முக்கிய செய்திகள்

எம்.ஜி.ஆரை ராசியில்லாதவர் என்று சொன்ன திரையுலகம்…!: ஆரூர்தாஸ்

எம்.ஜி.ஆரை ராசியில்லாதவர் என்று சொன்ன திரையுலகம்…!

ஆரூர்தாஸ்

ஆரூர்தாஸ்

_____________________________________________________________________________

MGR neethikkuppin pasam 1நீதிக்குப்பின் பாசம் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
 
 
ஒருநாள், கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ் தன் காரில் காரில் மவுண்ட் ரோடுக்குப் போகும் வழியில் ஜெமினி ஸ்டூடியோ அருகில் (அப்பொழுது அண்ணா மேம்பாலம் கட்டப்படவில்லை) நீதிக்குப்பின் பாசம் படத்திற்கு ஒரு பெரிய விளம்பர பேனர். சாலையோரத்தில் சவுக்கு மரம் நடப்பட்டு அதன் மீது உயரத்தில் அனைவருடைய கண்களையும் கவரும் வகையில் அழகாக வைத்திருந்தார்கள்.
அதில் என் பெயர் எழுதப்படவில்லை. அதைப்பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது.
அது கம்பெனி வைத்த பேனர் என்று எண்ணி படப்பிடிப்பில் தேவரண்ணனிடம் கூறி குறைப்பட்டுக் கொண்டேன். அப்போது அருகில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
 
 
மூன்று நாட்களுக்குப்பின்னர் எம்.ஜி.ஆர். என்னைக் கேட்டார்:
 
 
மனைவி வி.என்.ஜானகியுடன் எம்.ஜி.ஆர்

மனைவி வி.என்.ஜானகியுடன் எம்.ஜி.ஆர்

 

அவர்:  என்ன முதலாளி? (சில சமயங்களில் தேவரண்ணனையும் என்னையும் சேர்த்து முதலாளி என்பார். அது அவருடைய மனோ நிலையைப் பொறுத்தது.) ஜெமினி பேனரை இப்போ   பாத்திங்களா?.

 
 
நான்:  இல்லியே. ஏண்ணே?
 
 
அவர்:– இப்பவே ஒங்க காரை எடுத்துக்கிட்டுப் போயி ஒரு நிமிஷம் பாத்திட்டு வாங்க சொல்றேன் – போங்க.
போய் பார்த்தேன். ஒரு பிளைவுட் துண்டுப் பலகையில் கதை–வசனம்: ஆரூர்தாஸ் என்று என் பெயர் பெரிதாக எழுதப்பட்டு அந்தப் பேனரில் தனியாகப் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
 
 
திரும்பி வந்து எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் சொன்னார்: முந்தா நாள் அண்ணன்கிட்டே நீங்க சொன்னதைக் கேட்டு எங்க ஆபீசுக்கு (எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்) போன் பண்ணிக் கேட்டேன். பேனர் எழுதுனவுங்க மறந்து விட்டுட்டாங்க போலிருக்குன்னு மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன் சொன்னாரு. உடனே ஒங்க பேரை எல்லா பேனர்லயும் சேக்கணும்னு சொன்னேன். வீரப்பன் அப்படியே செஞ்சிட்டாரு. அதனாலதான் ஒங்களை போய் பாக்கச் சொன்னேன்.
 
 
நான்:– அப்படின்னா, அது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வச்ச பேனரா?
 
 
அவர்:– ஆமா, சென்னை நகர வெளியீடு நாமதானே?
 
 
நான்:– அடடே! இது தெரியாம, தேவர் பிலிம்ஸ் வச்ச பேனர்னு நினைச்சித்தான் அண்ணன்கிட்டே சொன்னேன். ஸாரிண்ணே. ஒங்களுக்கு வீணா தொந்தரவு கொடுத்திட்டேன். ஆர்.எம்.வீரப்பண்ணன் என்னைத் தப்பா நினைச்சிடப்போறாரு.
 
