கலைஞரின் அரசியல் பயணம் என்பது, பூக்களால் நிரப்பப்பட்ட ராஜபாட்டை வழியாக நிகழ்ந்ததல்ல. கற்களும், முட்களும் நிறைந்த கரடு, முரடான காட்டுப்பாதையாகவே அது இருந்தது. பெரும்பாலும் எதிர்ப்புகளை மட்டுமே எதிர் கொண்டு முன்னேறிய தருணங்கள்தான் அவர் வாழ்வில் அதிகம். அரசியலில் அவருக்கு நேர்மறையான நண்பர்களோ, சூழல்களோ பெரிய அளவில் அமைந்ததில்லை. அவர் தம்மைப் பற்றி அடிக்கடி, ‘நெருப்பாற்றில் நீந்தி வந்தவன் நான்’ எனக் கூறிக்கொள்வதன் உட்பொருளும் கூட இதுதான்.
அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சர் பதவியில் அமரும் வாய்ப்பு, கலைஞருக்குக் கிடைத்தாலும், அதற்கு அடுத்த காலக்கட்டம் அவருக்கு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது. 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியமைத்தது. ஆனாலும், திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர், கருணாநிதிக்கு கடுமையான சவாலாக உருவெடுத்தார். இந்திராகாந்தி அமல் படுத்திய அவசரநிலையைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர், திமுக மீது பல்வேறு ஊழல்புகார்களை எழுப்பினார். ஆளுநரிடம் ஊர்வலமாகச் சென்று திமுக மீதான ஊழல்புகார்களைப் பட்டியலிட்டு மனுவாக அளித்தார். ஒருபக்கம் ராஜாஜியும், மற்றொரு பக்கம் இடதுசாரிகளும் எம்ஜிஆருக்கு உதவினர் திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் கனவு எளிதிலேயே நிறைவேறியது. இந்தியாவின் பெருவாரியான தலைவர்களும் அவசர நிலைக்கு அடிபணிந்த போதும், கலைஞர் உறுதியோடு எதிர்த்து நின்றார். அவரது அந்த அரசியல் உறுதியே, அவசர நிலைக்காலத்தில் திமுக அரசு கலைக்கப்பட காரணமாகி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு தடைவிதிக்கப் போவதாக இந்திராகாந்தி விடுத்த மிரட்டலுக்கு அஞ்சி, எம்ஜிஆர் தனது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். கலைஞர்கருணாநிதியோ, இந்திராகாந்தியின் அந்த மிரட்டலுக்கும் அஞ்சவில்லை. திமுகவின் மூத்த தலைவர்களும், மு.க.ஸ்டாலின் உட்பட கட்சியின் முன்னணியினரும் சிறைக்கொடுமையை அனுபவித்த நிலையிலும், திராவிட முன்னேற்றக் கழகமாகவே அக்கட்சி நீடித்தது.
அதற்குப் பின்னர் சுமார் 13 ஆண்டுகள் கலைஞரின் தலைமையில் திமுக எதிர்க்கட்சியாகவே தனது அரசியல் பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எதிர்ப்புகளை உள்வாங்கிச் செறித்தே வளர்ந்த கலைஞருக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அரசியல் நடத்தும் லாவகம் இயல்பாகவே வாய்த்திருந்தது. வெற்றிப் பல்லக்கில் ஊர்வலம் வருவதற்கு பெரிய சாதுர்யங்கள் தேவையில்லை. தோல்விகளின் ஊடே தொடர்ந்து பயணிப்பதற்குத்தான் தொய்வடையாத மனமும், வலிமையும் தேவை. அத்தகைய வலிமையை கலைஞருக்கு அவர் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தில் இருந்த தெளிவும், தீர்க்கமும் அதிகமாகவே தந்திருந்தன. எம்ஜிஆர் மறைவை அடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த போதும், முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையிலேயே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவில் இருந்த வைகோ யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்கு சென்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டு வந்தது, சென்னையில் இருந்த ஈபிஎல்எஃப் தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தூபம் போடும் நிகழ்வுகளாக அமைந்தன. சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசும், அதன் அமைச்சரவையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமியும் சேர்ந்து, திமுக விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாகக் கூறி ஆட்சியைக் கலைக்க அறிக்கை தருமாறு அப்போது ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். சுர்ஜித்சிங் அதற்கு மறுத்துவிட்டார். அதனையும் மீறி, கலைஞர் தலைமையிலான திமுக அரசைக் கலைத்தது சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு. ஆளுநர் அறிக்கையும், பரிந்துரையும் இல்லாமலேயே மாநில அரசை, மத்திய அரசால் கலைத்துவிட முடியும் என்ற ஆபத்தான புதிய அத்தியாயம், சந்திரசேகர் அரசின் அந்த நடவடிக்கை மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இப்படி பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது அவரது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டாலும் கூட, அதனைக் கண்டு களைத்தோ, சளைத்தோ போய்விடாமல், அவருக்கே உரிய போர்க்குணத்தோடு அரசியல் வாழ்வை சற்றும் தொய்வின்றித் தொடர்ந்து வந்தார் கலைஞர்.
Avarthan Kalaingar – 1: Chemparithi