முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன்? : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

 

Arasiyal pesuvom – 6 : Chemparithi’s Article

________________________________________________________________________________________________________

 

ex cm mgrஎம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய அனைத்து அரசியல் விகாரங்களுக்கும் பிதாமகராகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் எம்ஜிஆரே!

 

கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அதனை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக அனைத்து லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளுக்கும் ஒற்றைச்சாளர ஊற்றுக்கண்ணாக அவரே விளங்கினார். அவருக்குத் தெரியாமல் வேறு யாரும் அதில் “பங்குபெற” முடியாது என்ற பரிணாம நிலையே அவரது சாதனை!

 

தனது திரைப்படங்களில் மதுவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் எம்ஜிஆர், ஆனால், கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கை தமது இரண்டாம் கட்ட ஆட்சிக்காலத்தில் ரத்து செய்தார். (அண்ணா ஆட்சிக்காலம் முதல் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ரத்து செய்யப்பட்டு, 1973ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி மீண்டும் அமலாக்கப்பட்டது).

 

மதுவிலக்கு என்பது ஓர்  ஏமாற்று முழக்கம். இது மனச்சாட்சி உள்ளவர்களுக்கு தெரியும். மது இல்லாத தமிழகம் இருந்ததாக கூறுவது முற்றிலும் புரட்டு. சங்கத் தமிழ் நூல்களை உரத்துப் பேசும் சிலரே இப்படி ஒரு பொய்யைக் கட்டவிழ்ப்பதும், கட்டமைப்பதும் எத்தனை பெரிய மோசடி! எந்தக் காலத்தில் தமிழகத்தில் மது இல்லை. ஆனால், மதியைக் கெடுக்கும் விஷத்தை மது என்ற பெயரில் தமிழர்கள் அருந்தவில்லை. பனை, தென்னைகளில் இருந்து கிடைத்த ஆரோக்கியமான கள்ளையும், பழங்களையும் இன்ன பிற மூலிகைகளையும் ஊற வைத்த தேரல்களையும் உண்டு, களித்து உடல் வலுவுடன் காணப்பட்டிருக்கின்றனர். இல்லாவிட்டால் போரும், காதலும் எப்படி அவர்களது வாழ்க்கை முறையாக இருந்திருக்க முடியும்.

 

ஆனால், மது என்ற பெயரால் அந்நிய நிறுவனங்களின் தயாரிப்புகளையும், போதாக்குறைக்கு இங்குள்ள விஷக்கழிவுகளையும் கலந்து கொடுத்ததால்தான் மது என்பது உயிர்க்கொல்லியாக மாறியது. கள் என்பது ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் கள்ளச்சாராயம் ஏன் வருகிறது? இன்று மதுவுக்கு எதிராக வேஷம் கட்டி ஆடும் பல அரசியல் கட்சிகளின் பொருளாதார மூலதனமே கள்ளச்சாராய வியாபாரத்தின் மூலம் திரட்டப்பட்டதுதான். எம்.ஜி.ஆரும் தனது அரசியல் சுகபோகத் தேவைகளுக்கு சாராய வியாபாரிகளையே நம்பி இருந்தார். அதற்குப் பரிசாக அவர்களை கல்வித் தந்தையர்களாகவும், மருத்துவ தேவ தூதர்களாகவும் ஆளாக்கி மகிழ்ந்தார். போலீஸ்காரராக இருந்து மாமூல் வாங்கிப் பிழைத்து, பின்னர் எம்.ஜி.ஆரின் முக்கிய அடியாட்களில் ஒருவராக வாழ்க்கையில் முன்னேறியவர்தான் ஜேப்பியார். அவர் இப்போது தமிழகத்தின் தவிர்க்க முடியாத கல்வித்தந்தை. நாலாந்தரக் காமெடி நடிகராகவும், எம்.ஜி.ஆரின் அடிவருடியாகவும் இருந்த ஐசரிவேலனும், அவரது மகனும் கல்வித் தந்தைகள் ஆனார்கள். இந்த வரிசை ஏ.சி.சண்முகம், ஜி.விஸ்வநாதன், என நீண்டு கொண்டே செல்கிறது. அத்தனை பேரும் இன்று கற்பனையிலும் கணக்கிட முடியாத அளவுக்கு செல்வத்தைக் குவித்து வைத்துள்ள பில்லியன் டாலர் கோடீஸ்வரர்கள். ஏழைப்பிள்ளைகள் அனைவருக்கும் உயர் கல்வி வரை இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜரின் கனவில், இப்படித்தான் எம்.ஜி.ஆர் அமிலத்தை ஊற்றி எரித்துச் சாம்பலாக்கினார். இத்தனைக்கும் திமுகவில் இருக்கும் போதே, அண்ணாவை எரிச்சல் படுத்துவதற்காக காமராஜரே என் தலைவர் என்ற முழக்கத்தை வேறு முன்வைத்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கப்பள்ளி வரையிலேனும் ஏழை, நடுத்தரக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கிடைத்து வந்த தரமான கல்வி, எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு முற்றிலும் கடைச்சரக்காக மாறியது. எல்.கே.ஜி, யுகேஜிக்கே இப்போது எவ்வளவு பணம் கட்ட வேண்டி உள்ளது என்பதை இன்றைய பெற்றோர் அறிவர். அத்தோடு மட்டுமா எம்.ஜி.ஆர் விட்டார்.

