மொழிகளைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்க வேண்டாம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய தொல்லியல் துறை, தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.
இந்தப் படிப்புக்கான அறிவிப்பில், குறைந்தபட்ச கல்வித் தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தொல்லியல் சார்ந்த இந்திய செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபிக் அல்லது பெர்சியன் மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை.
இதையடுத்து, அப்பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று (அக். 08) கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, நேற்று வெளியான புதிய அறிவிப்பில், தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 09) தன் முகநூல் பக்கத்தில், “மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது.
கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், திருத்தப்பட்ட அறிவிக்கையில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடித்தளமாக விளங்குபவை மொழிகளே! அவற்றைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக கடைப்பிடிக்கவும் வேண்டாம்; அதை மாநில அதிமுக அரசு வேடிக்கை பார்க்கவும் வேண்டாம்!” எனப் பதிவிட்டுள்ளார்.