25 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடும் திட்டம் எதுவுமில்லை என தமிழக அரசின் சமூக நலத்துறை விளக்கமளித்துள்ளது.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்டு, பின்னர் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், அகில இந்திய அளவில் பேசப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில், குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் சத்துணவு மையங்களை தமிழக அரசு மூடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு சமூகநலத்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகம் முழுதும் 42 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையும் தனித் தனி சத்துணவுக் கூடங்கள் இயங்கிவரும் நிலையில் அவற்றை ஒரே மையமாக மாற்றி இயங்கச் செய்யவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் சத்துணவு அமைப்பாளர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூகநலத்துறை ஆணையர் அனுப்பியுள்ள அறிக்கையில், அந்த மையங்களில் கூடுதலாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களை காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.