ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர்.

23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தது. 43 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் 11 தங்கப் பதக்கங்களுடன் பஹ்ரைன் முதலிடத்தைப் பிடித்தது. சீனா, ஜப்பான் அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக 42 பேர் கொண்ட இந்திய அணி சென்றிருந்தது. இதில் குண்டெறிதல் பிரிவில் தேஜிந்தர்சிங் (Tejinder Pal Singh Toor) தங்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த கோமதி 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளாவைச் சேர்ந்த சித்ரா 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தில் வந்து தங்கம் வென்றார்.

இந்தியா 3 தங்கம் 7 வெள்ளி 7 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.