 
அவர்:– அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாரு. இப்போ ஒங்களுக்கு ஏற்பட்ட இந்த உணர்வு ஒருகாலத்துல எனக்கும் உண்டாச்சு. நான் கோவை ஜூபிடர் பிக்சர்ஸ்ல மாசச்சம்பளத்துல படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருந்தப்போ – எனக்கு ஹீரோ அந்தஸ்து கிடைக்கிறதுக்கு முந்தி – விளம்பரங்கள்ல எம்பேரைப் போடாம என்னைப் புறக்கணிப்பாங்க.அப்போல்லாம் நான் மனசு வேதனைப்பட்டு நமக்கும் ஒரு காலம் வரும்னு நினைச்சி ஆறுதல் அடைவேன்.
 
 
அந்தச் சமயத்துல ஜூபிடர் பிக்சர்ஸ்ல நிர்வாகியா இருந்த அவர் (எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட அந்தப் பெயரை இங்கு எழுத நான் விரும்பவில்லை. இப்பொழுது அவர் உயிரோடு இல்லை) என்னைக் கூப்பிட்டு, ராமச்சந்திரா! கேன்டின்லேருந்து டீ வாங்கிட்டு வான்”னு சொல்வாரு. வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.
பிற்காலத்துல பல வெற்றிப்படங்கள்ள நடிச்சி நான் ஹீரோ ஆகி, எனக்கு மார்க்கெட் மதிப்பு வந்ததுக்கப்புறம் அதே ஜூபிடர் நிர்வாகி எங்கிட்டே வந்து, எம்.ஜி.ஆர்! நான் கஷ்டத்துல இருக்கேன். எனக்கு ஒரு படம் பண்ணிக்குடுங்கன்னு கேட்டாரு. நானும் அதுக்கு மனப்பூர்வமா சம்மதிச்சி கால்ஷீட் கொடுத்து, பூஜை போட்டுத் தொடங்கி கொஞ்ச நாள் ஷ_ட்டிங் நடந்தப்புறம் அவரால மேற்கொண்டு படப்பிடிப்பைத் தொடர முடியாம அந்தப்படம் அப்படியே நின்னு போயிடுச்சி என்றதும் நான் குறுக்கிட்டு, எனக்கும் தெரியும் அண்ணே! அந்தப்படம்தானே? என்று அதன் டைட்டிலைக் குறிப்பிட்டேன்.
 
 
அவர்:– ஆமா. அதுவேதான். இன்னும் சொல்றேன் கேளுங்க. என்னை வச்சிப் படம் ஆரம்பிச்சா அது வளராம நின்னு போயிடும். ஏன்னா எம்.ஜி.ஆர். கால்ஷீட் கொடுக்க மாட்டாருங்குற ஒரு வதந்தி உண்டு. அது எனக்கும் தெரியும்.
 
 
இப்போ ஒங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். சில போலித் தயாரிப்பாளருங்க என்னை வச்சிப் பணம் சம்பாதிக்கிறதுக்காக, நான் நடிக்கிறதா சொல்லி பைனான்சியர் கிட்டே பணம் வாங்கி சும்மா பேருக்கு எனக்கு ஒரு சின்ன அட்வான்சைக் கொடுத்து எங்கிட்டே அனுமதி வாங்கிக்கிட்டு பேப்பர்ல விளம்பரம் கொடுப்பாங்க… பூஜை போட்டு ஒருநாள் ரெண்டு நாள் படப்பிடிப்பு நடத்துவாங்க.
 
 
அதைப்பாத்து ஏமாந்து ஒரு சில விநியோகஸ்தருங்க, ஏரியாக்கள் பேருல முன் பணம் கொடுப்பாங்க. அவ்வளவுதான். அந்த அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கிட்டதோட சரி – அதுக்கப்பறம் எனக்கோ – மத்த நடிகருக்கோ– கலைஞர்களுக்கோ சம்பளம் கொடுக்காம சாக்குப் போக்கு சொல்லுவாங்க.
 
 
அதோடகூட எம்.ஜி.ஆர். கால்ஷீட் கொடுக்க மாட்டேங்குறாரு. அதனால ஷ_ட்டிங் நடத்த முடியலேன்னு சொல்லி மொத்த பழியையும் எம்மேல போட்டுட்டு தப்பிச்சிக்குவாங்க. அப்படிப்பட்டவுங்கன்னு தெரிஞ்சி, அவுங்களை மாதிரி ஆளுங்களைத் தவிர்க்கிறதுக்காகத்தான் என் ஒப்பந்தப் பத்திரத்துலே கடுமையான நிபந்தனைகளை விதிப்பேன். அந்தக் கடுப்புலதான் என்னைப்பத்தின தவறான வதந்தியை அவுங்க பரப்புவாங்க.
 
