ஆடியோ விவகாரம்; ‘தினகரனைச் சார்ந்தவர்கள் சதி’; சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்- அமைச்சர் ஜெயக்குமார்…

ஆடியோ விவகாரம் குறித்து வாய் திறந்த அமைச்சர் ஜெயக்குமார் அது தனது புகழுக்கு களங்கம் விளைவிக்க தினகரனைச் சார்ந்தவர்கள் செய்யும் சதி என்றும், இதை சட்டப்படி எதிர்க்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று வாட்ஸ் அப் மற்றும் வலைதளங்களில் இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதில் ஒரு பெண், அமைச்சர் ஜெயக்குமாருடன் உரையாடுவது போன்று உரையாடல் அமைந்திருந்தது.

 

அதில் உங்களைப் பார்க்க என் மகளை அழைத்து வந்தேன் இப்படிச் செய்துவிட்டீர்களே, இப்போது 1.5 மாதம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்று பேச கருவைக் கலைக்க பணம் தாருங்கள் என்று கேட்கிறார். வந்து வாங்கிக்கம்மா என்று கூறுவதுபோல் அந்த ஆடியோ உரையாடல் முடியும்.

அடுத்த ஆடியோவில் கருவைக் கலைக்கும் விஷயம் வீட்டு ஆண்ககளுக்குத் தெரிந்துவிட்டது. உங்களைப் பார்க்கணும் என்று சொல்கிறார்கள் அழைத்து வரவா? என்று அந்தப்பெண் கேட்பதும், அதெல்லாம் வேண்டாம் நீங்கள் தனியாக வீட்டுக்கு வாங்கம்மா? என்று பதிலளிப்பதும். இல்லீங்க நீங்க கலைப்பதோடு ஒதுங்கிக் கொள்வீர்கள், அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்யும் செலவு எல்லாம் இருக்கு என்று சொல்ல போனில் அனைத்தையும் சொல்ல முடியாது நேரில் நீங்க மட்டும் தனியாக வாருங்கள் என்று ஆண் குரல் பதிலளிக்கும்.

அமைச்சர் ஜெயக்குமார் குரல் போன்று அந்த ஆடியோவில் குரல் இருப்பதும், அதனுடன் மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் ஒன்றும் அதில் ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது போன்றும், அதில் தந்தை என்ற இடத்தில் ஜெயக்குமார் பெயரும், தாய் என்கிற இடத்தில் ஒரு பெண்ணின் பெயரும் குறிப்பிடப்பட்டு அமைச்சர் ஜெயக்குமார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வைரலானது.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது:

“அந்தக் கும்பல் கடுமையாக என்னை எதிர்ப்பதற்காக என் மீது அரசியல் காழ்புணர்ச்சியோடு ஒரு நட்சத்திர விடுதியில் நான் யாருடனோ இருப்பது போன்று மார்பிங் செய்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் உலாவ விட்டனர். இது எனது கவனத்திற்கு வந்து சைபர் கிரைமில் புகார் அளித்து மூன்று பேரைக் கைது செய்து சிறையிலடைத்தோம்.

அதன் பின்னர் சிலகாலம் அடங்கி இருந்த அந்தக் கும்பல் அதில் தோல்வி அடைந்தவர்கள் தொடர்ச்சியாக என்னை எதிர்க்கின்ற காரணத்தினால், அந்தக் குடும்பத்தை முழுமையான அளவிற்கு நான் எதிர்க்கின்ற காரணத்தினால் என்னை நேரடியாக எதிர்க்க திராணியற்றவர்கள் வாய்ஸ் ஒன்றை ஆடியோ மார்பிங் செய்து போட்டுள்ளனர்.

இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதன் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்திற்கு முன் பதில் சொல்ல வேண்டியவர்கள். சட்டப்படி அதனை எதிர்க்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன்.