 

சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார். முனு ஆதி, லியாகத் அலிகான், அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார். 

 

தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என எம்.ஜி.ஆரது அரசியல் அக்கிரமங்கள் எல்லையின்றி நீடித்தன.mgr arasiyal pesu 6

 

எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிக்கைகள் மீது அடியாட்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார்.

 

எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிகழ்ந்த சில மோசமான சம்பவங்களை அப்போதைய ஏடுகள் சில பட்டியலிட்டிருக்கின்றன. அவற்றில் இருந்து:

 

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

 

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர்.  விடுதியைச் சூறையாடினர்.

 

தொழிலாளர்கள் மீது தாக்குதல்

 

1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது.  பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதான காங்கிரஸ் கட்சியினர் பலரை விடுதலை செய்தார். 1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களுக்காக அவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.

 

போக்குவரத்துத் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிந்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத் தலைவரான வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். மதுரையிலிருந்து  குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பேருந்துகளில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர்.மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும்,  கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

 

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி  மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. வினர் வெறியாட்டம் போட்டனர். ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.

 

இனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும்  ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும்  தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார் எம்.ஜிஆர். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத்  வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.

 

சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகள்

 

தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பேருந்துகளை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமடைந்து விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு போலீசார், விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தனர். சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து மூதாட்டிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கினர். பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில்  நாள் முழுவதும்  நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது போலீஸ். தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.

 

அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்

 

ஒடுக்குமுறைகள் மூலம் அதிகாரத்தின் குரூர ருசியைச் சுவைத்திருந்த  எம்.ஜி.ஆர்., ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந்தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிச் சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா? பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க.வினரை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம்  – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிய அவர், சில்லரைச்  சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.

 

போலீசாரையும் விட்டு வைக்காத எம்.ஜி.ஆர்

 

பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது அடிவருடிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.

 

 

இந்துத்துவ இயக்கங்கள் வளர உதவிய எம்.ஜிஆர்

 

 

பெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர்.  தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. கவினரால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு  எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே!

 

அப்பாவிகளும் தப்பவில்லை

 

மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.

 

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

 

உலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள்  தஞ்சம் புகுந்தனர்.

 

கண்மூடித்தனமான ஒடுக்குமுறைச் சட்டங்கள்

 

சாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்.ஜி.ஆர். புரட்சிகர சிந்தனையாளர்களை மட்டும் விட்டு வைப்பாரா? வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நக்சல்பாரிகள் வேட்டை என்ற பெயரில் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பல் படுகொலை செய்தது. போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமை arsiyan pesu 6 mgr nஅமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்!