 
எம்.ஜி.ஆர். மேலும் தொடர்ந்தார்:– அண்ணனைக் கேட்டுப்பாருங்க. கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸ்ல நான் மாதச் சம்பள நடிகரா இருந்த காலத்துல, குடும்பம் நடத்த முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்னு அவருக்குத் தெரியும். உள்ளூர்காரர்ங்குறதுனால அவருதான் அப்பப்போ எனக்கு எவ்வளவோ உதவிங்க செய்திருக்காரு.
 
 
அப்படிப்பட்ட கஷ்டகாலத்துல எல்லாம் எந்தப் படத் தயாரிப்பாளருங்க எனக்கு என்ன உதவி செய்திருக்காங்க? ஒருத்தருமே ஒண்ணுமே செய்யலே.
 
 
1947ல, நான் ஹீரோவா நடித்து ஏ.எஸ்.ஏ.சாமி அண்ணன் முதல் முதலா டைரக்ட் பண்ணி வெளிவந்து வெற்றியடைஞ்ச ராஜகுமாரி படத்துலே என்னை ஹீரோவா போடுறதுக்குத் தயாரிப்பாளருங்க தயங்குனாங்க. ராமச்சந்திரன் தான் என் படத்துக்கு ஹீரோன்னு சாமி அண்ணன் அடிச்சி சொல்லிட்டாரு.
தயாரிப்பாளருங்க தயங்குனதுல ஒரு காரணமும் இருந்தது. அது என்னன்னா, அந்தப் படத்துக்கு முன்னால, நான் ஹீரோவாகவும், டி.வி.குமுதினி ஹீரோயினாகவும் நடிச்சித் தொடங்க இருந்த சாயாங்குற படம் விளம்பரத்தோட நின்னு போயிடுச்சி. வேற ஏதேதோ காரணத்தினால அந்தப்படத்தைத் தயாரிப்பாளருங்க கைவிட்டுட்டாங்க.
 
 
எனக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? கடைசில பழியை எம்மேல சுமத்துனாங்க. ராமச்சந்திரன் ராசி இல்லாதவன். அதனாலதான் படம் நின்னு போயிடுச்சின்னு சொல்லி எம்மேலேயே எனக்கே ஒரு அவநம்பிக்கை உண்டாகும்படி பண்ணி என்னைக் கோழையாக்கிட்டாங்க.
 
 
அப்போ அவுங்களால எனக்கு ஏற்பட்ட அவச்சொல், அவமானம், துன்பம் எதையுமே நான் மறக்கலே. இன்னிக்கும் அதெல்லாம் என் ஞாபகத்துல இருக்கு.
 
 
mgr2
இப்போ எங்கே போச்சு அந்த ராசி? எத்தனையோ நடிகருங்க வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, அவங்கள்ள யாருமே என்னைப்போல அவமானமும், துன்பமும் பட்டிருக்க மாட்டாங்க.
 
 
எனக்கும் ஒரு நல்ல காலம் வரும்! நானும் சிறந்த நடிகனா வருவேன்! எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பாண்ணன் மாதிரி எனக்கும் புகழ் கிடைக்கும்! நானும் ஒரு படத்தயாரிப்பாளராவேன்! என் படத்தை நானே டைரக்ட் பண்ணுவேன்! வெற்றியடைஞ்சிக் காட்டுவேங்குற நம்பிக்கை அப்பவே எனக்கு இருந்தது! எங்கம்மாவும் இதையேதான் அடிக்கடி சொல்லிச் சொல்லி எனக்குத் தைரியம் கொடுப்பாங்க. அன்னிக்கு என் தாய் கொடுத்த தைரியத்தோடதான் அவுங்களைத் துணையாக் கொண்டு நான் வாழ்ந்து கிட்டிருக்கேன் – இன்னிக்கு வரைக்கும்.
 
 
அந்தத் தாய்க்குலத்தோட அருமை பெருமைகளைச் சொல்லி, ‘தாய் சொல்லைத் தட்டாதே” படத்துல நீங்க வசனம் எழுதி, முதல் நாள் படப்பிடிப்புல எங்கிட்டே படிச்சிக்காட்டுனீங்களே – அதைக்கேட்டப்பறந்தான் ஒங்கமேல எனக்கு ஒரு அலாதி அன்பும், ஈடுபாடும் ஏற்பட்டுச்சி.
 
