அரசியல் பேசுவோம் – 7 – மரணம் தந்த பரிசு!: செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal pesuvom – 7

___________________________________________________________________________________________

 

jaya mgr senkolஎம்ஜிஆர் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்தான் திரையுலக வாழ்வில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, அரசியல் வாழ்க்கையில் பிரவேசித்தார். 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை, அடுத்த ஆண்டே கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர் நியமித்தார்.

 

சமூகநீதியின் போர்க்குரலாகவும், வர்ணாஸ்ரம தர்மத்தின் வேரான பார்ப்பனீயத்துக்கு எதிராகவும் தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த ஒரு வெகுசனக் கட்சி, முழுமையாக ஒரு பார்ப்பனத் தலைமையிடமே கைமாற்றப்படுவதற்கான கால்கோள் அப்போதுதான் நடப்பட்டது.

 

1984ம் எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் நடைபெற்ற தேர்தலின் போது, ஜெயலலிதா தீவிர பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அவரது பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் கூடியது. அதைத் தனக்காகக் கூடிய கூட்டமாகவே கருதிய ஜெயலலிதாவின் மனதுக்குள் முதலமைச்சர் கனவுக்கான விதை விழுந்து, வேர் பிடிக்கத் தொடங்கி விட்டது.

 

1986ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாட்டில், எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வெள்ளிச் செங்கோலைப் பரிசாக வழங்கி, தானே அவரது அரசியல் வாரிசு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார் ஜெயலலிதா.

 

ஆனால், ஜெயலலிதா தன்னை முந்திச் செல்ல முற்படுவதாக உணர்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா குறித்து எம்ஜிஆர் வெளியிட்ட அதிருப்தியும் கூட மக்கள்குரல் (1.11987) நாளேட்டில் வெளிவந்தது. இப்படியாக எம்.ஜி.ஆருக்கும், ஜெயலிலதாவுக்கும் இடையே நிலவிய பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வர, சோலையைப் போன்ற எம்.ஜி.ஆர் விசுவாசம் மிக்க சில பத்திரிகையாளர்கள் முயற்சி எடுத்துள்ளனர். எனினும் எம்.ஜி.ஆரின் மறைவுவரை அது சாத்தியப்படவில்லை.Jayalalitha near the body of MGR

 

1984ம் ஆண்டுக்குப் பிறகு சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணமடைந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகி முதலமைச்சராக பதவியேற்றார். இதன் தொடர் விளைவாக அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி  என இரண்டாகப் பிரிந்தது. ஜானகி தலைமையிலான அரசு 1988ம் ஆண்டு கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்து. இதில் திமுக வெற்றி பெற்று 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், ஜானகி அணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

 

இதற்கு அடுத்த காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆரது திரைப்படச் செல்வாக்கின் பெருவிளைச்சலான அதிமுக என்ற வெகுசனக் கட்சியை, தனதாக்கிக் கொண்ட அந்த சாகசத்தைச் செய்து முடித்தார் ஜெயலலிதா. திராவிட இயக்கத்திற்கும், கலைஞர் கருணாநிதிக்கும் எதிராக எம்.ஜி.ஆரைக் கூர் தீட்ட உதவிய அதே பார்ப்பனக் கும்பல், ஜெயலலிதாவுக்கும் உதவியது. கட்சியைக் கைப்பற்ற திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்களும் பக்கபலமாக இருந்தனர். (ஆனால், ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், இவர்களையெல்லாம் காணாமல் அடித்தது வேறு கதை!)  1989ம் ஆண்டு மார்ச் மாதம், சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையை வாசிக்க முற்பட்ட போது, ஜெயலலிதாவும், அவரது ஆதரவாளர்களும் தடுக்க முற்பட்டனர். அப்போது, திமுகவினரைக் கோபபப்படுத்தும் வகையில் வரம்பற்ற வார்த்தைகளை ஜெயலலிதாவும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திமுகவினர் தம்மை மானபங்கப்படுத்தி விட்டதாக பேரவைக்கு வெளியில் தலைவிரிகோலமாக வந்த ஜெயலலிதா பத்திரிகையாளர்களிடம் முறையிட்டார். எப்போதுமே திமுகவுக்கும், கருணாநிதிக்கும் எதிராகவே அனைத்தையும் சித்தரிப்பதில் ஆர்வம் கொண்ட தமிழக பத்திரிகைகள், அன்றைய நிகழ்வு குறித்த தகவல்களையும் ஜெயலலிதாவின் விருப்பம் போலவே வெளியிட்டன. சொல்வது யார் என்பதைத்தான் தமிழக மக்கள் எப்போதுமே சிந்தித்துப் பார்த்தது இல்லையே! அன்றைய நாடகமும் அப்படியே நம்பப்பட்டது. ஜெயலலிதா அரசியல் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் அது உதவியது.

