அவர்தான் கலைஞர் -2: செம்பரிதி

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் பேராளுமை, புராணிக இருட்டைக் கீறிப் பிளந்து சிவப்புப் பகலவனாகக் கிளர்ந்தெழுந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர், கனித்தமிழில் கனல் நிரப்பித் தெறிக்க வைத்த வசன விற்பன்னர்… என்பவற்றையெல்லாம் விட, தமிழ்ப்பற்றாளர் என்ற தனித்த அடையாளமே திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை, வெகுமக்கள் மன உலகில் வேர்பிடிக்கச் செய்தது.

எங்கும் தமிழ்… எதிலும் தமிழ் என்ற திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான முழக்கத்தை, தமிழக அரசின் முழக்கமாகவே மாற்றினார் கலைஞர்.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போதெல்லாம் தமிழ் சார்ந்தும், அதன் வளர்ச்சி சார்ந்தும் சிந்தித்துச் செயலாற்ற அவர் தவறியதே இல்லை. அத்தகைய தமிழ் வளர்ச்சிக்காக அவர் வகுத்து நடைமுறைப் படுத்திய திட்டங்களில் குறிப்பிடத் தக்கவற்றை பற்றிப் பார்க்கலாம்…

‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் இனிய பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களிலும், கல்வி நிலையங்களிலும் பாட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.

தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறைக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி, 2006ஆம் ஆண்டு நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்த போது, அதனைத் தீவிரமாக செயல்படவும் வைத்தார் கலைஞர்.

1974ஆம் ஆண்டு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவி, அதற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரை இயக்குநராக நியமித்தார்.

1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசினர் கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் நூலகத்தை, குளிர்பதன வசதியுடன் பாதுகாக்க வசதி செய்து, நுண்படச் சுருளில் பதிவு செய்யவும் கலைஞர் நடவடிக்கை எடுத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மொரீசியஸ், ரீயூனியன், டர்பன், மடகாஸ்கர் ஆகிய பகுதிகளில் அஞ்சல் வழித் தமிழ்க் கல்வியைத் தொடரவும், மொரீசியசில் உள்ள மகாத்மா காந்தி நிலையம் இதன் தொடர்பகமாக விளங்கவும்ஏற்பாடுகள் செய்தார்.

தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழைக் கட்டாயமாக்கினார். இதன் மூலம், அரசின் ஆணைகள் தமிழில் வெளியிடப்பட்டதுடன், அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற நிலையும் உருவானது.

மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர்மாற்றிய பெருமை அண்ணாவுக்கு உண்டென்றால், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த மாநகரின் பெயரை சென்னை எனப் பெயர்மாற்றம் செய்த பெருமை கலைஞர் கருணாநிதியையே சாரும். 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கர்நாடகம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் உள்ள குப்பம் என்ற ஊரில் 1997ம் ஆண்டு திராவிடப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க நடவடிக்கை எடுத்தார். ஆட்சி மாற்றத்தால் முடங்கிக் கிடந்த அந்த பல்கலைக்கழகத்தை, மீண்டும் 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது உரிய நிதி ஒதுக்கி உயிர்பெறச் செய்தார்.

அரசுப் பேருந்துகளில் திருக்குறளை இடம்பெறச் செய்த அண்ணாவின் நடவடிக்கையை அடியொற்றி, அரசு அலுவலகங்களில் திருக்குறளை கரும்பலகைகளில் எழுதி வைக்க ஆணை பிறப்பித்தார்.

நான்கு ஆண்டுகள் முழுமையாக தமிழ் மட்டுமே படித்தாலும் அதற்கு புலவர் என்ற பட்டயத் தகுதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனால் தமிழகத்தில் தமிழ் படித்தவர்கள், அரசின் உயர்பதவிகளைப் பெற முடியாத நிலை இருந்து வந்தது. அந்நிலையை மாற்றி, மூன்று ஆண்டுகள் தமிழ் மட்டுமே பயில்வதற்கான பிலிட் இளங்கலைப் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தினார். முன்னரே புலவர் பட்டயம் பெற்றவர்களும் சில தாள்களை மட்டுமே எழுதி  பிலிட் பட்டத்தைப் பெற வழிவகை செய்தார். இதன் மூலம், தமிழாசிரியர்களும் தலைமையாசிரியர்களாக, கல்வி அதிகாரிகளாக உயர வாய்ப்பும், வழிவகையும் ஏற்பட்டது.