 
அதுவரைக்கும் ஒங்களை நான் ஒருவித மாற்றுக் கண்ணோட்டத்தோடதான் பார்த்தேன். அதை நீங்க புரிஞ்சிக்கிட்டிங்கன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன். நான் தெரிஞ்சிக்கிட்டேங்குறதையும் நீங்க புரிஞ்சிக்கிட்டிங்க.mgr thaisollaithattahe
 
 
நீங்க ரொம்ப புத்திசாலி! மனோதத்துவம் தெரிஞ்சவரு! அதை வச்சி மத்தவுங்களை நல்லா எடை போடுறீங்க. அதனாலதான் குடும்பக்கதைகள்ல மனசைத்தொடும் படியான உணர்ச்சி மிக்க வசனங்களை ஒங்களால உருவாக்க முடியுது.
 
 
மனசைத் திறந்து இன்னிக்கு ஒங்களைப் பத்தின ஒரு உண்மையைச் சொல்றேன். நானோ சிவாஜியோ ராஜா ராணிக் கதை கொண்ட படங்கள்ளேதான் நடிச்சிருக்கோம். செந்தமிழ்லே எழுதப்பட்ட அண்ணா – கருணாநிதியோட வசனங்களைத்தான் அதிகமா பேசி பழக்கப்பட்டிருக்கோம்.
 
 
ஆனா அன்றாடம் நடக்குற நிகழ்ச்சிகளை வச்சிப் பின்னுன குடும்பக்கதைகளுக்கு ஏத்தமாதிரி எதார்த்தமான பேச்சுத்தமிழ்லே, இயற்கையா, நல்ல கருத்துக்களோட நீங்க எழுதுற இந்தத்தமிழை ரொம்ப சரளமா ஒங்ககிட்டேதான் பேசுறேன்!
 
 
ஒரு தடவை நீங்க சொல்லிக் கொடுத்தாலே போதும். உடனே அது மனசுல பட்டுன்னு பதிஞ்சிடுது.
ஏன்னா இது இயற்கையா – சர்வ சாதாரணமா இருக்குறதுதான் காரணம். எனக்குத் தெரியும். தமிழார்வத்துல – தமிழ்ப்பற்றுல நான் யாருக்கும் குறைஞ்சவன் இல்லேங்குறதை கொஞ்சம் கர்வத்தோடயே சொல்லிக்குறேன். அதை வச்சித்தான் இதைச் சொல்றேன்.
 
 
முறையா கல்வி கற்றவுங்களுக்கும் சரி – அது இல்லாம என்னை மாதிரி சிவாஜி மாதிரி நாடகக்கலை அனுபவம் கொண்டவுங்களுக்கும் சரி, இலக்கணத்தோட கூடிய செந்தமிழ் வசனங்கள் எழுதுறதும் அதை அப்படியே உச்சரிச்சிப் பேசுறதும் ரொம்ப சுலபம் – அது அவ்வளவு கஷ்டம் இல்லே.
 
 
ஆனா, பேச்சுத் தமிழை அப்படியே சரளமா எழுதுறதும், அதை இயற்கையா, அழகா பேச வைக்குறதும் ரொம்ப கடினம். அது ஒங்களுக்குக் கைவந்த கலையா இருக்கு! அது கடவுள் ஒங்களுக்குக் கொடுத்திருக்குற அருள்! அதனாலதான் குறைஞ்சது ஒரு மாசத்துக்கு மேல நேரம் எடுத்துக்கிட்டு யோசிச்சு, யோசிச்சு எழுதவேண்டிய ஒரு முழுப்படத்தோட மொத்த வசனங்களையும் ஒரே வாரத்துக்குள்ளே எழுதிப் போட்டுட்டுப் போயிடுறீங்க.
 
 
நீங்க நினைச்சா வசனம் தானா வருது. அந்த வேகத்தை வச்சித்தான் இவ்வளவு படங்களை நீங்க சமாளிக்கிறீங்க.
 