 

இதனிடையே, டெல்லியில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறி இருந்தன. இந்திய வரலாற்றில் முதல்முறையாக சமூகநீதிக்கு ஆதரவாக அமைந்த வி.பி.சிங் தலைமையிலான அரசை, எல்.கே. அத்வானி ரதத்தை ஓட்டி வந்து இடித்துத் தள்ளினார். அடுத்தபடியாக, சந்திரசேகர் தலைமையில், காங்கிரசின் கைப்பாவையாகச் செயல்பட்ட அரசு அமைந்தது. சென்னையில் ஈபிஎல்எப் தலைவர் பத்மநாபா கொல்லப்பட்டதைக் காரணம் காட்டி, திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஜெயலலிதா ராஜீவ்காந்தியின் கைப்பாவை அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். திமுக அரசு மீண்டும் கலைக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் விவகாரத்தால், தமிழகத்தின் மற்ற எந்த இயக்கங்களையும், தலைவர்களையும் விட, திமுகவினரும், அதன் தலைவர் கருணாநிதியும் மட்டுமே அதிக இழப்பையும், அவமானத்தையும் சந்தித்தவர்கள் என்பது வரலாற்று உண்மை.

 

 jaya with rajiv 1991ம் ஆண்டு தேர்தலுக்காக ராஜீவ்காந்தி தமிழகத்திற்கு அடிக்கடி வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். எம்.ஜி.ஆர் வகுத்த பார்முலாப்படி ஜெயலலிதாவின் அதிமுகவும், காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது. மே 21ம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். சந்திரசேகர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுப்பிரமணியன் சுவாமிதான், ராஜீவ் கொலைக்கு புலிகள் இயக்கத்தினரே காரணம் என முதன் முதலாகக் குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி, ராஜீவ் படுகொலை செய்யப்படு முன்னரே அவர் கொல்லப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி தொலைபேசியில் கூறியதாக, திருச்சி வேலுச்சாமி கூறியிருக்கிறார். இது போன்ற சந்தேகங்களுக்கு இதுவரை விடை கிடைத்தபாடில்லை.  

 

ராஜீவ்காந்தியை எதற்காக படுகொலை செய்தனர் என்பது கொன்றவர்களுக்கே வெளிச்சம். ஆனால், அதன் மூலம் எழுந்த அனுதாப அலை, தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் முதன்முதலாக ஜெயலலிதா அமர்வதற்கு முழுமுதல் காரணமாக அமைந்துவிட்டது என்பது மட்டும் உண்மை.

 

திமுகவுக்கோ அது முற்றிலும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. ராஜீவ் படுகொலைப் பழியை விடுதலைப் புலிகளின் மீது சுமத்தி, அதற்கு திமுக உதவியதாக மேலும் ஒரு பழியைச் சுமத்தி, அந்தத் தேர்தல் வியாபாரத்தில் திராவிட இயக்க எதிரிகள் நன்றாகவே லாபம் சம்பாதித்தார்கள். திமுகவினரின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். ஏறத்தாழ நெருக்கடி நிலைக் காலத்தில் எதிர்கொண்ட அதே அனுபவங்களை ராஜீவ் படுகொலையின் போதும் திமுக அனுபவிக்க நேர்ந்தது. கூடுதல் போனஸாக தேர்தலில் தோல்வியையும் சந்தித்தது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஒருபோதும் திமுகவையோ, கருணாநிதியையோ மதித்ததும் இல்லை, நம்பியதும் இல்லை என்ற உண்மையை வசதியாக எல்லோரும் மறந்தும், மறைத்தும் விட்டனர். தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தியே அவர்களை அழிப்பதில், ஆரியம் தொடர் வெற்றிகளைக் கண்டு வந்துள்ளது. 1991ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் அதற்கு மேலும் ஒரு சாட்சி.

 

 கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால், 1991 தேர்தலில் ராஜிவ் படுகொலைச் சம்பவம் ஏற்படுத்திய அனுதாப அலை, ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. அதிமுக மட்டுமே அந்தத் தேர்தலில் 164 இடங்களில் வெற்றி பெற்றது. திரைத்தாரையாக வாழ்வைத் தொடங்கிய ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற அரசியல் வேதிவினை வரலாற்றுச் சம்பவம் அப்போது அரங்கேறியது.

 

(தொடர்ந்து பேசுவோம்)

_________________________________________________________________________________________