காஞ்சிபுரத்தில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
37வது நாளான இன்று வெள்ளை, நீல நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதரைக் காண காலை முதலே கூட்டம் அலைமோதியது.
மாலை நெருங்க, நெருங்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வெளியூர் வாகனங்கள் நகர எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
மாலை ஆறு மணியுடன் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
வரும் 17ஆம் தேதியுடன் அத்திவரதர் வைபவம் நிறைவடையவுள்ள நிலையில், 16 மற்றும் 17ஆம் தேதிகளில் சிறப்பு தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை என்ற நிலையில் அடுத்த 16, 17 தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் கூடுதலாக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்