Arasiyal pesuvom – 9
___________________________________________________________________________________________________________
1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.
மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.
சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பெருமித உணர்வு பொங்க அதன் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட அண்ணா பேசுகிறார்.
பெரியாருடன் ஏற்பட்ட பிளவு பற்றி பல்வேறு விளக்கங்களை ராபின்சன் பூங்காவில் ஆற்றிய அந்த உணர்ச்சி மிகு உரையில் அண்ணா விவரிக்கிறார். பெரியார் – மணியம்மை திருமண எதிர்ப்பு திமுகவின் உதயத்திற்கு உடனடிக் காரணமாகக் கருதப்பட்டாலும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்கும் முடிவை அண்ணா எதிர்த்தது போன்ற வேறுபல முரண்பாடுகளும், இந்தப் பிரிவுக்கு பல ஆண்டுகளாகவே தூபம் போட்டிருப்பதை வரலாற்றுச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வுக்கான பின்னணி என்பது ஓரிரு ஆண்டுகளில் உருவானதல்ல. பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகத்தின் தளகர்த்தராக அண்ணா செயல்பட்டுக் கொண்டிருந்த போதே மெல்லிய ஊடலாகவும், உரசல்களாகவும் விழுந்த கீறல்கள்தான், பின்னாளில் பிளவாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனைப் புரிந்து கொள்ள திமுகவின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் வரலாற்றைச் சற்றே புரட்டிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதனை வளர்த்தெடுத்த தத்துவார்த்த ஆளுமைகளின் பரிணாம வளர்ச்சிகளைப் புரிந்து கொள்ளவும் அது உதவும்.
சென்னை மாகாணத்தில் உள்ள நான்கரைக் கோடி மக்கள் தொகையில், 4 கோடிக்கும் குறையாமல் உள்ள பிராமணரல்லாதாருக்கு, கல்வி, அரசியல், வேலைபாய்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்த உணர்வுகளின் அரசியல் எதிர்வினைதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். 1916ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள், பி.தியாகராய செட்டியார் தலைமையில், மெட்ராசில் கூடிய பிராமணரல்லாத பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற பிரம்மாண்ட மாநாட்டில்தான் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே நாளில் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற கூட்டுப் பங்கு நிறுவனமும் தொடங்கப்பட்டது. “பிராமணரல்லாதாரின் கொள்கை அறிக்கை” என்ற பிரகடனமும் இதில் வெளியிடப்பட்டது.
1916 தொடங்கி 1920 வரையிலான நான்கு ஆண்டுகளுக்குள் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் முழுமையான அரசியல் வடிவத்தை எட்டியது. ஜஸ்டிஸ் என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையும், திராவிடன் என்ற பெயரில் தமிழ்ப் பத்திரிகையும், ஆந்திர பிரகாசினி என்ற தெலுங்குப் பத்திரிகையும் தொடங்கப்பட்டன. ஆங்கில ஏட்டின் பெயரிலேயே ஜஸ்டிஸ் பார்ட்டி என்றும், நீதீக்கட்சி என்றும் பிராமணரல்லாதாருக்கான அமைப்பு அழைக்கப்பட்டது. படித்தவர்களும், சொத்துள்ள தனவந்தர்களும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்ற சட்டமன்றத் தேர்தல் 1920ம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற நீதிக்கட்சி ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தது.
இந்தக் காலக்கட்டத்தில் சென்னை மாகாண காங்கிரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக தீவிரமாக செயல்பட்டு வந்த ஈ.வெ.ரா. பெரியார், ஈரோடு நகராட்சித் தலைவராகவும் இருந்தார். அவரது நெருங்கிய நண்பராகவும், சக அரசியல் தோழமையாகவும் இருந்த ராஜாஜி அப்போது சேலம் நகரசபைத் தலைவர். 1920ம் ஆண்டு காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்திற்கு ஏற்ப நண்பர்கள் இருவரும் தங்களது பதவிகளை தூக்கியெறிந்தனர்.
ஆனால் காங்கிரஸ் மீது பெரியாருக்கு இருந்த இத்தகைய தீவிரப் பிடிப்பு நெடுநாட்கள் நீடிக்கவில்லை. வர்ணாசிரமவாதிகளின் இறுக்கமான பிடிக்குள் இருந்த காங்கிரசுக்குள், தன்னியல்பிலேயே ஆதிக்க மறுப்பாளராக முகிழ்த்திருந்த பெரியாரால் நிலை கொள்ள முடியாமல் போனதில் வியப்பில்லைதான். 1919ம் ஆண்டு திருச்சியிலும், 1920ல் நெல்லையிலும், 1925ம் ஆண்டு காஞ்சிபுரத்திலும் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார் பெரியார். காங்கிரசை கட்டியாண்டு வந்த வர்ணாசிரம வாதிகளால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இறுதியாக காஞ்சிபுரம் மாநாட்டில் அவரது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கை நிராகரிக்கப் போட்டது கொதித்தெழுந்த பெரியார், “காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் ஒரு போதும் நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழித்துக் கட்டுவதே இனி எனது வேலை” என்று முழங்கி விட்டு அங்கிருந்து வெளியேறினார். வரலாறு, தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையைக் கொண்டது என்ற கூற்றுக்கிணங்க, சமூகநீதிக்கான போராளியை சமூக அநீதியே அன்று உருவாக்கிக் கொண்டது.
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான குரலை உரக்க ஒலித்து விட்டு, காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், 1925ம் ஆண்டு மே மாதத்தில் குடியரசு இதழைத் தொடங்கினார். அதற்கான அச்சகத்திற்கு “உண்மை விளக்கம் பிரஸ்” என்று பெயரிட்டார். “மக்களுக்குள் சுய மரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு, தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்” என்று முழங்கியது குடியரசு ஏட்டின் முதல் இதழ்.
(தொடர்ந்து பேசுவோம்)
____________________________________________________________________________________________________________