முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் – 8 – தமிழர்களின் வரலாற்று இழிவு! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

 

Arasiyal pesuvom – 8

____________________________________________________________________________________________________________

 

jaya sasi1991 ம் ஆண்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா, பார்த்த முதல் வேலை, எம்.ஜி.ஆருடன் இருந்த அல்லது அவரது விசுவசாசிகளாக கருதப்பட்ட கட்சியின் மூத்த புள்ளிகளை ஓரம் கட்டியதுதான். எஸ்.டி. சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசு (தற்போது திருநாவுக்கரசர் – காங்கிரசில் இருக்கிறார்), கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் என இந்தப் பட்டியல் நீண்டது. சசிகலா அன்கோவுக்கு நெருக்கமானவர்கள் கட்சியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் காலத்தில் கொள்கையளவில் மட்டுமே குழப்பமான அமைப்பாகக் காணப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவின் கைக்கு மாறிய பின்னர் அரசியல், சமூக ரீதியான அனைத்துத் தார்மீக அறங்களையும் எந்தச் சங்கடமும் இன்றி உதறித் தள்ளிய லும்பர்களின் அமைப்பாக முழுவடிவம் பெற்றது.

 

இதனை அறிந்து கொள்ள பெரிய ஆய்வுகள் எதையும் நடத்த வேண்டிய அவசியமில்லை. வளர்ப்பு மகன் சுதாகரன் ஆடம்பர திருமணம், பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், டான்சி விவகார வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்கு, சு.சாமிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மகளிரணியினரால் நடத்தப்பட்ட ஆபாச நடனம், ப.சிதம்பரம், வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் மீதான தாக்குதல், பிளசன்ட் ஸ்டே முறைகேடு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற கல்லூரி மாணவிகள் மூன்று பேர் பேருந்தோடு சேர்த்து உயிருடன் கொளுத்தப்பட்டது, டான்சி வழக்கில் இது நான் போட்ட கையெழுத்தே இல்லை எனக் கூறி நீதிபதியை அதிர்ச்சியடைய வைத்தது, நீதிபதி ஒருவரின் மருமகன் மீது கஞ்சா வழக்குப் போட்டது, மற்றொரு நீதிபதியின் வீட்டுக்கு சென்ற நீர், மற்றும் மின் விநியோகத்தைத் துண்டித்து அவரைப் பதற வைத்தது…. என நீளும் பட்டியலை அசைபோட்டாலே போதுமானது.jaya sasi 2

 

இதற்குப் பின் 2001 ம் நடைபெற்ற தேர்தலில், நான்கு இடங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்து, பின்னர் அவை நிராகரிக்கப்பட்ட நிலையிலும், அதிமுக அதிக இடங்களைப் பெற்றதன் அடிப்படையில் விடாப்பிடியாக முதலைச்சர் பதவியில் அமர்ந்தார் ஜெயலலிதா. 1991-96 ஆட்சிக் காலத்தில் சுரண்டல் மற்றும் கொள்ளை அரசியலைக் கற்றுத் தெளிந்த ஜெயலலிதா, 2001-2006ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களை வேட்டையாடுவது, ஆடு,மாடு கோழி வெட்டத் தடை போன்ற இந்துத்துவ சக்திகள் வலுப்பெற ஏதுவாக சட்டதிட்டங்களை நிறைவேற்றுவது என பாசிஸ அரசியலின் உச்சத்தை எட்டினார். வைகோ, சுப.வீரபாண்டியன், நெடுமாறன் போன்றோரை பொடாவில் சிறைக்குள் தள்ளியதும் இந்தக் காலக்கட்டத்தில்தான். தனது பிரதான அரசியல் எதிரியாக ஜெயலலிதாவால் வாழ்நாள் முழுவதும் சித்தரிக்கப்பட்டு வரும் திமுக தலைவர் கருணாநிதியை ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே நள்ளிரவில் கைது செய்து, தனது அடுத்த கட்ட அரசியல் எப்படி இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையையும் அவர் விடுக்கத் தவறவில்லை. “ஆமாம், நான் ஒரு பாப்பாத்திதான்” என்று வெளிப்படையாக சட்டப்பேரவையிலேயே தனது ஆதிக்க அரசியலின் அடிப்படை உண்மையை அதிர முழங்கியதும் இந்த 2001-2006 ஆட்சிக் காலத்தில்தான்.

