முக்கிய செய்திகள்

அரசியல் பேசுவோம் – 13 – எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

 

Arasyal Pesuvom – 13

_________________________________________________________________________________________________________

 

anna - mgr20.5.161952ம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் தாக்கியது. இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக திரை நட்சத்திரங்கள் மூலமாக நிதி திரட்டியது. கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் இதற்கான பணியை முன்னெடுத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியைத் திரட்டி உள்ளனர். அப்போது நடைபெற்ற நிதியளிப்புக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை டி.வி.நாராயணசாமி மூலம் தாம் சந்திக்க நேர்ந்த அனுபவத்தை அண்ணா மேடையில் பகிர்ந்து கொண்டார். முதன் முதலாக எம்.ஜி.ஆரைத் தாம் சந்தித்த போது அவர் பிராமணரோ எனத் தாம் சந்தேகித்ததாகவும், பின்னர் அவர் திராவிடர் என அறிந்து அகமகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

1953ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே மேடையில் மின்னியது. எதிர்காலத்தில் திமுக அடைந்த வளர்ச்சிக்கு, இத்தகைய திரை நட்சித்தரங்களின் வர்ணஜால வசீகரம் பெரும் காரணியாக அமைந்தது.

 

அதே ஆண்டு ஆந்திரமாநிலப் பிரிவினை கோரி உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீ ராமுலு மரணமடைந்தார். இதன் விளைவாக கர்நூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரா பிரிக்கப்பட்டது. அப்போது, திருத்தணி உள்ளிட்ட தமிழ்ப் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கக் கோரி தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டத்துக்கு திமுக ஆதரவு கொடுத்தது. இதன் மூலம் திமுக, தமிழ்த்தேசிய இனத்துக்கான தனது அடுத்த கட்ட அரசியலை உள்வாங்கிக் கொள்ள அண்ணா வழி வகுத்தார். அதுமட்டுமல்ல, பெரியார் அறிவித்த பிள்ளையார் அறிவிப்புப் போராட்டத்திலும் திமுக பங்கேற்கவில்லை. “தாங்கள் பிள்ளையாரையும் உடைக்கப் போவதில்லை, பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கப் போவதில்லை” என அழுத்தமான அரசியல் லாவகத்துடன் தனது நிலைப்பாட்டை அப்போது வெளிப்படுத்தினார் அண்ணா.

 

ANNAMGRMK1953ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ராஜாஜி அறிவித்த குலக்கல்வித் திட்டம், திமுகவுக்கு மேலும் ஒரு அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தது. 6வயது முதல் 11 வயதுவரையிலான சிறுவர்கள் இனி பாதிநேரம் வீட்டுக்குச் சென்று ஏதேனும் தொழில் புரிய வேண்டும் என்றும், சிறுமியர் வீட்டுவேலை செய்ய வேண்டும் என்றும் அறிவித்தார். இதைக் குலக்கல்வித் திட்டம் என விமர்சித்த அண்ணா, அதற்கு எதிரான போராட்டத்தை அறிவித்தார். 1953ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி ராஜாஜி வீட்டுக்கு முன்பாக சம்பத் தலைமையில் அந்தப் போராட்டம் நடைபெற்றது. அதே நாளில் திருச்சி அருகே டால்மியாபுரம் என்ற வடநாட்டவரின் பெயரைக் “கல்லக்குடி” என மாற்ற வலியுறுத்தி கருணாநிதி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, தமிழ்ப் பகுதிகளை தமிழகத்துடன் சேர்க்கக் கோரிப் போராடுவது “முட்டாள்தனம்” என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியதைக் கண்டித்து ஜூலை 15ம் தேதி தமிழகம் எங்கும் திமுக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டங்களை ஒடுக்க, ராஜாஜியின் அரசு, தலைவர்களை முன்கூட்டியே கைது செய்வது முதல் துப்பாக்கிச் சூடு வரை அதிகபட்ச யதேச்சாதிகாரத்தைக் கையிலெடுத்தது. ஆனாலும் அறிவிக்கப்பட்ட போராட்டங்களை, சம்பத், கருணாநிதி உள்ளிட்ட அடுத்தகட்டத் தலைவர்கள் ஆக்ரோஷம் குறையாமல் நடத்தி முடிக்கத் தவறவில்லை. இப்படி திமுக அப்போது நடத்திய மும்முனைப் போராட்டம், மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு போர்க்குணம் மிக்க இயக்கம் என்ற தோற்றத்தைப் பெற உதவியது. 

 

குலக்கல்வித் திட்டத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக 1954ம் ஆண்டு மார்ச் மாதம் ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக, பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காமராஜர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு மே மாதம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் காமாராஜர். இந்தத் தேர்தலில் காமராஜரை ஆதரித்த பெரியார், பின்னாளில் அவரைப் “பச்சைத் தமிழர்” புகழத் தொடங்கினார்.

 

குடியாத்தம் இடைத்தேர்தலின் போது காமராஜரை ஆதரித்த திமுக, பின்வந்த நாட்களில் தனது காங்கிரஸ் எதிர்ப்பை புதுப்பித்துக் கொள்ளத் தவறவில்லை.

