அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது.
மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி அமர்வில் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் சரியான நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அவசர கதியில் நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஏப்ரல் 18 அன்று இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம் என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
ஒரு தொகுதிக்கு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றால் 24 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துவிட்டனர்.
மேலும், உரிய நேரத்தில் 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தி, திமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.