறியும் அரசியல் தன்னுணர்வு, இன்றுவரை தமிழக மக்களுக்கு வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால், அதனிலும் மோசமாக “தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம்” என்ற உலக மகா குழப்பம் மிக்க பெயரில் ஒருவர் கட்சி தொடங்கி, தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர் உருவெடுத்திருக்க முடியுமா? அந்த வகையில் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர் என அழைத்துக் கொள்வது சாலப் பொருத்தமானதே! தமிழ் மக்களின் அரசியல் மலட்டுத்தனம், எந்த அளவுக்கு அந்தச் சமூகத்தை அதலபாதாளத்திற்கு சரிய வைத்துள்ளது என்பதற்கும் கூட அதிமுக, தேமுதிக, அஇசமக தொடங்கி தற்போது அப்துல்கலாம் பெயரால் தொடங்கப்பட்டிருக்கும் கட்சி வரையிலான அரசியல் விதையற்ற விளைச்சல்களே உதாரணம். (மரபணு மாற்றப்பயிர்களைப் போல..!)
அவசர நிலையைத் தீவிரமாக ஆதரித்த எம்.ஜி.ஆரை, தனது கைப்பாவையாக மாற்றிக் கொள்வதில் இந்திராவுக்கு எந்தச் சிரமும் இருக்கவில்லை. அது இயல்பாகவே நடந்துவிட்டது.
தமிழகத்தில், அவசரநிலைக்கு எதிராக திமுகவின் செயற்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய கலைஞர் கருணாநிதி, தீவிரமான போராட்டக் களங்களையும் வகுத்தார். திமுகவின் முன்னணித் தலைவர்களும், மு.க.ஸ்டாலினும் சிறையில் தள்ளப்பட்டனர். ஸ்டாலின் மீதான தாக்குதலைத் தடுக்க முயன்ற சிட்டிபாபுவை வெறித்தனமாக தாக்கிக் கொன்றது அப்போதைய போலீஸ். கலைஞர் கருணாநிதி மீதும், அவரது அரசு மீதும் கொடுத்த புகார்களை கையில் எடுத்தார் இந்திரா காந்தி. திமுக அரசு கலைக்கப்பட்டது. ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. அவசர நிலையை எதிர்த்த திமுகவினர், மார்க்சிஸ்ட் கட்சியினர், புரட்சிகரச் சிந்தனை உடையோர் என அனைவரும் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.
1977 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 21 மாத கால அவசரநிலைக் காலம் முடிவுக்கு வந்தது. நாடுமுழுவதும் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஒட்டி தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி, பார்வார்ட் ப்ளாக் முஸ்லிம் லீக் கட்சிகள் கூட்டணி சேர்ந்தன.
இந்தத் தேர்தலில் அதிமுக மட்டுமே 130 இடங்களில் வெற்றிபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், பார்வர்ட் ப்ளாக், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன.
திமுக தனித்தே களம் கண்டு 48 இடங்களைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் அதிமுக 30.4 சதவீத வாக்குகளையும், திமுக 24. 9 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. காங்கிரசுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனதா கட்சி தனித்தும் போட்டியிட்டன. எம்.ஜி.ஆருக்கு இருந்த திரைச் செல்வாக்கையும், வசீகரத்தையும் தாண்டி, திமுக கணிசமான வாக்குவங்கியை அந்தத் தேர்தலில் தக்க வைத்துக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
ஆக, தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் முதல் முறையாக 1977ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி பதவியேற்றார்.
பின்னர் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவரித்து எம்.ஜி.ஆர் பேருரை ஆற்றினார்.
திரையில் கதாநாயகனாகத் தோன்றிய எம்.ஜி.ஆர், முதலமைச்சராகவும் அப்படி நடந்து கொள்வார் என்றுதான் அவரை நம்பி வாக்களித்த பராரி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் அப்படி நடந்ததா?
– தொடர்ந்து பேசுவோம்
_____________________________________________________________________________________________________________