ஏனென்றால் அதை வாட்ஸ் அப்பில், முகநூலில் பதிவு செய்தவர்கள் நிச்சயம் அந்தக் கும்பல் தான். ஏனென்றால் தனியார் தொலைக்காட்சிகள் சிலவற்றில் ஒரு மாதம் முன்னரே இதுபோன்ற ஆடியோ இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு இவர்கள் போலியாகத் தயாரிப்பதில் வல்லவர்கள் என்று பாருங்கள்.

அந்தக் கூட்டமே பிராடு, சீட்டிங் கூட்டம். இந்த சிறு நரிகளுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல சிங்கக்கூட்டம் நாங்கள். எந்த ஒன்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் முன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை அவர்களும் எதிர்கொள்ள வேண்டும்.”

நீங்கள் வழக்கு தொடர்வீர்களா?

கண்டிப்பாக வழக்கு தொடருவேன். போலீஸில் புகார் அளிப்பேன்.

யார் அந்தக் குடும்பம்?

உங்களுக்கே தெரியும். உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா? அது வெளிப்படையாகத் தெரியும். சசிகலா குடும்பம், தினகரனைச் சார்ந்தவர்கள். இவர்கள்தான் அந்த மாஃபியா கும்பல். இவர்கள் குடும்பத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

எதிர்ப்பது என்றால் என்ன ஒட்டுமொத்த கட்சிக்காரர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறேன் அவ்வளவுதான். அதற்காக என்மீது ஒரு அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்ற ஆடியோவை வெளியிடுகின்றனர். நிச்சயமாக அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

நீங்கள் அப்படிப்பட்ட உரையாடல் எதிலும் ஈடுபடவில்லையா?

நிச்சயமாக இல்லை, சாலஞ்ச் செய்து சொல்வேன்.

பிறப்புச் சான்றிதழில் உங்கள் பெயர் உள்ளதே?

அதில் உங்கள் பெயரைக்கூட போட்டுக்கொள்ளலாமே. அதில் என் கையெழுத்தா உள்ளது.

உங்கள் பெயரைப் போட்டு இவ்வாறு கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

நீங்கள் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். டி.ஜெயக்குமார் என்று நான் ஒருவன் தானா இருக்கிறேன். கெசட்டில் எடுத்துப் பாருங்கள் ஆயிரம் பேர் இருப்பார்கள். இதில் ஸ்டாலின் பெயரைக்கூட போடலாம், கேள்வி கேட்கும் உங்கள் பெயரைக்கூட போடலாம்.

ஆகவே இது திட்டமிட்ட சதி. களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படுபவர்கள் சதி. 1982 லிருந்து நான் சந்திக்கிறேன்.

ஆடியோ பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?

கண்டிப்பாக அனைத்து சோதனைகளுக்கும் நான் தயார்.

18 எம்.எல்.ஏக்களை குற்றாலத்தில் தங்க வைக்கிறார். ஈபிஎஸ் அவர்களை குறிவைப்பதால் இவ்வாறு செயல்படுவதாகக் கூறுகிறார்களே?

ஒளிந்திருந்து ஒரு கிரிமினல் வேலை செய்வதில் தினகரனுக்கு நிகர் தினகரன்தான், சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் தடைபடுமா? நிச்சயம் நம் இயக்கத்தைக் காக்க அவர்கள் திரும்புவார்கள்.

இப்போது சசிகலாவைச் சந்திக்க ஜெயிலுக்குப் போய் இருக்கிறார். அடுத்து முன்னோட்டமா பெரா ரெடி ஆயிடுச்சு, அடுத்து நான் வருவேன் என்று சொல்லப் போயிருக்கிறார்.

ஆடியோ பற்றி சொன்னீர்களே…எம்.பி.க்கு தம்பி பாப்பா பொறந்திருக்குன்னு சொன்னீர்களே நீங்கள் ஏன் அவர்கள் மீது நடவடிக்கைக்கு செல்லவில்லை?

அவர்கள் என் பெயரைச் சொல்லவில்லையே? சொல்லாதபோது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நான் ஏன் போய் சொல்லணும். தெருவில் போகிற வருபவர்கள் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? வரட்டும் முறையாக நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பில்டர் காபி.. : சுந்தரபுத்தன்

இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம்..

Recent Posts