முக்கிய செய்திகள்

ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை..


டெல்லியில் வரும் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் 72-வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சுமார் 600 தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த சூழ்நிலையில், மத்திய உளவு அமைப்புகள் முக்கிய தகவல் அடங்கிய அறிக்கையை பாதுகாப்புப் படையினரிடம் சமர்ப்பித்துள்ளன.

அதில், ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் ரவுப் அஸ்கரின் முன்னாள் பாதுகாவலர் முகமது இப்ராஹிம் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இப்ராஹிம் கடந்த மே மாதம் முதல் வாரத்திலேயே காஷ்மீருக்குள் நுழைந்துவிட்டதாகவும் இப்போது டெல்லியில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத் துறை அறிக்கை கூறுகிறது.

மேலும் ஜேஇஎம் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபரான உமரும் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடு களை அவர் செய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மசூத் அசாரின் சகோதரரும் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளின் தளபதியு மான அஸ்கர் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.