
நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவம் நன்றி தெரிவித்துள்ளது.
தென்இந்தியப் பகுதிக்கான ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஹெலிகாப்டர் விபத்து பற்றி அறிந்ததும் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள் என லெப்டினென்ட் ஜெனரல் அருண் பாராட்டியுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தின்போது என்னென்ன உதவிகளெல்லாம் முடியுமோ, அதையெல்லாம் தங்களது தலைமையின்கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்தது என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேர்வதற்கு உற்காசமூட்டுவதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமையும் என லெப்டினென்ட் ஜெனரல் அருண் கூறியுள்ளார்..