 

இதன்பிறகு, 2006 தேர்தலில் தோல்வியடைந்த ஜெயலலிதா 2011ல் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். கடந்த இரண்டு பருவ ஆட்சிக்காலத்தில் நடத்திய முறைகேட்டு அரசியலை மேலும் நவீனப்படுத்தி, சுரண்டலும், கொள்ளையும் அடுத்தகட்டப் பரிமாணத்தை அடைந்த ஆட்சிமுறையாக இது உருவெடுத்திருந்தது.

 

2001ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், புவனகிரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி என நான்கு இடங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எத்தகைய அத்துமீறலையும் செய்யக் கூடியவர் ஜெயலலிதா என்பதற்கு இதுவே வெளிப்படையான சான்று. ஒலி பெருக்கி வைப்பதற்கும், சுவரொட்டி ஒட்டுவதற்கும், வியாபாரிகள் பணம் கொண்டு செல்வதற்கும், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கும் தற்போது கெடுபிடி செய்யும் தேர்தல் ஆணையம், ஜெயலலிதாவின் (4 இடங்களில் வேட்புமனுத் தாக்கல்) அப்பட்டமான இந்த விதிமீறலை, குழந்தையின் செல்ல விளையாட்டைப் பார்த்துப் பூரிக்கும் பெற்றோரைப் போல புன்னகையுடன் கடந்து சென்றது. பின்னர் திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான மறைந்த குப்புசாமி இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். குப்புசாமி இறந்த பின்னர்தான் (14 ஆண்டுகள் கழித்து) இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக் கட்டத்தையே எட்டியது. கடந்த ஆண்டு (2015) தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஒருவர் இப்படி நடந்து கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அவற்றையெல்லாம் புறங்கை வீச்சில் புறந்தள்ளி விட்டு, எப்போதும் போல தமது எதேச்சதிகார அரசியலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. 2001ல் டான்சி வழக்கு தீர்ப்பால் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்ட போது, பொம்மை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை அமரவைத்தார். அதே போல, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குச் சென்ற போதும் பன்னீர்செல்வம் முதலமைச்சராக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டும்தான். பொம்மை முதல்வரை நாற்காலியில் அமர வைத்து தமது  ஆட்சி அதிகாரத்தை நடத்தும் அதிரடித் தலைவரும் அவர்தான்.

 

ஆனாலும், அவருக்கு எதிரான சிறுசிறு குரல்களைக் கூட மழுங்கடிப்பதில் ஆதிக்க சக்திகளின் கையில் இருக்கும் ஊடகங்கள் இன்று வரை மிகவும் கவனத்தோடு செயல்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதரின் பலவீனத்தின் விளைவை, தமிழகம் அரசியல் சீரழிவாக இன்று வரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட மக்களின் திரைமோகத்தால் ஒருமுறை சரிந்த (என்.டி.ராமாராவ் முதலமைச்சரானது) அரசியல், அடுத்த சில ஆண்டுகளிலேயே சரியான பாட்டைக்குத் திரும்பியது. கேரளாவிலும், கர்நாடகாவிலும் எத்தனையோ நடிகர்கள் செல்வாக்குடன் இருந்த போதிலும் கூட அவர்கள் கையில் அரசியல் முற்றிலுமாகக் கைமாறிவிடவில்லை. ஆனால், தமிழகத்தில் இந்திய அளவிலான ஓர் இழிவாகவே அது தொடர்கிறது. அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவின் அத்தனை இழிவுகளையும் தாண்டி, அவர் ஓர் பார்ப்பனர் என்பதற்காகவே உயர்சாதியினர் அனைவரும் அவரை ஆதரிக்கின்றனர்.

 

தமிழகத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக பத்திரிகைகளோ, ஊடகங்களோ எந்த உண்மைகளையும் பேசுவதில்லை. இதன் மூலம், தமிழ்ச் சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுத்துச் செல்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி, ஊடகங்கள் தங்கள் அடிமைப்பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. ஆம், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற அரசியல் சீரழிவுகளை விட அவர்களைப் போற்றிப் பாதுகாக்கும் ஊடகங்களே வரலாற்றில் முதல்குற்றவாளிகளாக தலைகுனிந்து நிற்க நேரிடும். 

 

அரசியலில், குறைந்தபட்ச தார்மீக அறங்களைக் கூட கடைப்பிடிக்காத ஜெயலலிதாவின் அரசியலைப் பற்றி தனித்தனியாக விமர்சிக்க ஒன்றுமில்லை, தமிழர்களின் 2000 ஆண்டுகால வரலாற்றின் இழிவு என்பதைத் தவிர!

 

(தொடர்ந்து பேசுவோம்)

 

_________________________________________________________________________________________________________