ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அ.தி.மு.க.வின் கட்சி பதவியிலிருந்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களை நீக்கியும், பதவிகளை பறித்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, “ஆறு மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு 9 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள்.” என்று பதிவிட்டு அந்தப் பதிவில் முதல்வரையும் துணை முதல்வரையும் ஆண்மையற்ற தலைவர்கள் என்று விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, அவருக்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் பதிவிற்கு பதிலளித்த அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், “வார்த்தைகளை கவனமாக பேசுங்கள். மற்றவர்களை கேவலமாக விமர்சிக்க நீங்கள் என்ன சாதித்துவிட்டீர்கள்? நோட்டாவை விட பா.ஜ.க ஏன் குறைவான வாக்குகள் பெற்றது என்பதை சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து கூறியதாவது:-
ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. ஆண்மை இல்லாதவர்கள் அதைபற்றி பேசுவார்கள். இவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை பேசுவது ஜனநாயகத்தில் வெட்கி தலை குனிய வேண்டியது.
ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா? எதற்கும் ஒரு எல்லை உண்டு. அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர். எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும்.ஆடிட்டர் குருமூர்த்தி படித்த முட்டாள் . தடித்த வார்த்தை கூற கூடாது, அப்படி இல்லையென்றால் நாங்கள் நூறு வார்த்தை சொல்வோம். அவசியம் ஏற்பட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என கூறினார்.
ஜெயக்குமார் பேட்டியை அடுத்து கருத்து தெரிவித்துள்ள குருமூர்த்தி, “ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அரசுக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன் என்ற தவறான எண்ணத்தை நீக்கியதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி. ஒரு எழுத்தாளராக கட்சிகள் குறித்து எனது கருத்துக்களை, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொடர்ந்து சொல்வேன். அதிமுக தலைமை பலவீனமானது என்ற எனது கருத்து புதிதல்ல, இதனை வார இதழில் நான் தொடர்ந்து எழுதி வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.