ஆசிய விளையாட்டு: 800 மீ.ஓட்டத்தில் தங்கமும், வெள்ளியும் இந்தியாவுக்கே..


ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில், இந்திய வீரர்கள் மன்ஜித் சிங் தங்கப்பதக்கத்தையும், ஜின்ஸன் ஜான்சன் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்க வேட்டை 9 பதக்கங்களாக உயர்ந்துள்ளது. தடகளத்தில் 3 தங்கமும், 7 வெள்ளியும் அடங்கும்.

800 மீட்டர் தொலைவையும் மன்ஜித் சிங் ஒரு நிமிடம், 46 வினாடிகள், 15 மைக்ரோ வினாடிகளில் கடந்து தங்கத்தைக் கைப்பற்றினார். சர்வதேச போட்டிகளில் மன்ஜித் சிங் பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

இதற்கு முன் தேசிய அளவில் 800 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீராம் சிங் ஒரு நிமிடம் 46 வினாடிகள் 35 மைக்ரோ வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. அதை இப்போது மன்ஜித் சிங் முறியடித்துள்ளார்.

ஜின்ஜன் ஜான்ஸன் வெள்ளிப்பதக்கத்தையும், கத்தார் நாட்டு வீரர் அப்துல்லா அபுபக்கர் ஒருநிமிடம் 46 வினாடிகள் 18 மைக்ரோ வினாடிகளில் கடந்து வெண்கலத்தையும் வென்றார்.

‘குராஷ்’ மல்யுத்தம்

ஆசிய விளையாட்டில் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெள்ளியையும், வெண்கலத்தையும் வென்றனர்.

மகளிருக்கான 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில், இந்திய வீராங்கனை பிங்கி 0-10 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை குல்நர் சுலேமனோவாவிடம் தோல்வி அடைந்தார்.இதன் மூலம் பிங்கி வெள்ளி வென்றார்.

முன்னதாக 52 கிலோ எடைப்பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் வீராங்கனை சுலேமனோவாவிடம் 0-10 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை யல்லப்பா தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

குராஷ் மல்யுத்தம் என்பது, பழங்கால மல்யுத்த முறையாகும். இதில் போட்டியாளர்கள் துண்டு வைத்துக் கொண்டு எதிர் வீரர்களின் பாதத்தில் வீசி அவர்களை விழச் செய்யும் முறையாகும். இந்த ஆண்டுதான் ஆசிய விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.