நவீன தொழில் நுட்பத் தளத்தில் தமிழ் மொழியின் புழக்கத்தை எளிமைப் படுத்தும் வகையில்,1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை  தமிழக அரசுசார்பில் நடத்தினார் கலைஞர் கருணாநிதி. கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும்ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தில் கருணாநிதி அனுப்பிய தமிழ் வாழ்த்துச் செய்தியே முதல் வாழ்த்துச் செய்தியாகும்.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்த தருணத்தில், மைய அரசை வலியுறுத்தி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி.

அதன் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு ஜீன் மாதம், கோவையில் உலக செம்மொழி மாநாட்டையும் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சராக முன்னின்று பிரம்மாண்டமான வகையில் நடத்தி முடித்தார்.

ராஜராஜசோழ மன்னனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கடந்த 2010ஆம் ஆண்டு, மிகப்பிரம்மாண்ட விழாவை தமது தலைமையில் நடத்தி முடித்தார். அதில் பல்வேறு கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுடன், மத்திய அரசு சார்பில் நினைவுத் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

பொறியியல் தமிழை வளர்த்தெடுக்கும் வகையில், தமிழிலிலேயே பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமையும், ஒதுக்கீடும் அளிக்க கருணாநிதி நடவடிக்கை எடுத்தார்.

திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால், கேளிக்கை வரி ரத்து என்ற அரசாணையைப் பிறப்பித்தார்.

வணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

இந்து ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என அரசாணை பிறப்பித்தார் கலைஞர் கருணாநிதி.

தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களின் அடிப்படையில் இக்காலத் தேவைக்கேற்பவும், பள்ளி,கல்லூரி மாணவர்கள் பயன் கொள்ளத்தக்க வகையிலும் ஒரு புதிய இலக்கண நூலை எழுதி வெளியிடுவதற்காக வல்லுநர்    குழு ஒன்று அமைக்கப்பட்டு கட்டுரைகள் தயாரிக்க கலைஞர்  நடவடிக்கை எடுத்தார்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழுக்கு செம்மொழித் தகுதி அளிக்க வேண்டும் என்று பரிதிமாற்கலைஞரால் 150 ஆண்டுகளுக்கு முன் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை , 2004 ஆம் ஆண்டு திமுக பங்கேற்றிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நிறைவேற்ற வைத்தது கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளில் ஒன்று. அதனைக் கொண்டாடும் வகையில் 2009ஆம் ஆண்டு கோவையில் பிரம்மாண்டமான முறையில் முதலமைச்சராக இருந்த கலைஞரால் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடும், அதில் பதிவு செய்யப்பட்ட கருத்துருக்களும், கட்டுரைகளும் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகளாக தமிழின் பெருமையை நிறுவி உள்ளன.

இவற்றிற்கெல்லாம் அப்பால், சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் தீட்டிய பூம்புகார் எனும் திரைப்படக் காவியம், திருக்குறளுக்கு பகுத்தறிவுப் பார்வையின் அடிப்படையில் குறளோவியம் என்ற பெயரில் பொருள் எழுதியது என தனிப்பட்ட முறையில் அவர் ஆற்றிய தமிழ் சார் தொண்டுகள் ஏராளம்.

தமிழ் உணர்வையும், கலைஞரையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது என்பதை, அவரது அரசியல் எதிரிகள் கூட அறிவார்கள். அந்த வகையில் தமிழ்சார்ந்து அவர் ஆற்றிய செயற்கரிய சாதனைகளின் பட்டியல் நீளமானது.

 

Avarthan Kalaingar 2: Chemparithi