முக்கிய செய்திகள்

“அசுரவதம்” : திரை விமர்சனம்..

“அசுரவதம்” திரை விமர்சனம்..


சசிகுமார் படம் என்றாலே தென் தமிழக ரசிகர்களுக்கு விருந்துதான். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வரவேண்டியவர் சசிக்குமார். ஆனால், ஹீரோ வேஷமிட்டு இன்று வரை தான் இயக்குனர் என்பதையே மறந்து முழு நேர ஹீரோவாகிவிட்டார், ஆனால், ஆரம்பித்தில் இவரின் ஹீரோ அவதாரத்தை ரசிகர்கள் ரசித்தாலும், ஒரே டெம்ப்ளேட் கதையால் கொஞ்சம் ரசிகர்களை சோதித்தார், இந்நிலையில் தற்போது முற்றிலும் வேறு தளத்தில் மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த அசுரவதம் அவருக்கு கைக்கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்கரு

படத்தின் முதல் காட்சியில் இருந்தே ஒருவரை கொல்ல சசி முயற்சி செய்துக்கொண்டே இருக்கின்றார். அவருக்கு அவ்வபோது சாவு பயத்தை காட்டி வருகின்றார் சசி.

ஆனால், அவர் எதற்காக அவரை கொல்ல முயற்சிக்கின்றார் என்பதை படத்தின் கடைசி வரை சொல்லாமல், கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டாக இயக்குனர் ஓபன் செய்கின்றார். இது தான் அசுரவதம் படத்தின் கதை.

படம் பற்றி ஒரு பார்வை

சசிக்குமார் படம் என்றாலே வெட்டு, குத்து, இரத்தம் என தெறிக்கும், அதற்கு எந்த விதத்திலும் இந்த படம் குறை போகவில்லை, படம் முழுவதும் ஒருவரை கொலை செய்ய போய், பல பேரை வெட்டி கொல்கின்றார், எப்போதும் சசிக்குமாரிடம் ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்களோ அதே நடிப்பை தான் இதிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் வில்லனாக வரும் வசுமித்ரா இவர் தான் படத்தின் மொத்த பலமும், ஏனெனில் அவரை சுற்றி தான் கதையே நகர்கின்றது, வில்லன் என்றாலே 10 பேரை அடிப்பது, 20 பேரை கொல்வது என்றில்லாமல் தன்னை ஒருவன் கொல்ல வருகின்றான் என தெரிந்து பயந்து ஓடுவது என கொஞ்சம் வித்தியாசப்படுத்தியுள்ளனர்.

படத்தின் டுவிஸ்ட் மிகவும் பாதிக்கின்றது, நாட்டில் நடக்கும் கொடூர விஷயங்களை இயக்குனர் கண்முன் கொண்டு வந்துள்ளார், அதே நேரத்தில் இப்படி ஒரு தவறு செய்பவன் இனி அந்த தவறை நினைத்துக்கூட அவன் பார்க்க கூடாது, அல்லது மற்றவர்கள் செய்ய பயப்பட வேண்டும் என்பது போல் ஒரு கிளைமேக்ஸ் இருந்திருக்க வேண்டும் அல்லவா, இதில் இப்படி செய்வதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் சசி என்று தான் கேட்க தோன்றுகின்றது.

படத்தின் மற்றொரு மிகப்பெரும் பலம் கதிரின் ஒளிப்பதிவு தான், நம்மை காட்சியில் ஒன்றி பார்க்க வைக்கின்றார், அதே போல் ஸ்டெண்ட் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றது, கோவிந்த் மேனன் பின்னணி இசையில் காட்சிக்கு வலு சேர்த்துள்ளார்.

ப்ளஸ்

படத்தின் கதைக்களம், நாட்டில் நடக்கும் அதுவும் அன்றாட நாம் செய்தியில் பார்க்கும் விஷயத்தை தைரியமாக சொன்ன விதம். நமக்கே கொஞ்சம் மனம் பதறுகின்றது.

வில்லனாக நடித்த வசுமித்ரா

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, ஸ்டெண்ட் என ரசிக்க வைக்கின்றது. படத்தின் முதல் மணி நேர விறுவிறுப்பு.

மைனஸ்

படத்தின் கதை தற்போதைய சமூகத்திற்கு தேவையானது என்றாலும், அதை முழுவதும் விறுவிறுப்பாக கொண்டு செல்லாதது.

அதிலும் கிளைமேக்ஸ் இப்படியான கதைக்கு எத்தனை அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் அது மிஸ்ஸிங்.
மொத்தத்தில் நாம் முதலில் கூறியபடி சசிகுமார் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து தான்