 

1956ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை விருதுநகரில் தொடங்கினார். மொழிவாரிப் பிரிவினை உறுதியாகி விட்டிருந்த நிலையிலும் கூட, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கையைச் செவி மடுக்கத் தவறியது. காங்கிரசின் கடும் சரிவு அங்கேயே தொடங்கி விட்டதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. 77 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 13ம் தேதி, தமது கோரிக்கை நிறைவேற்றப் படாத ஏக்கத்துடனேயே அந்த மகத்தான தியாகியின் இன்னுயிர் பிரிந்தது. உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தியாகி சங்கரலிங்கனாரை தாம் நேரில் சென்று சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து, தனது தம்பிக்கு கடிதத்தில் உணர்ச்சி மிக்க சித்திரத்தைத் தீட்டி இருந்தார் அண்ணா. “நான் செத்துக் கொண்டிருக்கிறேனடா, செயலற்றவனே என்பதல்லவா அந்தப் பார்வையின் பொருள்” என சங்கரலிங்கனார் தம்மைப் பார்த்த போது கிளர்ந்தெழுந்த உணர்வுகளை, அக்கடிதத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார் அண்ணா. சங்கரலிங்கனாரின் மறைவை ஒட்டி திமுக சார்பில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்ணா தலைமையில் திமுக அரியணை ஏறிய போதுதான், தியாகி சங்கரலிங்கனாரின் கனவு நனவானது. ஆம். அப்போதுதான் சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றம் கண்டது.

 

1957 தேர்தல் வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக தமிழர் உரிமையும், தமிழக நலனும் பேசும் இயக்கமாக முற்றிலும் மாறி இருந்தது. அல்லது அண்ணா அதனை மாற்றிவிட்டார். அந்தத் தேர்தலில் காமராஜரையும், அவருக்காக காங்கிரசையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். களத்தில் காமராஜருக்கும், காங்கிரசுக்கும் எதிராக நின்றது திமுக. இந்தத் தேர்தலில் திமுகவில் இருந்து போட்டியிட்ட 124 பேரில் அண்ணாவோடு சேர்த்து 15 பேர் வெற்றி பெற்றனர். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவும், கருணாநிதி, அன்பழகன், சத்தியவாணி முத்து, ஏ.வி.பி.ஆசைத்தம்பி போன்றோர் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானோர். தோல்வியடைந்தவர்களில் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், எஸ்.முத்து, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கண்ணதாசன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். கட்சி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவையில் தன் முதல் கணக்கைத் தொடங்கியது திமுக. அப்போதைய வாக்காளர்களில் 14 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களித்திருந்தனர். நாடாளுமன்ற மக்களவைக்கு நடந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஈ.வெ.கி சம்பத்தும், ஆர். தர்மலிங்கம் இருவரும் வெற்றி பெற்றனர்.

 

அடுத்தபடியாக 1962 தேர்தலைச் சந்திப்பதற்கு இடையில், திமுகவில் முதல் பிளவு எனக் கூறப்படும் ஈ.வெ.கி.சம்பத் வெளியேற்றம் நடந்து விட்டது.

 

1955ம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 1960ல் முடிவுக்கு MGR KARUNANIDHIவந்தது. அடுத்தது பொதுச்செயலாளர் யார் என்பதில் பெரும் போட்டி ஏற்பட்டது. இதனைச் சமாளிக்க அண்ணாவே மீண்டும் பொதுச்செயலாளரானார். அதாவது கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதில், ஈ.வெ.கி.சம்பத்துக்கும் , கருணாநிதிக்கும் போட்டி இருந்தது.  இது வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் திராவிட நாடு கோரிக்கையை தனித் தமிழ்நாடு கோரிக்கையாக மாற்ற வேண்டும் என்ற தமது கருத்தை திமுக ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறி, 1960ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். இதன் தொடர்ச்சியாக கண்ணதாசன் உள்ளிட்ட தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து “தமிழ்த் தேசியக் கட்சி” என்ற தனி இயக்கத்தையும் தொடங்கினார். “திராவிட நாட்டுக்கு பதிலாக தமிழ்நாடு தரக் கோரினால் உடனே தந்து விடுவதாக நேரு கூறினாரா?” என்றெல்லாம் சம்பத்துக்கு கேள்வி எழுப்பி அண்ணா பலவாறாக விமர்சித்துள்ளார். திக வில் இருந்து விலகியபோது பெரியாரை விமர்சிப்பதில் அண்ணா கடைப்பிடித்த கண்ணியத்தை, திமுகவில் இருந்து விலகிய சம்பத்தும், கண்ணதாசனும் அண்ணாவை விமர்சிப்பதில் கடைப்பிடிக்கவில்லை என்பதையும், வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

 

தமிழ்த் தேசியக் கட்சி காலத்தில் கரைய, அதைத் தொடங்கிய சம்பத் காங்கிரசில் சேர்ந்து கரைந்து போனார்.

 

1962ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, முத்துராமலிங்கத் தேவரின் பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துச் சந்தித்தது திமுக. இந்தத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 50 பேர் வெற்றி பெற்றாலும், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணா தோல்வியைச் சந்தித்தார். ஆனால், கடந்த தேர்தலை விட, திமுகவின் அரசியல் பலமும், மக்கள் செல்வாக்கும் பல மடங்கு அதிகரித்திருந்தது. அதே ஆண்டில் திருச்செங்கோடு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது. ஆளும்கட்சிக்கு எதிராக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எத்தனை கடினமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

 

அடுத்த மாதம் வந்த நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், அண்ணா திமுகவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவைத் தேர்தலில், அண்ணாவைத் தோற்கடித்ததன் மூலம், அவரது நாடாளுமன்ற அரசியலைத் தொடங்கி வைக்க காங்கிரஸ் உதவியது.

 

__________________________________________________________________________________________________________