 
இதைத்தான் தேவரண்ணன் எங்கிட்டே சொல்லுவாரு. தாசோட வேகமான எழுத்தை வச்சித்தான் நீங்க ஒரே மூச்சுல கொடுக்குற கால்ஷீட்டைப் பயன்படுத்திக்கிட்டு ஒரே மாசத்துல என்னால படம் பண்ண முடியுது. நீங்களும் அவனும்தான் என்னோட ரெண்டு கைங்கன்னு சொல்லி ஒங்களை மனசாரப் பாராட்டுவாரு!
இப்போதான் எனக்குத் தெரியுது. சிவாஜிக்கு அந்தக் காலத்து லேருந்தே ரொம்ப வேண்டிய கதை வசன கர்த்தாக்கள் இருந்தும்கூட, அவுங்களை விட்டுட்டு, அவர் நடிக்கிற பெரும்பாலான சமூகப்படங்களுக்கு ஒங்களைத்தான் எழுதவைக்குறாரு.
 
 
பாசமலர் படத்தோட பெரிய வெற்றிக்கும், சிவாஜி – சாவித்திரியோட சிறந்த நடிப்புக்கும் ஒங்க வசனம் தான் ஒரு முக்கிய காரணம்னு பத்திரிகை விமர்சனங்கள்ளே படிச்சேன். படம் பாத்த என் நண்பர்களும் இதையேதான் சொன்னாங்க.
 
 
இப்போ ஒங்களுக்கு ஒண்ணு சொல்லப்போறேன். அதாவது நீங்க என் ஆளு இல்லே என்றார்.
 
 
இதைக்கேட்டதும் நான் திடுக்கிட்டு, அண்ணே! என்னண்ணே இப்படிச் சொல்லிட்டிங்க. இதைக்கேக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே. இன்னுமா என்னை நீங்க புரிஞ்சிக்கலே.
 
 
அவர்:– இருங்க, அவசரப்படாதிங்க. நான் சொல்ல வந்ததை இன்னும் முடிக்கலே. அதுக்குள்ளே நீங்க குறுக்கிட்டுட்டீங்க. சொல்லட்டுமா?.
 
 
அப்போ நான் நினைச்சது தப்பு. இப்போ சரியா சொல்றேன். நீங்க சிவாஜியோட ஆளும் இல்லே. (இதைக்கேட்டதும் சட்டென்று குறுக்கிட்டு)
 
 
நான்:– அண்ணே! நீங்க என்ன சொல்றீங்க?
 
 
அவர்:– நீங்க தேவரண்ணனோட ஆளும் இல்லே. தொட்டதுக்கெல்லாம் அன்னையின் அருள்! ஆண்டவரின் ஆசி அப்படின்னு வாய் ஓயாம சொல்லிக்கிட்டே இருக்கீங்களே – அந்த அன்னை மாதாவோட ஆளாகவும் – ஆண்டவர் இயேசுவோட ஆளாகவும் இருந்துதான் செயல்படுறீங்க. எனக்கு நல்லா தெரியும். அதுதான் ஒங்க தொடர் வெற்றிக்குக் காரணம்.அப்படியே கடைசி வரைக்கும் இருங்க. ஒங்க அன்புள்ள அண்ணன் சொல்றேன். தயவு செஞ்சு, தனிப்பட்ட யாரோட ஆளாகவும் இருக்காதீங்க. வேண்டாம். வேஸ்டு! இதை என் அறிவுனால இல்லே  – அனுபவத்துனாலே சொல்றேன்”.
 
 
இதைக்கேட்ட மாத்திரத்திலேயே என் எதிரில் அமர்ந்திருந்த அவர் மடி மீது விழுந்து விம்மி விம்மி, கேவிக்கேவி, குமுறிக் குமுறி அழுதேன்.
 
 
அவர் என் முதுகை மெதுவாகத் தடவிக் ;கொடுத்தார். அழுது முடிந்து நிமிர்ந்து பார்த்தேன்.என் முதுகை அன்புடன் தடவிக்கொடுத்தது, எம்.ஜி.ஆர். அல்ல – அவர் உருவில் வந்த என் மாதா! ஆம், தேவமாதா!
 
 
-கலை வித்தகர் ஆரூர்தாஸ் 7-9-2013 தினந்தந்தி
தகவல்:-விஜயலட்சுமி

நன்றி : chennaicitynews.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *