முக்கிய செய்திகள்

கைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை : கமல்ஹாசன்..

நாதுராம் கோட்சே குறித்த தமது கருத்தில் தவறில்லை என கூறியுள்ள கமல்ஹாசன், கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என தெரிவித்துள்ளார்.

தம்மை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், கைது செய்யாமலிருப்பதுதான் நல்லது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், நாதுராம் கோட்சே குறித்த கருத்து தாம் ஏற்கெனவே மெரினாவில் பேசியதுதான் என்றும்,

அப்போது அங்கு எல்லா மதத்தவர்களும், எல்லா இனத்தவர்களும் இருந்தார்கள் என்றும் விளக்கம் அளித்தார். தற்போது தமது பேச்சால் சமூக பதற்றம் உருவாகவில்லை என்றும்,

அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என்றும் கமல்ஹாசன் கூறினார். ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு

சரித்திரம் பதில் சொல்லும் என குறிப்பிட்ட கமல்ஹாசன், எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உண்டு என்பதைத்தான் சரித்திரம் காட்டுகிறது என கூறினார்.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதவில்லை என தெரிவித்த கமல்ஹாசன், ஏவிவிடப்பட்ட சிலர்தான் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டார்.

நாக்கை அறுக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி கூறியது, அவரது குணாதிசயத்தை காட்டுவதாகவும் கமல் பதிலளித்தார்.

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படும் அளவுக்கு சூலூரில் பதற்றம் இருந்தால் ஏன் அங்கு தேர்தலை தள்ளிவைக்கக் கூடாது? என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.