 

கள்ளச்சாராயத்தில் கரைந்த ஊழல் எதிர்ப்பு

 

அ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார். போதாக்குறைக்கு சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசர நிலையை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். மாறாக, சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்டவர்களுக்குப் பதவி உயர்வளித்தார். ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.

 

இதையெல்லாம் விட இடஒதுக்கீடு விவகாரத்தில் இன்னொரு கூத்தும் நடந்தது. 1977ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளின் ஆலோசனையை ஏற்று, ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள பிற்படுத்தப் பட்டோர், உயர் வகுப்பினராகக் கருதப்படுவார்கள் என அரசாணை பிறப்பித்தார். 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கு எம்.ஜி.ஆர் உலைவைத்துவிட்ட விவரத்தைக் கூறி திமுக தீவிரமாக பரப்புரை செய்தது. இதன் விளைவாக திமுக 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக 2 தொகுகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைப்பார்த்து மிரண்டு போன எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கனவே கலைஞர் கருணாநிதி காலத்தில் அளிக்கப்பட்டிருந்த 31 சதவீத இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக அதிகரித்து ஆணை பிறப்பித்தார்.

 

 ஆக திரையில் தன்னைப்பற்றி கட்டமைத்திருந்த புரட்சியாளர் சித்திரத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மோசமான, மக்களுக்கு வெகுமக்களுக்கு எதிரானதோர் ஆட்சியையே எம்.ஜி.ஆர் நடத்தி வந்தார். ஆனால், அதை அந்த மக்களே உணராமல் செய்த பெருமை நம்மூர் கம்யூனிஸ்டுகளுக்கே உரியது. மதுவுக்கும், ஊழலுக்கும் எதிராக அவர்கள் இப்போது கூக்குரலிடுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. இடி அமீன் ஆட்சி என வர்ணிக்கப்பட்ட எம்ஜிஆரின் மக்கள் விரோத ஆட்சியை கடுமையாக எதிர்க்க வேண்டிய இடதுசாரிகள்  அதனை ஆதரித்து வந்த நிலையில், கலைஞர் தலைமையிலான திமுக மட்டுமே தொடர்ச்சியாக 13 ஆண்டுகாலமாக சமரசமின்றி எதிர்த்து வந்தது. வரலாற்றில் இது ஒரு நகைமுரண்தான். எனினும் இதுதான் வரலாறு. திமுகவின் அரசியல் திண்மையை காலமே உரசிப் பார்த்த தருணம் என்றே அதைக் கூறலாம்.

 

அம்பிகா, ராதா, சாராய உடையார் போன்ற தனது எடுபிடிகளுக்கு அரசு சொத்துக்களை அள்ளி வழங்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கு அரசு பதவிகளை தானமாக வழங்கினார். எளியமக்களுக்கு பல்பொடி, செருப்பு, பிளாஸ்டிக் குடம் போன்ற “அதிமுக்கியமான” பொருட்களை இலவசமாக வழங்கினார். அந்த வகையில் அவர் ஒரு வள்ளல்தான். மொத்தத்தில் தனது பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்தின் அடிநாதமான அனைத்து உன்னதங்களையும் கூர் மழுங்கச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர். இவரைப் பின் பற்றாமல் ஜெயலலிதா நாட்டைக் கெடுத்துவிட்டதாக சில எம்.ஜி.ஆர் விசவாசிகள் மூக்கைச் சிந்துவதுதான் வேதனையான வேடிக்கை.

 

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போதே,  1982ம் ஆண்டு அரசியலில் பிரவேசம் செய்தவர்தான் ஜெயலலிதா. அப்போது முதல் எம்ஜிஆரிடம் இருந்து கற்றுக் கொண்ட அரசியலைத்தான் அவர் இப்போதும் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

(தொடர்ந்து பேசுவோம்)

 

(தகவல் ஆதாரம் : புதிய ஜனநாயகம், முரசொலி உள்ளிட்ட பழைய ஏடுகளில் இருந்து…)

 

__________________________________________________________________________________________________________